வங்கியில் இனி இதற்கெல்லாம் ஜிஎஸ்டி
கட்டணங்கள்!
தற்போது வங்கிகளில் அளிக்கப்படும்
சேவைகளுக்கு 15 சதவிகித வரி வசூலிக்கப்படும்
நிலையில் ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு 18 சதவிகிதம் அளவிலான வரியை வசூலிக்கப்போகிறது வங்கிகள்.
இந்த நிலையில், ஜிஎஸ்டி அமலாக்கத்துக்குப் பிறகு இனி வங்கியில் எதற்கெல்லாம் ஜிஎஸ்டி
கட்டணங்கள் என்பது குறித்து பாங்க் ஆஃப் இந்தியா, முன்னாள் துணை மண்டல மேலாளர் மு.எ.பிரபாகரபாபுவிடம் கேட்டதற்கு...
ஜிஎஸ்டி-யில் சரக்குகளுக்கும்
சேவைகளுக்குமாக பொதுவாக 5 சதவிகிதம், 12 சதவிகிதம், 18 சதவிகிதம், 28 சதவிகிதம், 43 சதவிகிதம் என
மொத்தம் ஐந்து வரி விகிதங்கள் உள்ளன. அவ்வாறு இருக்க, வங்கிச் சேவையின் மீது ஜிஎஸ்டி-யில் (9 சதவிகிதம் மத்திய ஜிஎஸ்டி-யாகவும் (CGST), 9 சதவிகிதம் மாநில ஜிஎஸ்டி-யாகவும் (SGST)) 18 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொதுவாக வங்கியில்
இரண்டுவிதமான வருவாய்கள் உள்ளன. ஒன்று, வட்டியாக வருவது. மற்றொன்று, இதர வருவாய்கள். ஜிஎஸ்டி வரிகள், இதர வருவாய்களான கமிஷன், எக்ஸ்சேஞ்ச், கடன் ஆய்வுக்கட்டணம் போன்ற
வங்கிக்கட்டணங்கள் மீது வசூலிக்கப்படும். இந்தக் கட்டணங்கள் எல்லாம் வங்கிக்கு வருவாய்
என்பதால் இவற்றின் மீது அரசு வரி வசூலிக்கும். அந்த வரியே ஜிஎஸ்டி.
வாடிக்கையாளரிடமிருந்து வசூலிக்கப்படும்
கட்டணங்கள்!
- வாடிக்கையாளருக்கு எம்.ஐ.சி.ஆர் காசோலை வழங்கல்,
- இ-கணக்கு அறிக்கைகள் மற்றும் வங்கிக்கணக்குப் புத்தக நகல் வழங்கல்,
- காசோலைக்குப் பணம் வழங்கலை நிறுத்துதல் (ஸ்டாப் பேமென்ட்) போன்றவற்றுக்கான கட்டணங்கள்,
- கணக்கு இருப்பு விசாரணை (Balance Enquiry) கட்டணம்,
- கணக்கை முடிப்பதற்கான கட்டணம்,
- இயக்காத கணக்கின் மீதான கட்டணம்,
- கேட்புக் காசோலைகள் (Demand Draft)/வங்கிக் கேட்புக் காசோலை (Bankers Pay Order) கட்டணம்,
- கேட்புக் காசோலைகள் ரத்துசெய்தல் கட்டணம்,
- கேட்புக் காசோலை நகல் வழங்கல் கட்டணம்,
- லெட்ஜர் தாள் கட்டணங்கள்.
- வாடிக்கையாளருக்காகக் காசோலை, பில் தொகை வசூலித்தல் கட்டணம்,
- கேட்புக் காசோலை, வெளியூர் காசோலைகள் வாங்குதல்/டிஸ்கவுன்ட் செய்தலுக்கான கட்டணம்.
- வாடிக்கையாளரின் கேட்பு வகை பில்கள், காலக்கெடு பில்கள் போன்றவற்றை வாங்கி அல்லது தள்ளுபடி செய்து கணக்கில் பணம் வரவு வைப்பதற்கான கட்டணம் எனப் பலதரப்பட்ட சேவைகளுக்கு வங்கிகள் ஜிஎஸ்டி வரி வசூலிக்கும்.
இதுமட்டுமின்றி, வாடிக்கையாளர்களின் சார்பில் வங்கிகள் பல்வேறு சேவைகளைச்
செய்கின்றன. அவற்றில் முக்கியமானது பணத்தை, அதே கிளைக்குள்ளேயோ, அதே வங்கிக்குள்ளேயோ, வேறு வங்கிகளுக்கோ, வெளியூர்
நிறுவனங்களுக்கோ, வெளியூருக்கோ வாடிக்கையாளரின்
கட்டளைப்படி பிறர் கணக்குக்கு அனுப்புதல். உதாரணமாக, ஆர்டிஜிஎஸ்/நெஃப்ட் மூலம் அல்லது ஆன்லைன் ஆர்டிஜி.எஸ் மூலம் பணம்
அனுப்பும் கட்டணங்கள். நீண்டகால வைப்புத்தொகை ரசீது - நகல் வழங்கல் கட்டணம், பணமின்றி திரும்பிய காசோலையைத் திருப்பி அனுப்பும் கட்டணம், குறுஞ்செய்திக் கட்டணம், கையொப்பம் சான்றளித்தல் மற்றும் புகைப்படம் சான்றளிப்பு ஒப்பம்
கட்டணம், கேட்புக் காசோலை புதுப்பித்தல்
கட்டணம், வைப்புத்தொகையைப் பிற வங்கிக்குச்
செலுத்தும் கட்டணம் போன்ற கட்டணங்களும் உண்டு. இவை யாவும் சேவைகள் என்பதால்
இவற்றின் மீதும் 18 சதவிகிதம் ஜிஎஸ்டி உண்டு.
