ஒப்பந்ததாரர்களைத் தேர்வுசெய்வது எப்படி?
நிலம் ஆறு கிரவுண்ட். மறைமலை நகருக்கு அருகில்
ஒப்பந்ததாரர் தேவை’ என்னும் விளம்பரத்தைப் பிரபல நாளிதழ்களிலும்
உள்ளூர் இலவச இதழ்களிலும் கண்டிருக்கலாம். இதன் முழுமையான பொருளை விளங்கிக்கொள்ள
இயலவில்லை எனினும் விசாரித்ததில் ஓரளவு புரிந்துகொள்ள முடிந்தது. ஒன்றரை அல்லது
இரண்டு கிரவுண்ட் வைத்திருப்பவர்கள் அடுக்குமாடிக் குடியிருப்பை அமைக்க
ஒப்பந்ததாரர்களுக்கு அனுமதி கொடுத்தால் அவர்களுக்கு ஓரிரண்டு தளங்கள் கிடைக்கும்.
ஆனால், பெரும் பரப்பு கொண்ட மனையை விற்பவர்கள் லாபத்திலும்
பங்கு பெற முடியும்.
உதாரண சம்பவம்
இதுபோன்று, கூட்டாக இணைந்து செயல்படுகிற
தன்மையில் கட்டாயம் ஏதாவது சிக்கல் வரும். இதை உறுதிப்படுத்துவதுபோல் மூன்று
மாதத்துக்கு முன் பிரபல ஆங்கில ஏட்டில் செய்தியொன்று வெளியானது. மிகப் பிரபல,
பெரிய ஒப்பந்ததாரர் ஒருவர் நில உரிமையாளர் ஒருவருடன் இணைந்து
நூற்றுக்கும் மேற்பட்ட தளங்களை நிறுவியிருக்கிறார். இதில் கவனிக்கப்பட வேண்டிய
அம்சம் என்னவென்றால், ஒப்பந்ததாரர் பிரபலமானவர் என்பதாலேயே,
பல வாடிக்கையாளர்கள் தாமாக வந்து சேர்ந்து முன்பணம்
தந்திருக்கிறார்கள். ஆனால், நில உரிமையாளர் ஒப்பந்ததாரர்
மீது வழக்கு தொடர்ந்ததாகச் செய்தி தெரிவித்தது. காரணம், ஒப்பந்ததாரர்
கையொப்பமிட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கும் அசலாகக் கட்டுகிற தளங்களுக்கும்
நிறைய வேறுபாடு இருந்ததே.
நாலைந்து தளங்கள் எழுப்புவதற்கு ஒப்பந்தம்
போட்டவர்களுக்கே தொந்தரவு ஏற்படுகிறது. கையொப்பமிட்ட புரிந்துணர்வின்படி, கட்டும் தளங்களில் ஒன்றோ இரண்டோ
நிலத்தின் உரிமையாளர்களுக்குக் கிடைக்கத் தாமதமாகிறது.
தேர்ந்தெடுக்கச் சில வழிகள்
இத்தகைய நிலைமையில் ஒப்பந்ததாரரை எப்படித் தேர்ந்தெடுப்பது? அதற்கு நடைமுறைக்கு ஏற்பச் சில வழிகள் உள்ளன:
குறிப்பிட்ட ஒப்பந்ததாரர் பெயரைச் செவி வழிச்
செய்தியாகவோவிளம்பரம் மூலமோ அறிந்து இருப்பீர்கள். அவர் கட்டி முடித்த தளங்களைச்
சென்று பார்வையிடுங்கள். ஓரிரண்டு ஆண்டுக்கு முன் நிறுவப்பட்ட தளவரிசைகளைப்
பார்க்கலாம்.
பொதுவாக எல்லா ஒப்பந்ததாரர்களும் தனி வலைத்தளம்
வைத்திருப்பார்கள். அதில் நிறைய விவரம் கிடைக்கும். அவர் மூலம் கட்டிடம்
கிடைத்துப் பயனடைந்தவர்களிடம் பணிவாகப் பேசினால் தகவல் கிடைக்கும்.
வீடு கட்டும் முறையே மாறிவிட்டது. ஏனென்றால், 30 ஆண்டுக்கு முன், தனி வீடுதான். சாதாரண ஒப்பந்ததாரர் கட்டினால் போதும். இப்போது அப்படியல்ல.
மண்ணின் தரம், தண்ணீர், சுற்றுப்புறம்
போன்ற பல சோதனைகளைச் செய்ய, முறையான பொறியாளர்கள் அவசியம்.
மேலும், சுனாமி, வர்தா போன்ற
அசம்பாவிதங்களைத் தாங்கிக் கொள்கிற அளவுக்குத் தளங்கள் அமையுமா என்பதையும் சோதிக்க
வேண்டும். (2000-க்கு முன் இவை அறிந்திராதவை).
சில தடங்கல்கள் எதிர்பாராத வகையில் வரும். அரசு
மாற்றத்தால் நிலவுகிற தாமதம், தண்ணீர்த் தட்டுப்பாடு, இத்துடன் தற்போதைய
தலைவிரித்தாடும் பிரச்சினை – மணல் பற்றாக்குறை.
இவற்றையெல்லாம் சந்தித்துச் சமாளிக்கிற அளவுக்கு ஒப்பந்ததாரருக்கு மன உறுதியும் பண
பலமும் இருத்தல் அவசியம்.
ஒப்பந்ததாரரிடம் மனையைக் கொடுப்பது, கிட்டத்தட்ட சேலையை
முள்ளிலிருந்து எடுப்பது போலத்தான். கட்டிடம் உறுதியாகவும் இருக்க வேண்டும்.
தொகையும் பட்ஜெட்டுக்கு மேல் போகக் கூடாது.
லலிதா லட்சுமணன்
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 10.06.2017
No comments:
Post a Comment