பெங்களூரு சிறையில் நடப்பது என்ன? வீடியோ வெளியானதால் பரபரப்பு
பெங்களூரு:பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்த முறைகேடுகள் தொடர்பான வீடியோ காட்சிகள், நேற்று, உள்ளூர், 'டிவி' சேனல்களில் வெளியானதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில், சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா, கடந்த, 10ம் தேதி ஆய்வு செய்தார். அப்போது, அ.தி.மு.க., சசிகலாவுக்கு வழங்கப் பட்ட சிறப்பு சமையல் அறை, முத்திரை தாள் மோசடி குற்றவாளி, அப்துல் கரீம்லால் தெல்கிக்கு சிறப்பு வசதி, போதை பொருளான கஞ்சா கொண்டு வருவது போன்ற முறைகேடு களை கண்டுபிடித்தார்.
இது தொடர்பாக, கைதிகளிடம் விசாரித்தார். கஞ்சா, சூதாட்ட அட்டைகள் எப்படி கிடைத்தன என்று கைதிகளிடம் கேள்வி எழுப்பினார். இது குறித்து விசாரிக்க, விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், கைதிக ளிடம் ரூபா விசாரிப்பது, சிறை கைதிகள் சூதாடுவது போன்ற வீடியோ காட்சிகள் நேற்று மீடியாக்களில் வெளியானது. இதனால், கர்நாடக போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், டி.ஐ.ஜி., ரூபா புகார் வெளியாகி மூன்று நாட்களுக்கு பின்னும், புகார் தொடர் பான பரபரப்பு குறையாமல் இருந்ததால், சிறை துறை டி.ஜி.பி., சத்யநாராயண ராவ் பீதி அடைந்துள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவித்தன.விசாரணை கமிஷன் அதிகாரிகள், சிறைக்கு செல்வர் என்பதை அறிந்த, சத்யநாராயண ராவ், நேற்று காலையில் திடீரென, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு சென்றார்.
ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக, சிறையில் இருந்தார். சில ஆவணங்களை சரி செய்ததாக வும், நேற்று முன்தினம் இடிக்கப்பட்ட, சசிகலாவின் சமையல் அறை பகுதியை ஆய்வு செய்ததாகவும் தெரிய வந்துள்ளது.இவ்வளவு நாட்களாக, சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, சாதாரண உடை தான் அணிந்துள்ளார்.
பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளதால், சீருடைக்கு மாறும்படி, ஊழியர்கள் மூலம், டி.ஜி.பி., கூறியதாகவும், அதன் பின், சிறை சீருடையான, வெள்ளை சேலை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. டி.ஜி.பி., ராவ், சிறைக்கு வந்து, சில ஆவணங் களை சரிப்படுத்திய தகவலை அறிந்த டி.ஐ.ஜி., ரூபா நேற்று மாலை 4:00 மணியளவில், பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தார்.
அங்கிருந்த சப் - இன்ஸ்பெக்டர் பாபு சங்கரிடம் சில நிமிடங்கள் பேசினார். பின், சிறைக்குள் சென்றார். சிறையில் தான் ஏற்கனவே பார்த்த ஆவணங்கள் சரியாகவுள்ளதா அல்லது மாற்ற பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தார். சிறைத்துறை டி.ஜி.பி., மற்றும் டி.ஐ.ஜி., ஒருவர் பின் ஒருவர் பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தது சிறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சசியை சந்திக்க சென்றவர்களுக்கும் சிறையில் ராஜமரியாதை கிடைத்ததா?
பரப்பன அக்ரஹாரா சிறையில் இம்மாதம், 10ம் தேதி ரூபா ஆய்வு செய்தபோது, அவர் எடுத்த வீடியோ காட்சிகளை சிறை அதிகாரிகளிடம் வழங்கியிருந்தார்; அந்த காட்சிகளை தனக்கு அனுப்பும்படியும் உத்தரவிட்டிருந்தார். அவர்கள் அனுப்பிய வீடியோ காட்சிகளை பார்த்தபோது, சசிகலா சம்பந்தமானசில முக்கியமான காட்சிகள் அழிக்கப்பட்டிருப்பது தெரிந்தது.
இது தொடர்பாக சத்யநாராயண ராவ், உள்துறை முதன்மை செயலர், மாநில போலீஸ் டி.ஜி.பி., ஊழல் ஒழிப்பு படை ஆகியோருக்கு, நேற்று காலை, இரண்டாவது அறிக்கையை, ரூபா சமர்ப்பித்துள் ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சசிகலாவை சந்திக்க வருபவர்கள், நேரடியாக, அவர் அடைக்கப்பட்டுள்ள இடத்துக்கே அழைத்து செல்லப் படுகின்றனர். சசிகலாவை சந்திக்க வருபவர்கள் அமருவதற்கு, நான்கு நாற்காலிகள், ஒரு மேஜை போடப்பட்டிருந்தன. இந்த அறை முன் வைக்கப் பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் அழிக்கப்பட்டுள்ளன.
