(சட்டப்படி) போயஸ் வீடு யாருக்கு?
செல்வி ஜெ.ஜெயலலிதா…
புரட்சித் தலைவி…
அம்மா… இந்த மாயச் சொற்கள் மட்டுமே கடந்த 30 ஆண்டுகளாக அ.தி.மு.க-வைக்
கட்டுப்படுத்தி வைத்திருந்தன. அ.தி.மு.க கட்சியில், அதன் தலைமையில் அமைந்த ஆட்சியில், ஜெயலலிதாவின் சொந்தக் குடும்பத்தில்
இந்தப் பெயரையும், பட்டங்களையும் தவிர்த்து வேறு எந்தப் பெயரும் ஜொலித்ததில்லை; அதற்கு ஜெயலலிதா ஒருபோதும்
அனுமதித்ததும் இல்லை.
கட்சியின் பொதுச்
செயலாளர் ஜெயலலிதா. அதைத் தவிர்த்து அந்தக் கட்சியின் மற்ற பொறுப்புகள் யாரிடம்
இருக்கின்றன என்பது அர்த்தமற்றதாக இருந்தது. அ.தி.மு.க ஆட்சியில் முதலமைச்சர்
ஜெயலலிதா. அவ்வளவுதான்… அதைத் தவிர்த்து மற்ற எல்லோரும் பூஜ்ஜியங்களே!
ஜெயலலிதா மரணமடைந்த அடுத்த நொடியே நிலைமை மாறத்
தொடங்கியது. கட்சிக்குள் இருந்த ராணுவக் கட்டுப்பாடுகள் தகர்ந்து விழத் தொடங்கின.
ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரி சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு அது
முற்றிலுமாகச் சிதைந்தது. கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் ஆளுக்கொரு அறிவிப்பை
வெளியிடத் தொடங்கினர். அமைச்சர்கள் ஆளுக்கொரு தீர்மானத்தை முன்மொழிந்தனர். இன்னொரு
பக்கம், ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபாவும், தீபக்கும்
தினமும் ஒரு குழப்பத்தை உருவாக்கி வருகிறார்கள். அதன் உச்சகட்டம்தான் கடந்த 11-ம்
தேதி போயஸ் கார்டன் இல்லம் முன்பு நடந்த களேபரங்கள். இந்த நிலையில், ‘போயஸ்
கார்டன் வீடு யாருக்குச் சொந்தம்’
என்ற கேள்விக்கான பதில் இன்னும் குழப்பத்திலேயே
இருக்கிறது.
ஜெயலலிதாவுக்குச்
சொந்தமானவை என்று சொல்லப்படும் பல நிறுவனங்கள், எஸ்டேட்டுகள், சொத்துகள்
வேறு நபர்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஜெயலலிதாவே உயிரோடு
இருந்தால்கூட அவற்றுக்கு உரிமை கொண்டாட முடியாது. ஆனால், போயஸ்
கார்டன் வேதா நிலையத்தைப் பொறுத்தவரை அந்தக் குழப்பமே கிடையாது. அது முழுக்க
முழுக்க ஜெயலலிதாவின் பெயரில்தான் உள்ளது. அந்த இடம் ஜெயலலிதாவின் தாயார் சந்தியா
வாங்கியது. ஆனால், ஜெயலலிதாவின் பெயரில்தான் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின்
சம்பாத்தியத்தில் வந்த தொகையில்தான் வேதா நிலையம் வீடு கட்டப்பட்டது. அதன்பிறகு
அதில் கட்டப்பட்ட புதிய கட்டடம் எல்லாமும் சேர்த்து ஜெயலலிதாவின் பெயரில்தான்
உள்ளது. இந்து வாரிசு உரிமை (அ) இறங்குரிமைச் சட்டம், பிரிவு
15, 16-ன்படி, ஒரு பெண்ணின் சொத்துகள் மகன், மகள் மற்றும் கணவருக்குச்
சமமாகச் சென்று சேரும். மகன் அல்லது மகள் அல்லது கணவர் என்று யாருமே இல்லாதபோது, அந்தப்
பெண்ணின் கணவருடைய வாரிசுகளுக்குச் சென்று சேரும். அதாவது, கணவருடைய
தாய், கணவருடைய வேறு தாரத்தின் பிள்ளைகளுக்குச் சென்று சேரும்.
