ஜி.எஸ்.டி வரி பற்றிய கேள்விகள் மற்றும் பதில்கள் - பாகம் : 8
பதிவு செய்யாத வணிகரிடம் பொருள்களை கொள்முதல் செய்யலாமா?
சிறப்பு பொருளாதார மண்டலத்தில் (SEZ) அமைந்திருக்கும் நிறுவனத்திற்கு தனிப்பதிவு அவசியமா? உதாரணமாக, எங்கள் நிறுவனம் பெருந்துறை சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஒரு கிளையும் சென்னையில் ஒரு கிளையும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதற்கு தனித்தனி பதிவு அவசியமா ?
உங்களது நிறுவனம் ஏற்கெனவே ஜிஎஸ்டியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் இருக்கும் பிரிவுக்கும் தனிப்பதிவு அவசியம். இது தவிர ஒரே மாநிலத்திலுள்ள மற்ற கிளைகளுக்கு தனி பதிவு அவசியமில்லை.
வழக்கறிஞர்களுக்கு கட்டணமாக செலுத்தப்படும் தொகைக்கு ஜிஎஸ்டி வரி அவசியமாகிறதா?
வழக்கறிஞர்கள் இன்னமும்கூட ஜிஎஸ்டியி லிருந்து விலக்கு பெற்றவர்களாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு வியாபார நிறுவனங்கள் கொடுக்கும் தொகைக்கு எதிர்முறை கட்டண முறையில் (Reverse Charge Mechanism) அதற்குரிய தொகையை சேவை பெறுபவர்கள் செலுத்த வேண்டியது அவசியமாகிறது. இதனால் வழக்கறிஞர்கள் எவரும் ஜிஎஸ்டியில் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை.
நான் காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவைகளை உற்பத்தி செய்து கொண்டும் அதற்கான வர்த்தக நிறுவனம் ஒன்றும் வைத்துள்ளேன். இரண்டிற்கும் தனித்தனி பதிவுகள் அவசியமா?
நீங்கள் இரண்டு நிறுவனத்தையும் ஒரே பான் எண்ணின் கீழ் செய்வதால் தனித்தனி பதிவுகள் அவசியமில்லை. ஒரே பதிவின் கீழ் உற்பத்தி மற்றும் விற்பனையை செயல்படுத்தலாம்.
கரூரில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் எங்களது நிறுவனத்திற்கு மைசூரில் பதிவு செய்யாத நிலையில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு நிறுவனத்திடம் இருந்து பொருட்களைக் கொள்முதல் செய்கிறோம். இதனால் ரிவர்ஸ் சார்ஜ் என்று சொல்லப்படுகின்ற எதிர்முறை கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் நாங்கள் கர்நாடகாவில் பதிவு செய்வது அவசியமா ?
நீங்கள் தற்பொழுது தமிழ்நாட்டில் பதிவு செய்துள்ளீர்கள். நீங்கள் கர்நாடகாவைச் சேர்ந்த பதிவு செய்யாத நிறுவனத்திடம் இருந்து பெறுவதால் உங்களது நிறுவனத்தை கர்நாடகாவிலும் பதிவு செய்வது அவசியம்.
ஜிஎஸ்டி வந்தால் வியாபாரத்தில் நடைமுறை மூலதனம் பாதிக்கப்படும் என்று நண்பர்கள் கூறுகிறார்கள் உண்மையா ?
ஜிஎஸ்டி முறையால் வரி நிகழ்வு நடவடிக்கைகளில் மாற்றம் ஏற்பட்டு வரி கட்ட வேண்டிய சூழ்நிலையில் சில மாற்றங்கள் வந்துள்ளன. உதாரணமாக ஒரு பொருளுக்கான முன் பணம் (Advance) பெறும்போது வரி நிகழ்வு ஏற்படுகிறது. முன் பணம் (Advance) பெறும்போதே வரி செலுத்த கடமைப்பட்டிருக்கிறீர்கள். அதுபோல நீங்கள் கொடுக்கும் முன் பணத்திற்கும் (Advance) உடனடியாக உள்ளீட்டு வரி வரவாக எடுத்துக்கொள்ள முடியாது. இதில் மூன்று நிபந்தனைகள் உள்ளன. அதில் முதலாவது நிபந்தனை நீங்கள் கொடுத்துள்ள முன் பணத்திற்கான (Advance) பொருட்கள் வந்து சேர வேண்டும். இரண்டாவது விற்பதற்கான ஒப்புகை சீட்டு தயார் செய்திருக்க வேண்டும். மூன்றாவது நீங்கள் முன் பணம் கொடுத்தவர் (Advance) அதற்குரிய ஜிஎஸ்டி வரியை செலுத்தி இருக்க வேண்டும். மேற் சொன்ன மூன்று நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே நமது முன் பணத்திற்கான (Advance) உள்ளீட்டு வரி எடுத்துக்கொள்ள முடியும். எனவே இது போன்ற நிகழ்வுகளால் நடைமுறை மூலதனத்தின் கணக்குகள் மறுஆய்வு செய்யப்பட வேண்டும் அல்லது மறுமதிப்பீடு செய்யப்பட வேண்டும். நடைமுறை மூலதனத்தில் ஜிஎஸ்டி அணுகுமுறையில் எந்த மாற்றங்கள் இருக்கிறது என்பதை ஒப்பிட்டு கணக்கிட்டு பார்த்துக்கொள்ள வேண்டும்.
நான் திருப்பூரில் ஏற்றுமதி நிறுவனம் நடத்தி வருகிறேன். என்னுடைய உள்ளீட்டு வரிகளை நான் மீண்டும் பெற்றுக்கொள்ள முடியுமா? ஏற்றுமதியாளருக்கு ஜிஎஸ்டி சட்டம் எந்த வகையில் உதவுகிறது?
