உச்சவரம்பின்றி ரொக்கமாக வாங்கலாம் பதிவுத்துறை ஐ.ஜி உத்தரவு
கறுப்புப் பணம் கை மாற வாய்ப்பு!
கோவை, :வழிகாட்டி மதிப்பு, 33 சதவீதம் குறைக்கப்பட்டது தொடர்பாக, அனைத்து பதிவு மாவட்ட அலுவலர்களுக்கும் பதிவுத்துறை தலைவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை, பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
தமிழகத்தில், பத்திரப்பதிவுகள் குறைந்து விட்டதாகவும், இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் காரணம் தெரிவித்து, கடந்த 2012லிருந்து நடைமுறையில் இருந்த வழிகாட்டி மதிப்பை, 33 சதவீதம் வரை குறைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, பதிவுத்துறை தலைவர் சார்பில், அனைத்து பதிவு அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது.
கடந்த 8ல், அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையில் (எண்:25735/சி1/2017 நாள்: 08.06.2017), குறைக்கப்பட்ட சந்தை மதிப்பு வழிகாட்டி நடைமுறைப்படுத்துதல் மற்றும் கிரயம், பரிவர்த்தனை, தானம், குடும்ப நபர் அல்லாதவர்களுக்கு இடையேயான ஏற்பாடு ஆவணங்களுக்கு பதிவுக்கட்டணம் உயர்த்துதல் தொடர்பான நெறிமுறைகள் விளக்கப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதிலும் உள்ள, 50 பதிவு மாவட்டங்களுக்கு உட்பட்ட அனைத்து கிராம புல எண்கள் மற்றும் தெருக்கள், நகர்களுக்கும் பொருந்தும் வகையில், இது நடைமுறை படுத்தப்படுகிறது என்று துவங்கும் இந்த சுற்றறிக்கை, மொத்தம், 14 விஷயங்களைக் குறிப்பிட்டு, தனித்தனியாக விளக்கம் அளிக்கிறது.
சீரமைக்கப்பட்ட சதுர மீட்டர் மதிப்பானது, இணையதளத்தில் குறிப்பிட்டிருப்பதைக் கடைபிடிக்க வேண்டும் என, முதலில் கூறியுள்ள பதிவுத்துறை தலைவர், 12 வரையிலான அடுத்தடுத்த வரிசை எண்களில், புதிய வழிகாட்டி மதிப்பை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து தெளிவாக விளக்கிஉள்ளார். இவை அனைத்துமே, ஏற்கனவே உள்ள நடைமுறைகளைக் கடைபிடிப்பதற்கான அறிவுறுத்தலாக உள்ளன.
இதிலுள்ள 13வது வரிசை எண், இந்த சுற்றறிக்கையின் 1 முதல் 12 வரையிலான நெறிமுறைகளை பொது மக்கள் அறியும் வண்ணம், பட்டியலிடப்பட்டுள்ளது. இதை தங்களது எல்லைக்குட்பட்ட சார்-பதிவகங்கள், மாவட்டப் பதிவாளர் அலுவலகம், துணைப் பதிவுத்துறைத் தலைவர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகங்களில், பிளக்ஸ் போர்டு மூலம் விளம்பரப்படுத்த வேண்டுமென்று உத்தரவிட்டு உள்ளது.
கடைசியாக வரிசை எண் 14ல், 'பதிவு பொது மக்களின் நலனை கருதி, சீரமைக்கப்பட்ட வழிகாட்டி மதிப்பு, நடைமுறைக்கு வரும், 9.6.2017 தேதி முதல் 13.6.2017 வரையிலான ஆவணப் பதிவுகளுக்கு, சார்-பதிவாளர்கள் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணங்களை உச்சவரம்பின்றி ரொக்கமாகவும் வசூலிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது' என்று கூறப்பட்டுள்ளது.
இந்த உத்தரவு தான், பதிவுத்துறை அலுவலர்களை மட்டுமின்றி, வருமான வரித் துறையினரையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.கறுப்புப் பணத்தை ஒழிக்க வேண்டுமென்பதற்காகவே, பணமதிப்பு நீக்க நடவடிக்கையை எடுத்த மத்திய அரசு, ரொக்கப் பரிமாற்றங்களைத் தவிர்ப்பதற்கான பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகிறது; மக்களும் அதற்கு பழகி விட்டனர்.
வழக்கமாக, ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக செலுத்தப்படும் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணங்களுக்கு, டி.டி., எனப்படும் வரைவோலைகளே பெறப்படுகின்றன. ஆனால், இப்போது உச்சவரம்பின்றி, ரொக்கமாக வாங்கலாம் என்று பதிவுத்துறை ஐ.ஜி., அறிவித்துள்ளது, கறுப்புப் பணத்தை கை மாற்றுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஆனால், வருமான வரித்துறை வெளியிட்டுள்ள உத்தரவின்படி, இரண்டு லட்சம் ரூபாய்க்கு மேல், எத்தனை லட்ச ரூபாய் ரொக்கமாக பரிவர்த்தனை செய்தாலும், அந்த தொகைக்கு நுாறு சதவீதம் வருமான வரி செலுத்த வேண்டும். இதன்படி பார்த்தால், இரண்டு லட்ச ரூபாய்க்கு மேல் முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக் கட்டணத்தை செலுத்தினால், அதற்கேற்ப வருமான வரியும் செலுத்த வேண்டியிருக்கும்.
உதாரணமாக, ஓரிடத்துக்கு, 10 லட்சம் ரூபாய்க்கு முத்திரைத் தீர்வை மற்றும் பதிவுக்கட்டணம் செலுத்தும் ஒருவர், எட்டு லட்ச ரூபாய் வருமான வரியாகச் செலுத்த வேண்டும்.இதற்கு, வருமான வரித்துறை ஒப்புக் கொள்ளுமா என்பதும் கேள்விக்குறி. ஒருவேளை, அப்படிச் செலுத்துவதற்கு, யாராவது முயற்சி செய்தால், அவர்கள் வருமான வரித்துறையிடம் சிக்குவது நிச்சயம்.
ஏற்கனவே, பணமதிப்பு நீக்க நடவடிக்கையின்போது, கறுப்புப் பணத்தைக் கொண்டு அமைச்சர்கள் போட்ட நில விற்பனை ஒப்பந்தங்களுக்காகவே, வழிகாட்டி மதிப்பு, 33 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதனால், கறுப்புப் பணம் அனைத்தும் அசையா சொத்துக்களாக மாறுமென்றும் சந்தேகம் கிளம்பியுள்ளது; பதிவுத்துறைத் தலைவர் வெளியிட்டுள்ள இந்த சுற்றறிக்கை, இதை மேலும் வலுப்படுத்துகிறது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 11.06.2017
(தினமலர் நாளிதழ் - 13.06.2017 - செய்தி)
No comments:
Post a Comment