எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழா பிளக்ஸ் பேனர் விதிமீறல்!
உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை: மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவையொட்டி, அனுமதியின்றி விதிகளை மீறி பிளக்ஸ் பேனர்கள் வைக்கப் பட்டதாகவும், அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கில், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
சமூக ஆர்வலர் 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த மனு:
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டுவிழா, மதுரையில் நடந்தது. இதையொட்டி, முதல்வர் பழனிசாமிக்காக அனுமதியின்றி, விதிகளை மீறி, மதுரையில் ஜூன் 28ல் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதற்காக ரோடுகளில் குழிகளைத் தோண்டி சேதப்படுத்தினர்.
திண்டுக்கல்லில் ஜூன் 22ல் அமைச்சர் சீனிவாசனுக்காக, பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர்கள் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்தன. இதை சிலர் கிழித்தனர். உடனே போலீஸ் பாதுகாப்புடன் பெரிய அளவில் பேனர் வைக்கப்பட்டது.
விதிகளை மீறி, அனுமதியின்றி பேனர்கள் வைத்தால் ஓராண்டு சிறை தண்டனை, 5000 ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை உண்டு. அனுமதியின்றி பேனர்கள் வைத்தவர்கள் மீது, இதுவரை போலீசார் வழக்குப் பதிவு செய்யவில்லை. அதிகாரிகள் கடமை தவறியுள்ளனர். தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலருக்கு புகார் அனுப்பினேன்.
மனுவை பரிசீலித்து மதுரை, திண்டுக்கல் கலெக்டர்கள், மதுரை போலீஸ் கமிஷனர், மாநகராட்சி கமிஷனர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு 'டிராபிக்' ராமசாமி மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.
நீதிபதிகள், 'இவ்வழக்கில் இரண்டாவது எதிர்மனுதாரராக இணைக்கப்பட்டுள்ள அ.தி.மு.க., -எம்.எல்.ஏ.,இடைப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏ.,விற்கு (தமிழக முதல்வர்) எதிராக, மனுதாரர் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. எனவே அவரை, தேவையின்றி இவ்வழக்கில் சேர்க்கப்பட்டு உள்ளதை நீக்கம் செய்கிறோம்,' என்றனர்.
தலைமைச் செயலர், உள்துறை செயலர், மதுரை தென்மண்டல ஐ.ஜி.,க்கு நோட்டீஸ் அனுப்பி, ஜூலை 24க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 08.07.2017
No comments:
Post a Comment