ஒரு பெண் திருமணம் ஆகாமல்
மரணம் அடையும்போது, அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்குச் சொத்துகள் போகும். பெற்றோர்
இறந்துவிட்டால், பெற்றோரில் தந்தையின் வாரிசுகளுக்கு, அந்தப் பெண்ணின் சொத்து
சென்று சேரும். ஒருவேளை அந்தப் பெண்ணின் தந்தைக்கும் வாரிசுகள் இல்லையென்றால், தாயின்
வாரிசுகளுக்குச் சென்று சேரும். இந்த சட்டங்களின்படி பார்த்தால், ஜெயலலிதாவின்
சொத்துகள், அவருடைய தந்தை ஜெயராமின் மகனான ஜெயக்குமாரின் வாரிசுகளுக்குப்
போகும். அதாவது, ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் பிள்ளைகளான தீபக், தீபா
ஆகியோர் ஜெயலலிதாவின் சொத்துகளுக்கு உரிமை கோர முடியும். அந்தவகையில் தற்போது
போயஸ் கார்டன் வீட்டில் தீபா,
தீபக் இருவருக்கும் பங்கு உண்டு.
ஆனால், மேலே சொன்ன இறங்குரிமை
என்பது, ஜெயலலலிதா தன்னுடைய சொத்துகள் குறித்து உயிலோ, அல்லது
வேறு ஆவணங்கள் எதுவுமோ எழுதி வைக்காமல் இருக்கும் நிலையில்தான் நடக்கும். ஜெயலலிதா
தன்னுடைய சொத்துகளை யாருக்கு வேண்டுமானாலும் உயில் எழுதி வைக்கலாம். அதற்கு
அவருக்கு முழு உரிமை உண்டு. சட்டம் அதற்கு வழி செய்கிறது. அப்படி, ஜெயலலிதா
வேறு யாருக்கும் தன்னுடைய சொத்துகளை உயில் எழுதி வைக்காத நிலையில்தான், அதற்கு
அவருடைய அண்ணன் பிள்ளைகளான தீபக்கும், தீபாவும் உரிமை கோர
முடியும். ஒருவேளை, ஜெயலலிதா உயில் எழுதி வைத்திருந்தால், அந்த
உயிலில் ஜெயலலிதா யாரைக் குறிப்பிட்டுள்ளாரோ அவருக்குத்தான் அந்தச் சொத்துகள்
போய்ச் சேரும்.
ஜெயலலிதா தன்னுடைய சொத்துகள் குறித்து உயில்
எழுதி வைத்துள்ளாரா என்பது பற்றி இதுவரை எந்தத் தகவலும் இல்லை. அப்படி உயில் இருந்தால், அது
குறித்து சம்பந்தப்பட்டவர்கள் வெளியில் சொல்லாதவரை யாருக்கும் தெரிய
வாய்ப்பில்லை. ஆனால், அந்தச் சொத்துக்களை விற்க முயன்றால் அது தெரியவரும்.
ஜெயலலிதாவுக்குச்
சொந்தமாகச் சென்னையில் உள்ள சொத்துக்கள் குறித்து உயில் எழுதப்பட்டு இருந்தால், அந்த
உயில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘புரொபேட்’ செய்யப்பட
வேண்டும். அப்போதுதான், அந்த உயில் செல்லும். உதாரணத்துக்கு, ஜெயலலிதாவுக்குச்
சொந்தமாக போயஸ் கார்டனில் உள்ள வேதா நிலையம் வீடு குறித்து அவர் உயில் எழுதி
இருந்தால், அது சென்னை உயர் நீதிமன்றத்தில் ‘புரொபேட்’ செய்யப்பட
வேண்டும். தனது உயிலைச் செயல்படுத்தும் உரிமையை யாருக்கு ஜெயலலிதா கொடுத்துள்ளாரோ, அவர்தான்
நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும். இதைத் தொடர்ந்து, உயிலில்
இருக்கும் விஷயங்களைப் பொதுமக்கள் அறியுமாறு வெளியிட நீதிமன்றம் ஏற்பாடு செய்யும்.
