லாக்கர் பொருள்: வங்கிகள் கைவிரிப்பு
புதுடில்லி:'வங்கி லாக்கரில் வைக்கப்படும் பொருட்களின் பாதுகாப்புக்கு, வங்கிகள் பொறுப்பேற்காது' என்பது, தகவல் அறியும் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.
திருட்டு, தீ விபத்து உள்ளிட்டவற்றில் இருந்து, நகைகள் உள்ளிட்ட பொருட்களை பாதுகாக்க, வாடிக்கையாளர்கள், வங்கிகளில் உள்ள பாதுகாப்பு லாக்கரில், அவற்றை வைக்கின்றனர். ஆனால், இந்த லாக்கரில் வைக்கப்படும் பொருட்கள், திருடப்பட்டால், தீவிபத்து உள்ளிட்ட விபத்துகளால் சேதமடைந்தால், அதற்கு வங்கிகள் இழப்பீடு வழங்காது.
இது குறித்து டில்லி யைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், ரிசர்வ் வங்கி மற்றும், 19 பொதுத் துறை வங்கிகளிடம் கேட்ட விபரங்களுக்கு, அவை அளித்துள்ள பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
வங்கி லாக்கரை பயன்படுத்துவது தொடர்பாக, நுகர்வோர் மற்றும் வங்கிக்கு இடையே ஏற்படுத்தப் படும் ஒப்பந்தம், குத்தகை அடிப்படையிலான ஒப்பந்தமே. அதனால், அதில் வைக்கப்படும் பொருட்கள் பாதுகாப்பு, வாடகைக்கு எடுத்துக் கொள்ளும் நுகர்வோரையே சாரும்.
லாக்கரில் வைக்கப்படும் பொருட்களுக்கு எந்தவித சேதம் ஏற்பட்டாலும், காணாமல் போனால், திருடப்பட்டால்,அதற்கு வங்கி பொறுப்பாகாது. அதனால், இழப்பீடு தர முடியாது. இவ்வாறு வங்கிகள் பதில் அளித்துள்ளன.
அதைத் தொடர்ந்து, நிறுவனங்கள் இடையேயான போட்டி விவகாரத்தை விசாரிக்கும், சி.சி.ஐ., எனப்படும் 'இந்திய காம்ப்படிஷன் கமிஷனில் வழக்கறிஞர் புகார் கொடுத்துள்ளார். 'அனைத்து வங்கிகளும் திட்டமிட்டு, இதுபோன்ற பிரிவுகளை ஒப்பந்தத்தில் சேர்த்துள்ளன.
லாக்கருக்கு வங்கிகள் பொறுப்பாகாதபோது, காப்பீடு செய்துவிட்டு, வீட்டிலேயே வைத்திருக்கலாமே. லாக்கரில் வைக்கப்படும் பொருட்களின் பாதுகாப்புக்கு வங்கிகளை பொறுப்பேற்கும் வகையில், சட்டத் திருத்தம் செய்ய வேண்டும்' என, புகாரில் அவர் கூறியுள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் -25.06.2017
No comments:
Post a Comment