ஏற்றுமதியாளர்கள் இரண்டு வகைகளில் ஜிஎஸ்டி வரிவிதிப்பை அணுகலாம். ஒன்று வரி செலுத்திவிட்டு வாங்கிய பொருட்களுக்கும் சேவைகளுக்குமான உள்ளீட்டு வரியை நீங்கள் ஏற்றுமதி செய்த பிறகு திருப்பித்தரத் தக்க தொகையாக பெற்றுக் கொள்ளலாம். இரண்டாவது உங்களது ஏற்றுமதிக்கான வரியை செலுத்திவிட்டு உள்ளீட்டு வரிபோக வாங்கிய பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான உள்ளீட்டு வரியை கழித்து மீதியை மொத்த தொகையையும் திருப்பித்தரத்தக்க தொகையாக (Refund) பெற்றுக் கொள்ளலாம். மேற்சொன்ன வகைகளிலும் ஏற்றுமதியாளர்கள் ஜிஎஸ்டியை அணுகலாம்.
பதிவு செய்யப்படாத வணிகரிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் பொருட்களுக்கு எதிர்முறை கட்டண (Reverse Charge) முறையில் வரி செலுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. தற்பொழுது நான் ரூ.750-க்கு எழுதுபொருட்களைப் (Stationary Goods) பதிவு செய்யாத கடையிலிருந்து வாங்குகிறேன் என்று வைத்துக் கொள்ளலாம். இதற்கு எதிர்முறை கட்டண (Reverse Charge) முறையில் ஜிஎஸ்டியில் வரி உண்டா ?
பதிவு செய்யப்படாத வணிகரிடமிருந்து வாங்கப்படும் பொருட்களுக்கு ஒரு நாளுக்கு ரூ.5000 வரை விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் வாங்கும் பொருட்களுக்கு மாதத் திற்கு ஒருமுறை கூட்டுத்தொகை கணக்கீடு (Consolidate raise) செய்யப்பட வேண்டும்.
எனது தொழில் நிறுவனம் ஈரோட்டில் உள்ளது. அது சில ஜாப் ஒர்க் வேலைகளைக் கோவையிலுள்ள ஒரு நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டுப் பின் அந்தப் பொருட்கள் திருச்சூரில் உள்ள எங்களுடைய வாடிக்கையாளருக்கு செல்கிறது. இதற்கு நான் எந்தவிதமான வரிகளைச் செலுத்த வேண்டும்?
உங்களுடைய பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது வேறு மாநிலத்திற்கு உள்ளதா என்பதை முதலில் பார்க்க வேண்டும். உங்களது பொருட்கள் தமிழகத்திற்குள்ளேயே உற்பத்தி செய்யப்பட்டு கடைசியாக சேருமிடம் திருச்சூர் என்பதால் ஐஜிஎஸ்டி கட்ட வேண்டும்.
ஜிஎஸ்டி பற்றி பல ஊடகங்களில் பல செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இது மிகவும் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறது. சில்லரை வணிகத்திலுள்ள நான் என்ன செய்ய வேண்டும். ?
ஏராளமான வரிச் சட்டங்களும் வரித் திருத்தங்களும் விதிமுறைகளும் வந்து கொண்டுதான் இருக்கின்றன. இவை அனைத்தையும் நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மிகமுக்கியமான ஒன்று அதில் உங்களுக்குண்டான வரிவிகிதங்கள் என்ன? உங்களது வாடிக்கையாளர் யார்? நீங்கள் வரி செலுத்தப் போவது உங்களுடைய மாநிலத்திற்காக அல்லது வேறு மாநிலத்திற்கா? இவைகளை மட்டும் நீங்கள் தெளிவாக தெரிந்தால் போதும். நீங்கள் கடைசி ஆறு மாதம் தாக்கல் செய்திருந்தால் உங்களுக்கு உண்டான கிரெடிட்டை(Credit) நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். கிரெடிட்(Credit) எடுத்துக் கொள்வதை மிக முக்கியமாக நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இன்று (01-07-2017) முதல் இன்வாய்ஸ் புதிய வரிசை எண்ணில் ஆரம்பிக்க வேண்டுமா? அல்லது இந்த நிதி ஆண்டு ஏப்ரலில் தொடங்கிய வரிசையைத் தொடரலாமா?
30-06-2017 நள்ளிரவோடு மதிப்புக்கூட்டப்பட்ட வரி, உற்பத்தி வரி மற்றும் சேவை வரியை மறந்துவிடலாம். இன்றுமுதல் ஜிஎஸ்டி வரிச்சட்டத்தின் கீழ் வருகிறீர்கள். உங்களது பதிவு, கிளைகள் மற்றும் அமைப்பைப் பொறுத்து புதிய இன்வாய்ஸ் தயார் செய்து விநியோக்த்தை ஆரம்பியுங்கள். புதிய வரிசையில் வரித்தொகை விவரங்கள் குறிப்பிடவேண்டும்.
இன்றிலிருந்தே (01-07-2017) மின்னணு பில் கொண்டு செல்வது அவசியமா?
இன்னும் 3 மாத காலத்திற்கு முந்தைய நடைமுறையிலேயே இருக்கும். 3 மாதத்திற்கு பிறகு மின்னணு பில் கொண்டு செல்வது கட்டாயம். வெளிமாநில கிளைகளுக்கு பொருட்களைக் கொண்டு செல்லும்போது விநியோக ரசீது (Bill of Supply) அவசியம். முறையே ஜாப் வொர்க்கிற்கு பொருட்களைக் கொண்டு செல்லும்போது டெலிவரி சலான் அவசியமாகிறது.
No comments:
Post a Comment