சசிகலாவுக்கு சிறப்பு வசதி செய்து கொடுப்பது தொடர்பாக சிறை ஊழியர் ஒருவர், எனக்கு கடிதம் மூலம் புகார் அனுப்பியிருந்தார். எனக்கு எதிராக கைதிகள் போராட்டம் நடத்திய காட்சிகள், எப்படி வெளியானது; அதற்கு துணை புரிந்தவர்கள் யார்; அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கக் கூடாது. சிறை ஊழியர்களுக்கு தெரிந்தே, கைதிகள், சூதாட்டம் ஆடுகின்றனர்.இதுபோன்ற பல முக்கிய தகவல்கள் அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.
சிறைக்கு வெளியே சசி
ரூபாவுக்கு சிறை ஊழியர் எழுதிய கடிதத்தில், 'சசிகலா சிறைத்துறை உயர் அதிகாரி காரில், சிறை யில் இருந்து முக்கால் கிலோ மீட்டர் துாரத்தில் உள்ள பிரிட்டானியா அடுக்குமாடி குடியிருப்புக்கு மூன்று முறைக்கும் மேலாக சென்று வந்துள்ளார்' என தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
சிறையில் ரகளை கைதிகள் மீது தடியடி
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் டி.ஐ.ஜி., ரூபா நேற்று மாலையில் ஆய்வை முடித்து திரும்பிய பின், இரவு 7:30 மணியளவில் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தும்படி கைதிகளை சிறை அதிகாரி கிருஷ்ணகுமார் துாண்டியதாகவும் தகவல் அறிந்து பரப்பனஅக்ரஹாரா போலீஸ் ஸ்டேஷனில் இருந்து 20க்கும் மேற்பட்ட போலீசார் சிறைக்குள் சென்று கைதிகள் மீது தடியடி நடத்தி கலைத்ததாகவும் தகவல்கள் வெளியானது.
இதையடுத்து துணை போலீஸ் கமிஷனர் போரலிங்கையா அவசரமாக சிறைக்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது ரூபாவுக்கு ஆதரவாக சில கைதிகளும் கிருஷ்ணகுமாருக்கு ஆதரவாக சில கைதிகளும் கோஷம் எழுப்பினர். அவர்களை
சமாதானப்படுத்திய போரலிங்கையா நடந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார். இந்த சம்பவத்தால் சிறை பகுதியில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
டி.ஜி.பி.,க்கும் நோட்டீஸ்
பரப்பன அக்ரஹாரா சிறையில் நடந்த முறை கேடு குறித்து டி.ஐ.ஜி., ரூபா, டி.ஜி.பி., சத்ய நாராயண ராவுக்கு சமர்ப்பித்த அறிக்கை குறித்து மீடியாக்களில் பேசியதற்காக ரூபா வுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டிருந்தது. தற்போது சத்யநாராயண ராவுக்கும் விளக்கம் கேட்டு கர்நாடக உள்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாரபட்சமின்றி அரசு செயல் படுகிறது என காண்பித்து கொள்வதற்காக, இது போன்று நடப்பதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைதி மீது தாக்குதல்?
சசிகலாவுக்கு சிறையில், சிறப்பு வசதி செய்து கொடுத்திருந்ததை அம்பலப்படுத்திய, டி.ஐ.ஜி., ரூபா, நேற்று மாலை, பரப்பன அக்ரஹாரா சிறைக்கு வந்தபோது, சிறை வளாகத்தில் இருந்த ராமமூர்த்தி என்ற கைதியின் மனைவி அனிதா, ரூபாவிடம் ஓடி வந்து, ''சிறையிலுள்ள என் கணவர், சிறை முறைகேடுகள் குறித்து உங்களுக்கு தகவல் அளித்து வந்ததாக கூறி, சிறை அதிகாரி கிருஷ்ணகுமார், தகாத வார்த்தையால் திட்டி, அவரை தாக்கியுள்ளார்,'' என்றார்.
இதற்கு ரூபா, ''நான் பார்த்துக் கொள்கிறேன்,'' எனக் கூறி, சிறைக்குள் சென்றார்.
இது தொடர்பாக, சிறைக்குள், கிருஷ்ணகுமாருக் கும், ரூபாவுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்துள்ளது. இதையடுத்து, எலக்ட்ரானிக் சிட்டி பகுதி போலீசாரை அழைத்து, தன் பாதுகாப்புக்கு வரும்படி, ரூபா அழைத்தார். இதன் பின், அங்கிருந்து, ஒரு இன்ஸ்பெக்டர், நான்கு போலீசார் வந்தனர். வெளியே வந்த ரூபா, நேராக, பரப்பன அக்ரஹாரா போலீஸ் ஸ்டேஷ னுக்கு சென்றார். அங்கு, சிறை அதிகாரி கிருஷ்ண குமார் மீது, அவர் புகார் அளித்திருக்கலாம் என தெரிகிறது.
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் நடந்துள்ள முறைகேடு விவகாரம் தொடர்பாக, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த விசாரணை அறிக்கை வந்தவுடன், உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தினமும் அது பற்றியே, கருத்தை தெரிவித்து கொண்டிருக்க எனக்கு விருப்பமில்லை.
-சித்தராமையா, கர்நாடக முதல்வர், காங்.,-
நன்றி : தினமலர் நாளிதழ் - 15.07.2017
No comments:
Post a Comment