அதன்மூலம்தான், ஜெயலலிதா அந்த வீட்டை யாருக்கு எழுதி வைத்துள்ளார் என்பதும்
தெரியவரும். ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபக், தீபா தவிர வேறு மூன்றாம்
நபருக்கு (சசிகலா உள்பட) தனது சொத்துகளை ஜெயலலிதா உயில் எழுதி வைத்திருந்தால், தீபக்கும்
தீபாவும் அந்த உயிலின் ‘செல்லும் தன்மை’
குறித்தும், ‘புரொபேட்’ வழங்கக்கூடாது
என்று ஆட்சேபம் தெரிவித்தும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காட முடியும்.
‘போயஸ் கார்டன் தங்களுக்கு மட்டும்தான் சொந்தம்’ என்று
ஜெயலலிதாவின் அண்ணன் பிள்ளைகளான தீபா மற்றும் தீபக் ஆகியோருக்குச் சமீபகாலமாகவே
ஆசை வந்துவிட்டது. கடந்த 11-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை காலையில் திடீரென போயஸ் கார்டனுக்குத் தீபா விசிட்
செய்தார். சொத்து உரிமைக் கோரல் பற்றிப் பேசுவதற்கு அன்று அதிகாலை 5.30 மணிக்கெல்லாம்
தீபக், தனது சகோதரி தீபாவுக்கு போன் செய்திருக்கிறார். அப்போது, “நீ
மட்டும் தனியாகப் போயஸ் கார்டன் வா. சொத்து விவகாரம் உள்பட பல விஷயங்களை
உட்கார்ந்து பேசித் தீர்த்துக்கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார்.
அதனால் தீபாவும் அதிகாலையிலேயே போயஸ் கார்டனுக்குள் வந்தார். இவர் தனியாகத்
தீபக்கைச் சந்தித்துப் பேசும்வரை எவ்விதப் பிரச்னையும் ஏற்படவில்லை.
அதன் பின்னே தீபாவின் கணவர் மாதவனும், தீபா
பேரவை நிர்வாகி ராஜாவும் போயஸ் கார்டனுக்குள் சென்றுள்ளனர். வேதா நிலையத்தில்
இருந்த, சசிகலா மற்றும் சசிகலா குடும்பத்தாரின் புகைப்படங்களை அனைவரும்
சேர்ந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். இதனால் தீபா தரப்புக்கும், வேதா
நிலைய காவலாளிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் தீபா
தரப்பினரைக் காவலாளிகள் வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர். இந்தப்
பிரச்னையின்போது காவலாளிகளை ஏதும் சொல்லாமல், ‘‘உன்னை மட்டும்
தனியாகத்தானே வரச் சொன்னேன். ஏன் இப்படிச் செய்தாய்?’’ எனத் தீபாவிடம்
கேட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார் தீபக். இதையடுத்து தீபா, அவர்
கணவர் மாதவன், தீபா பேரவை நிர்வாகி ராஜா ஆகியோர் வேதா நிலைய
வாசலின் முன் நின்று சசிகலா தரப்பினரைத் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டித்
தீர்த்தனர். ‘‘சொத்துக்கு ஆசைப்பட்டு சசிகலாதான் என் அத்தையைக் கொன்றார். இதற்கு
என் சகோதரனும் உறுதுணையாக இருந்தார்’’ எனக் கூச்சலிட்டார் தீபா.
தொடர்ந்து தீபாவும் மாதவனும் தீபக்கும் ராஜாவும் நடத்திய கூத்துகள், மட்டரகமான
அரசியல் காட்சிகளாக இருந்தன.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று
யார் யாரோ சொல்லிவந்தார்கள். ஆனால், ‘என் அத்தையின் மரணத்தில்
எனக்குச் சந்தேகம் எதுவும் இல்லை’
என அறிவித்து வந்தார் தீபா. இந்தச் சூழலில், தற்போது
முதன்முறையாக ‘ஜெயலலிதாவைத் திட்டமிட்டுக் கொன்றுவிட்டார்கள்’ எனப்
புகார் கூறியிருக்கிறார். ‘அரசியலுக்குள் நுழைவது எப்படி’ என்ற வித்தையை
இப்போதுதான் தீபா அறிந்துகொண்டிருக்கிறார்.
