இந்திய சாட்சியச் சட்டம் மூலம் ஆவண நகல்களைப் பெற.....
(இணைப்பு : மாதிரி கடிதம்)
தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தான் ஆவண நகல்களைப் பெற முடியும் என்பது இல்லை. அந்தச் சட்டம் வருவதற்கு முன்பே இந்திய சாட்சியச் சட்டம் (INDIAN EVIDENCE ACT) நமக்கு அந்த உரிமையை வழங்கியுள்ளது. இதன் மூலம் ஆவண நகல்களை நாம் எப்படிப் பெறலாம் என்பதைப் பற்றி கீழே காணலாம்.
இந்திய சாட்சியச் சட்டம் - 1872
இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 74ல் பொது ஆவணங்களை பற்றி தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 75ல் தனியார் ஆவணங்களை பற்றி தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளது.
இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 76 ஒரு பொது ஊழியரின் வசம் உள்ள பொது ஆவணங்களை ஆய்வு செய்யவும், அவற்றை சான்று ஒப்பம் இட்ட ஆவண நகலாக பெறவும் நமக்கு உரிமையை வழங்கியுள்ளது. அதற்கென்று சட்டத்தில் வரையறை செய்யப்பட்டுள்ள கட்டணத்தை நாம் அவர்களிடம் செலுத்த வேண்டும். சான்றொப்பம் இட்டு ஆவண நகல்களை அளிக்க முடியாவிட்டால், அந்த ஆவண நகல்களின் கீழே உண்மை நகல் என்று கையொப்பம் இட்டு பொது ஊழியர் அதனை நமக்கு வழங்க வேண்டும்.
ஆவண நகல்களைப் பெற என்ன செய்ய வேண்டும்?
சம்பந்தப்பட்ட துறை அதிகாரிக்கு நீங்கள் எழுதுகின்ற விண்ணப்பத்தின் வலதுபுறத்தில் ஐந்து ரூபாய் கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டவேண்டும். தலைப்பில் இந்திய சாட்சியச்சட்டம், பிரிவு 76ன் கீழ் ஆவண நகல்கள் வேண்டி விண்ணப்பம் என்று குறிப்பிட வேண்டும். அந்தக் கடிதத்தில் உங்களுக்குத் தேவையான ஆவண நகல்களைப் பற்றி குறிப்பிட வேண்டும். கடிதத்தை பதிவுத்தபாலில் ஒப்புதல் அட்டை இணைத்து அனுப்ப வேண்டும்.
கடிதம் அனுப்பி 30 நாட்கள் ஆனபிறகும் எந்தவித பதிலும் அவர்கள் உங்களுக்கு தரவில்லை என்றால், ஒரு நினைவூட்டல் கடிதம் ஒன்றை அவர்களுக்கு அனுப்பவேண்டும். அந்த நினைவூட்டல் கடிதம் அனுப்பி 15 நாட்கள் ஆனபிறகும் உங்களுக்கு அவர்கள் தரப்பில் இருந்து பதில் தரவில்லை என்றால், சட்டப்படியான அறிவிப்பு ஒன்றை அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.
அறிவிப்பு அனுப்பி 15 நாட்கள் ஆன நிலையில் குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, பிரிவு : 2(4)ன் கீழ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும். அல்லது குற்ற விசாரணை முறைச் சட்டம் - 1973, பிரிவு : 200ன் கீழ் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மூலம் வ்ழக்கு தொடுத்து ஆவண நகல்களைப் பெறலாம்.
இணைப்பு : முகநூல் நண்பர் திரு Vasu Devan அவர்களின் மாதிரி கடிதம்.
அனுப்புனர்
செ.பெ.வாசுதேவன்
மாநில பொதுச் செயலாளர்
குளோபல் லா பவுண்டேஷன்
(பதிவு எண்:1/Book No:4/262/2018),
...........................................................................
...................................
கரூர் மாவட்டம் - 621311.
பெறுநர்
வருவாய் கோட்டாட்சியர் அவர்கள்
.....................................................................
.....................................................................
.....................................................................
ஐயா,
பொருள்: இந்திய அரசியலமைப்பு சாசனம்-1950, கோட்பாடு 19(1)அ மற்றும் இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவுகள் 74, 76ன் கீழ் நகல்கள் கோரும் மனு.
கீழ்வரும் ஆவணங்களானது இந்திய அரசிலமைப்பு சாசனம் 1950 கோட்பாடு 19(1)அ மற்றும் இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவுகள் 74, 76ன் கீழ் பொது ஆவணங்கள் ஆகும்.
இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவு 74ன் கீழ் அரசுத்துறை அதிகாரத்தின் கீழ் அதன் செயல்முறைகளோடு இணைந்த ஆவணங்கள் அனைத்துமே பொது ஆவணங்கள் எனப்படுகின்றது. அரசு அதிகாரம் பெற்ற குழுக்கள் அல்லது அவற்றின் பதிவேடுகள், அரசு அதிகாரத்தின் கீழ் இயற்றப்பட்ட ஆவணங்கள், பதிவேடுகள், ஆணைகள், அரசிதழ்கள் உள்ளிட்ட பொது ஆவணங்களை பொதுமக்கள் பார்வையிடலாம். அந்த ஆவணத்தின் நகல் ஒன்று தேவைப்பட்டால், உரிய கட்டணம் செலுத்தப்படுவதன் பேரில், அதனை இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவு 76ன் கீழ் மனுதாரருக்கு சம்பந்தப்பட்ட அரசு அதிகாரி வழங்க வேண்டும்.
மேற்கண்டவாறு வழங்கப்படுகின்ற நகலின் கீழ் அப்போது அந்த ஆவணத்தை பாதுகாத்து வருகின்ற பொது அலுவலர் அவர்கள் உண்மை நகல் (True Copy) என சான்றளிக்க வேண்டும். அவரது பெயர், பதவி, சான்றளிக்கப்பட்ட நாள் ஆகியவற்றை குறிப்பிட்டு அவரது கையொப்பமிடப்பட்டு அலுவலக முத்திரை வைக்கப்பட வேண்டும். மேற்கண்டவாறு சான்று அளிக்கப்பட்டு வழங்கப்படுகின்ற நகல்கள் “சான்று அளிக்கப்பட்ட நகல்கள்” எனப்படுகின்றன. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பு எண்:W.P.(C), 210/2012 உத்தரவில், இந்திய சாட்சியச் சட்டத்தைப்பற்றி மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பெறப்பட்ட சான்று நகல்களை இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவு 77ன் கீழ் நீதிமன்றத்தில் தக்க சான்றுகளாக தாக்கல் செய்யலாம் என்பதையும், இவ்வாறு தங்களால் வழங்கப்படுகின்ற தகவல்கள் மற்றும் சான்று நகல்கள் தவறானதாக இருந்தால், இந்திய தண்டணைச் சட்டம் 1860, பிரிவு 166ன் கீழ் கடமை தவறியது மற்றும் ஷை சட்டம் பிரிவு 167ன் கீழ் தவறான ஆவணத்தை உருவாக்கியது என்ற குற்றங்களை தாங்கள் செய்தவர் ஆவீர்கள்! என்பதையும் தங்களது கவனத்திற்கு கொண்டுவர கடமைப்பட்டு உள்ளேன்.
வருவாய்த்துறையில் பணியாற்றி வருகின்ற பணியாளர்கள் தங்களது அன்றாடப் பணிகள் குறித்த முழு விபரங்கள் அடங்கிய நாட்குறிப்பை பராமரித்து வரவேண்டுமென வருவாய் நிலை ஆணைகளின் வழியாக உத்தரவுகள் பிறப்பிக்கப் பட்டுள்ளது. குறிப்பாக, வருவாய் வட்டாட்சியர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் செய்த வேலைகளை காட்டும் நாட்குறிப்பொன்றை பிரதி மாதம் 5ம் தேதிக்குள் வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு அனுப்பவேண்டும் என்று வருவாய்த்துறை அரசாணை (நிலை) எண்:581, நாள்:03.04.1987ல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பதையும். தங்களது கவனத்திற்கு கொண்டுவர கடமைப்பட்டு உள்ளேன்.
- மேற்கண்ட விதிமுறைகளின்படி பழனி வருவாய் கோட்டாட்சியர் அவர்களுக்கு கடந்த 01.01.2017 முதல் 31.03.2017 வரை தங்களால் சமர்ப்பிக்கப்பட்ட நாட்குறிப்புகளின் நகல்களை (Certified Copies) இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவு 76ன் கீழ் வழங்கவும்.
- மேற்கண்ட விதிமுறைகளின்படி பழனி வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் ஆய்வு குறிப்புரையுடன் கூடிய கடந்த 01.01.2017 முதல் 31.03.2017 வரையிலான தங்களின் நாட்குறிப்புகளின் நகல்களை (Certified Copies) இந்திய சாட்சியச் சட்டம்-1872, பிரிவு 76ன் கீழ் வழங்கவும்.
மேற்படி சான்று நகல்கள் நீதிமன்றத்தில் சான்றாவணமாக சமர்ப்பிக்க வேண்டியதிருப்பதால், ஒருங்கிணைந்த விதி 1971ன்படி மிகவும் அவசரமாக 7 தினங்களுக்குள் வழங்கிட கோருகிறேன். இத்துடன் ரூ.5/-க்கான கோர்ட் ஃபீ ஸ்டாம்ப் ஒட்டியுள்ளேன். மேற்கண்ட நகல்களைப் பெற ஏதேனும் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியதிருந்து, அதனை எனக்கு உரிய வழியில் தெரிவித்தால் அதையும் செலுத்த தயாராக இருக்கிறேன் என்பதையும் இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாள் : XX.XX.2019 . இப்படிக்கு
இடம் :
******************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No comments:
Post a Comment