disalbe Right click

Saturday, June 10, 2017

குதுப்மினார்

Image may contain: text
குதுப்மினார்
மகாபாரத காலத்தில் துவங்கி இன்றுவரை சுமார் 3000 ஆண்டுகால வரலாற்றை கொண்டிருக்கும் நகரம் இந்திரப்பிரஸ்தம் என்றழைக்கப்பட்ட நவீன இந்தியாவின் தலைநகரான டெல்லி ஆகும்.
இந்த வரலாற்று காலம் நெடுகவும் அதிகாரத்தின் அடையாளமாக இருந்திருக்கிறது இருந்துவருகிறது டெல்லி. எத்தனையோ போர்கள், சதிகள், முற்றுகைகள், கவிழ்ப்புகளை சந்தித்திருக்கும் இந்நகரம் இன்று வரலாற்று பாரம்பரியம் கொண்ட பழமையான பாரதத்திற்கும் தொழில்நுட்ப வளர்ச்சி, ஆடம்பர மேற்கத்திய வாழ்க்கைமுறை கொண்ட நவீன இந்தியாவிற்கும் இடையில் இயங்கும் ஒரு கலாச்சார தொட்டிலாக இருக்கிறது.
இந்த நகரத்தின் நீண்ட நெடிய வரலாற்றுக்கு அத்தாட்சியாக வானுயர நிற்கும் குதுப்மினார் பற்றி இன்றைய கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் சுற்றுலா பகுதியில் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
குதுப்மினாரின் சிறப்பு:
* 74மீ உயரம் கொண்ட குதுப்மினார் தான் உலகத்திலேயே செங்கற்களால் கட்டப்பட்ட மிக உயரமான தூபி ஆகும்.
 * குதுப்மினார் மற்றும் இதனை சுற்றியிருக்கும் மற்ற வரலாற்று சிதலங்கள் அனைத்தும் யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறது.
யாரால் எப்போது கட்டப்பட்டது?
* கி.பி 1200ஆம் ஆண்டு தில்லி சுல்த்தான் வம்சத்தை தோற்றுவித்தவரான குதுப் உதின் ஐபக் என்பவரால் குதுப்மினார் கட்டப்பட்டிருக்கிறது. இவருக்கு பின்னர் வந்த இல்துமிஷ் என்பவர் கி.பி 1220ஆம் ஆண்டு குதுப்மினாரில் மேலும் இரண்டு அடுக்குகளை கட்டியிருக்கிறார்.
* 1369ஆம் ஆண்டு இடி தாக்கியதன் காரணமாக சிதலமடைந்த குதுப்மினாரை பிரோஸ் ஷாஹ் துக்ளக் என்ற மன்னன் புனரமைத்ததோடு மட்டுமில்லாமல் மேலும் செங்கற்கள் மற்றும் பளிங்கு கற்களை கொண்டு மேலும் இரண்டு அடுக்குகளை புதிதாக கட்டியிருக்கிறான்.
பெயர் காரணம்:
குதுப்மினாருக்கு எப்படி இந்த பெயர் வந்தது என்பதற்கு இருவேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன.
* இதை கட்டுவதற்கு உத்தரவிட்டது குதுப் உதின் ஐபக் என்பதால் அவரின் பெயரில் இருந்து குதுப்மினார் என்று சூட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
* குதுப்மினார் கட்டபப்ட்ட காலத்தில் டெல்லியில் மிகப்பிரபலமாக விளங்கிய சூபி ஞானி குதுபுதின் பக்தியர் காகி என்பவரின் பெயரில் இருந்தும் இக்கட்டிடதிற்க்கான பெயர் வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
கட்டிட அமைப்பு:
*தூபி என்பது இஸ்லாமிய கட்டிடக்கலையின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும். மசூதிகளில் நாம் பார்க்கும் உயரமான தூண்கள் தான் தூபி எனப்படுபவை. அக்காலத்தில் செய்திகளை தெரிவிக்கவும், போர் பற்றிய எச்சரிக்கைகளை அனுப்பவும், தொழுகை செய்வதற்கான நேரம் ஆகிவிட்டதை சுட்டிக்காட்டவும் இந்த தூபிகள் கட்டப்பட்டிருக்கின்றன.
*அப்படிப்பட்ட தூபிக்களில் ஒன்றான குதுப்மினாரில் குரானின் வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இது துருக்கிய மற்றும் பெர்சிய நாட்டு கலை அம்சங்களை உள்ளடக்கிய அழகியதொரு கட்டிடமாக உயர்ந்து நிற்கிறது.
துருப்பிடிக்காத தூண்:
* குதுப்மினார் வளாகத்தில் குப்தர்கள் காலத்தில் நிறுவப்பட்ட இரும்புத்தூண் ஒன்றையும் நாம் காணலாம். இது கிட்டத்தட்ட 2000வருடங்களாக இதே இடத்தில் கொஞ்சம் கூட துருப்பிடிக்காமல் நிற்பது ஒரு அறிவியல் அதிசயமாகும்.
* குதுப்மினார் கட்டப்படுவதற்கு பல வருடங்கள் முன்பிருந்தே இருக்கும் இந்த இரும்புத்தூனில் 'பிராமி' எழுத்துக்குறிப்புகள் காணப்படுகின்றன.
விபத்து:
*அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலையினுள் எப்படி படிக்கட்டுகள் மூலம் அதன் உச்சிக்கு சென்று பார்க்கலாமோ அதுபோலத்தான் குதுப்மினாரின் உள்ளும் அதன் உச்சி வரை மக்கள் சென்று பார்க்க அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
*ஆனால், டிசம்பர்4,1981ஆம் ஆண்டு இதனுள் நடந்த கூட்ட நெரிசலில் சிக்கி நாற்பதுக்கும் அதிகமான மக்கள் பலியாகியிருக்கின்றனர். அதன் பிறகு பொதுமக்கள் இதனுள் சென்றுவர தடைவிதிக்கப்பட்டது.
குதுப் வளாகம்:
குதுப்மினார் இருக்கும் குதுப் வளாகத்தில் அலா இ மினார், குவாத்துல் இஸ்லாம் மசூதி, இமாம் ஜமின் டூம் (கல்லறை), அலாவுதீன் கில்ஜி கல்லறை, சுல்தான் காரி நினைவுச்சின்னம் போன்ற இடங்களும் இருக்கின்றன. 
குதுப்மினாரின் வரலாற்றோடு பின்னிப்பிணைத்த இந்த இடங்களுக்கும் சென்று கட்டாயம் பார்வையிடுங்கள்.

நன்றி : Nativeplanet » Tamil » Travel Guide - 18.12.2015

No comments:

Post a Comment