நன்றி : ஜூனியர் விகடன் - 18.06.2017
ஜெயலலிதா மரணமடைந்த அடுத்த நொடியே நிலைமை மாறத் தொடங்கியது. கட்சிக்குள் இருந்த ராணுவக் கட்டுப்பாடுகள் தகர்ந்து விழத் தொடங்கின. ஜெயலலிதாவின் உடன் பிறவாச் சகோதரி சசிகலா சிறைக்குச் சென்ற பிறகு அது முற்றிலுமாகச் சிதைந்தது. கட்சிப் பொறுப்பில் இருப்பவர்கள் ஆளுக்கொரு அறிவிப்பை வெளியிடத் தொடங்கினர். அமைச்சர்கள் ஆளுக்கொரு தீர்மானத்தை முன்மொழிந்தனர். இன்னொரு பக்கம், ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளான தீபாவும், தீபக்கும் தினமும் ஒரு குழப்பத்தை உருவாக்கி வருகிறார்கள். அதன் உச்சகட்டம்தான் கடந்த 11-ம் தேதி போயஸ் கார்டன் இல்லம் முன்பு நடந்த களேபரங்கள். இந்த நிலையில், ‘போயஸ் கார்டன் வீடு யாருக்குச் சொந்தம்’ என்ற கேள்விக்கான பதில் இன்னும் குழப்பத்திலேயே இருக்கிறது.
அதன் பின்னே தீபாவின் கணவர் மாதவனும், தீபா பேரவை நிர்வாகி ராஜாவும் போயஸ் கார்டனுக்குள் சென்றுள்ளனர். வேதா நிலையத்தில் இருந்த, சசிகலா மற்றும் சசிகலா குடும்பத்தாரின் புகைப்படங்களை அனைவரும் சேர்ந்து அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். இதனால் தீபா தரப்புக்கும், வேதா நிலைய காவலாளிகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதில் தீபா தரப்பினரைக் காவலாளிகள் வீட்டை விட்டு வெளியே துரத்தியுள்ளனர். இந்தப் பிரச்னையின்போது காவலாளிகளை ஏதும் சொல்லாமல், ‘‘உன்னை மட்டும் தனியாகத்தானே வரச் சொன்னேன். ஏன் இப்படிச் செய்தாய்?’’ எனத் தீபாவிடம் கேட்டுவிட்டு அங்கிருந்து புறப்பட்டுவிட்டார் தீபக். இதையடுத்து தீபா, அவர் கணவர் மாதவன், தீபா பேரவை நிர்வாகி ராஜா ஆகியோர் வேதா நிலைய வாசலின் முன் நின்று சசிகலா தரப்பினரைத் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தனர். ‘‘சொத்துக்கு ஆசைப்பட்டு சசிகலாதான் என் அத்தையைக் கொன்றார். இதற்கு என் சகோதரனும் உறுதுணையாக இருந்தார்’’ எனக் கூச்சலிட்டார் தீபா. தொடர்ந்து தீபாவும் மாதவனும் தீபக்கும் ராஜாவும் நடத்திய கூத்துகள், மட்டரகமான அரசியல் காட்சிகளாக இருந்தன.
ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது என்று யார் யாரோ சொல்லிவந்தார்கள். ஆனால், ‘என் அத்தையின் மரணத்தில் எனக்குச் சந்தேகம் எதுவும் இல்லை’ என அறிவித்து வந்தார் தீபா. இந்தச் சூழலில், தற்போது முதன்முறையாக ‘ஜெயலலிதாவைத் திட்டமிட்டுக் கொன்றுவிட்டார்கள்’ எனப் புகார் கூறியிருக்கிறார். ‘அரசியலுக்குள் நுழைவது எப்படி’ என்ற வித்தையை இப்போதுதான் தீபா அறிந்துகொண்டிருக்கிறார்.
No comments:
Post a Comment