கிரெடிட் கார்டுகளை கவனமாக கையாள...
மத்திய அரசு ரொக்கமற்ற
பரிவர்த்தனையை ஊக்குவிப்பதைத் தொடர்ந்து, புதிய கிரெடிட் கார்டுகளை வாங்குவது தற்போது
மிகவும் எளிதான விஷயமாகும். உங்களுக்கு கிரெடிட் கார்ட் பயன்படுத்தும் தகுதி
வந்துவிட்டது என வங்கிகளின் கஸ்டமர் கேரில் இருந்து தொடர்ந்து அழைப்புகள் வந்துகொண்டிருக்கும்.
நம்மில் பலர் ஏற்கெனவே ஒரு சில கார்டுகளை வைத்திருப்போம்.
ஒன்றுக்கும் மேற்பட்ட கார்டுகளை
வைத்திருப்பதன் மூலம் நம்முடைய கடன் வாங்கும் தகுதி உயரும். ரிவார்ட் மற்றும்
கேஷ்பேக் பாயின்ட்ஸ் உள்ளிட்ட பயன்களை நாம் அனுபவிக்கலாம். ஆனால் அதிக கிரெடிட் கார்டுகளை
வைத்திருப்பது என்பது இருமுனை கத்திபோல. பல கார்டுகளை எப்படி கையாளுவது என்பதை
பார்ப்போம்.
கிரெடிட் கார்டு வரம்பு
கூடுதல் கிரெடிட் கார்டை வைத்திருப்பது நல்ல ஐடியா என்பதில்
சந்தேகம் இல்லை. அவசர மருத்துவ தேவைக்கு கூடுதல் கார்டு பயன்படும். முக்கியமான கிரெடிட்
கார்டை தொலைத்துவிட்டாலோ அல்லது தொழில்நுட்ப காரணங்களால் பயன்படுத்த முடியாமல்
போகும் போது, கூடுதல் கார்டு உதவியாக இருக்கும். ஆனால் ஒன்றை
நினைவில் வைத்துக்கொள்வது அவசியம். தேவைப்பட்டால் மட்டுமே கூடுதல் கார்டை
பயன்படுத்த வேண்டும்
கைவசம் கூடுதலாக இருக்கும் கிரெடிட்
கார்டுகளை, மொபைல் போன் வாங்குவதற்காகவோ, தொலைக்காட்சி உள்ளிட்ட
உடனடி அவசியம் அல்லாத பொருட்கள் வாங்குவதற்கோ தேய்க்க வேண்டாம்.
கடன் வரம்பு அதிகமாக இருப்பதால், அதிகம் செலவு செய்ய
வேண்டும் என்னும் எண்ணம் இருக்கும். இதனால் கடன் என்னும் பொறியில் சிக்க வேண்டி
இருக்கும். இரு வழிகளில் கிரெடிட் கார்ட் மூலமான செலவுகளைக் கட்டுப்படுத்தலாம்.
செலவுகளை கட்டுப்படுத்துவதற்கென பிரத்யேக செயலிகள் உள்ளன. இவற்றை
பயன்படுத்தும்போது, அதிகம் செலவு செய்யும் பட்சத்தில் நமக்கு
எச்சரிக்கைகளை அனுப்பும். அடுத்ததாக நெட்பேங்கிங் உள்ளிட்ட இதர வழிகளில் பணத்தை
செலுத்தலாம்.
போனஸ் புள்ளிகள்
பல வகையான கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தும் பட்சத்தில் பல சலுகைகள்
கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது. போனஸ் புள்ளிகள், கேஷ் பேக்,
தவிர சினிமா டிக்கெட் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் இருக்கின்றன.
உதாரணத்துக்கு எஸ்பிஐ, ஹெச்டிஎப்சி வங்கி, சிட்டி பேங்க் உள்ளிட்ட வங்கிகளின் கார்டுகளை பயன்படுத்தும்போது கேஷ்பேக்
சலுகைகள் இருப்பதால் உங்களால் அதிகம் சேமிக்க முடியும்.
அடிக்கடி பயணம் செய்பவர்கள் என்றால்
ஐசிஐசிஐ அல்லது சிட்டி வங்கியின் பியூல் கார்டுகள் பயனுள்ளதாக இருக்கும். அடிக்கடி
விமானத்தில் பயணிப்பவர்களுக்கென பிரத்யேக கார்டுகளும் இருக்கின்றன.
எவ்வளவு சலுகைகள் இருந்தாலும்
மூன்றுக்கு மேற்பட்ட கார்டுகளை வைத்திருப்பது ஏற்புடையது அல்ல. அனைத்து
கார்டுகளையும் கையாளுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். இதர சலுகைகளுக்காக நீங்கள்
ஐந்து கார்டுகளை பயன்படுத்துகிறீர்கள் என வைத்துக்கொண்டால், அனைத்து வங்கிகளும்
உங்களுடைய பில் செலுத்தும் தேதியை நினைவுபடுத்தும் என சொல்ல முடியாது. ஒரு வேளை
நினைவுபடுத்தினால் கூட, பணம் செலுத்திவிட்டோம் என நீங்கள்
நினைக்க வாய்ப்பு இருக்கிறது.
ஒருவேளை நீங்கள் சரியான நேரத்தில்
பணத்தை செலுத்தவில்லை என்றால் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய இதர சலுகைகளை விட
அபராதம் அதிகமாக இருக்கும். சிறிய பலன்களுக்காக, அதிக அபராதம் செலுத்த வேண்டாம்.
இறுதியாக சில வார்த்தைகள்
உங்களால் ஒன்றுக்கும் மேற்பட்ட கிரெடிட் கார்டுகளை கையாள முடியும்
என்றால் வைத்துக்கொள்ளலாம். இருந்தாலும் மூன்றுக்கு மேல் கிரெடிட் கார்டுகளை
வைத்துக்கொள்ள வேண்டாம். ஒரே கார்டில் மொத்த தொகையையும் செலவழிப்பதை விட, இதர கார்டுகளை பயன்படுத்தலாம். ஆனால் ஒவ்வொரு கார்டிலும் அதிகபட்சம் 50
சதவீத வரம்புக்கு மேல் பயன்படுத்த வேண்டாம்.
உங்களுக்கு நிதி சார்ந்த
கட்டுப்பாடுகள் இருந்தால்,
கூடுதலாக ஒரு கிரெடிட் கார்டினை வாங்கலாம். அதிகம் செலவழிப்பவராகவோ,
சரியான சமயத்தில் தொகையை திருப்பி செலுத்தாதவராகவோ இருக்கும்
பட்சத்தில் கூடுதல் கார்டு வாங்குவதைத் தவிர்க்கவும்.
- gurumurthy.
k@thehindu. co. in
குருமூர்த்தி. கே
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் 05.06.2017
No comments:
Post a Comment