உள்ளாட்சி தேர்தல்
நடத்தாததால் அவமதிப்பு வழக்கு
6 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு ஐகோர்ட் 'நோட்டீஸ்'
சென்னை: உள்ளாட்சி தேர்தல் தொடர்பான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கில்
பதிலளிக்க, முன்னாள்
மாநில தேர்தல் கமிஷனர் மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டு உள்ளது. விசாரணையை, நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளது.
தி.மு.க., வழக்கு : உள்ளாட்சி
அமைப்புகளுக்கான தேர்தல், 2016 அக்டோபரில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. 'உள்ளாட்சி அமைப்புகளில், பழங்குடியினருக்கு முறையான
ஒதுக்கீடு இல்லை' என, தி.மு.க., அமைப்பு செயலர், ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த
வழக்கை, நீதிபதி
கிருபாகரன் விசாரித்தார். 'பழங்குடியினருக்கான
ஒதுக்கீடு செல்லும்' என, உத்தரவிட்ட நீதிபதி, தேர்தல் அறிவிப்பு முறையாக
இல்லாததால், அதை
ரத்து செய்வதாக உத்தரவிட்டார். 2016 டிசம்பருக்குள் தேர்தலை நடத்தவும்
உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், மாநில தேர்தல் கமிஷன் மேல்முறையீடு
செய்தது. மனுவை விசாரித்த, இரு
நீதிபதிகள் அடங்கிய அமர்வு, இந்த
ஆண்டு, மே, 14க்குள் தேர்தலை நடத்தும்படி, மாநில தேர்தல் கமிஷனுக்கு
உத்தரவிட்டது.
இந்த உத்தரவு,
2017 பிப்ரவரியில்
பிறப்பிக்கப்பட்டது. அதன்பின், தேர்தல் கமிஷன் தரப்பில் அவகாசம் கோரப்பட்டது. ஜூலைக்குள்
தேர்தலை நடத்துவதாக, நீதிமன்றத்தில்
மனுவும் தாக்கல் செய்யப்பட்டது.
இதற்கிடையில், நீதிமன்ற உத்தரவுப்படி உள்ளாட்சி
தேர்தலை நடத்தாததால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆறு பேருக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு மனுவை, ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்தார்.
மாநில தேர்தல் கமிஷனராக
இருந்த சீதாராமன், மாநில
தேர்தல் கமிஷன் செயலர் ராஜசேகர், ஊரக வளர்ச்சித் துறையின் முதன்மை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாக முதன்மை செயலர்
பனிந்தர ரெட்டி, நகர
பஞ்சாயத்து இயக்குனர் மகரபூஷனம், சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன் ஆகியோருக்கு
எதிராக, அவமதிப்பு
மனு தாக்கல் செய்யப்பட்டது.
தேர்தல் கமிஷன் மனு, நீதிபதிகள்
நுாட்டி ராமமோகன ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம்
அடங்கிய அமர்வு முன், நேற்று
விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, ''மே மாதத்தில் தேர்தலை
நடத்தும்படி, நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, மாநில தேர்தல் கமிஷன் மீறியுள்ளது; ஜூலையில் தேர்தல் நடத்துவதாக, நீதிமன்றத்தில் அளித்த
உத்தரவாதத்தையும், தேர்தல்
கமிஷன் மீறியுள்ளது,'' என்றார்.
இதையடுத்து, மனுவுக்கு பதிலளிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் ஆறு பேருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
விசாரணையை, நான்கு
வாரங்களுக்கு தள்ளி வைத்தது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 08.07.2017
No comments:
Post a Comment