கடன் வாடிக்கையாளர்கள்!
கடன் வாடிக்கையாளர்களும் வங்கியில்
பல்வேறு கட்டணங்களுக்கு உள்ளாகின்றனர். எல்லா கடன்தாரர்களுக்கும் எல்லா
கட்டணங்களும் பொருந்தாது. முன்னுரிமைக் கடன், வர்த்தகக் கடன் போன்ற கடன் வகைக்கேற்ப, கடன் தொகைக்கேற்ப கட்டணங்களும், கட்டணங்களின் அளவும் மாறுபடும். கடனுக்கு விண்ணப்பிக்கையில்
வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் ஆய்வுக்கட்டணம். கடன் வேட்பு முன்மொழிவின்
மீதான மதிப்பீடு (appraisal) கட்டணம், தொழில்நுட்ப, பொருளாதார நம்பகத்தன்மை சான்றறிக்கை
கட்டணம், அடமான கட்டணம், தொழில்நுட்ப, பொருளாதார நம்பகத்தன்மை சான்றறிக்கை
(TEV) கட்டணம், கடன் அனுமதியில் மாற்றம் செய்வதற்கான
கட்டணம், கடன்தீர் ஆற்றல் சான்றிதழ் (solvency
ceritificate), பழைய ஆவணங்கள் கேட்புக் கட்டணம், கடன் தொகையை முன்னதாகவே செலுத்துதற்கான கட்டணம் போன்ற கட்டணங்கள்
உள்ளன.
கடன் அனுமதி பெற்று கடன் ஆவணங்கள்
பூர்த்திசெய்யும் கட்டத்தில் ஆவணக் கட்டணம், ஆவண நகல்கள் வழங்களுக்கான கட்டணம், தொழிலக/சரக்கு ஆய்வு (Inspection) கட்டணம், கடன் புதுப்பித்தல் கட்டணம், வட்டிச் சான்றிதழ் கட்டணம் போன்றவை பெரும்பாலான கடன்
கணக்குகளுக்குப் பொருந்தும். இவையன்றி வங்கி உத்தரவாதப் பத்திரம் (BG), கடன் உறுதி மடல் (LC) போன்ற நிதிசாரா கடன் வசதிகளும் வங்கியில் உள்ளன.
வங்கி உத்தரவாதங்கள் இரு
வகைப்படும்.
செயல்பாடு சார்ந்த வங்கி உத்தரவாதப் பத்திரக் கட்டணம், நிதி சார்ந்த வங்கி உத்தரவாதப் பத்திரக் கட்டணம். கடன் ஒப்பந்த
ஆவணங்கள் வழக்குரைஞர் ஆவண சரிபார்ப்பு சான்று (vetting) கட்டணம், வாடிக்கையாளர்களின் ஏற்றுமதி/இறக்குமதி
ஆவணங்கள் கையாளும் கட்டணம், ஏற்றுமதி/இறக்குமதி
பரிவர்த்தனைகளில் வசூலிக்கப்படும் கமிஷன் கட்டணம், வெளிநாட்டு கரன்சி விற்றல்/வாங்கலில் உள்ள கட்டணம் போன்ற
கட்டணங்களும் உண்டு. வட்டிகள் தவிர்த்த இந்த அனைத்துக் கட்டணங்களின் மீதும்
ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்.
வங்கியில் சில கட்டணங்கள் ஓர் ஆண்டு
காலத்துக்கும் மேலான காலத்துக்கு அல்லது இரண்டு நிதியாண்டுகளுக்கும் உரியதாக
வசூலிக்கப்பட்டு வங்கி நிர்வகிக்கும் தனிக்கணக்கில் வைத்துக்கொள்ளப்படும்.
உதாரணமாக, பாதுகாப்புப் பெட்டகக் கட்டணம், வங்கி உத்தரவாதப் பத்திர (BG) கட்டணம், கடன் உறுதி மடல் (LC) கட்டணம் போன்ற, முன்னதாகவே
மொத்தமாகப் பெறப்பட்டு, பிற்பாடு படிப்படியாக வருவாய் (amortization)
கட்டணங்கள் மீது ஜிஎஸ்டி வரி
முன்னதாகவே மொத்தக் கட்டணத்துடன் வசூலிக்கப்பட்டு வங்கி நிர்வகிக்கும்
தனிக்கணக்கில் வைத்துக்கொள்ளப்படும். அத்தகைய கட்டணங்கள் மீது ஜிஎஸ்டி-யும்
வசூலிக்கப்படும். ஆனால், அவற்றுக்கு வரி ஏற்றிய விலைப்பட்டி
(invoice)
வழங்காமல் ரசீது மட்டுமே
வழங்கப்படும்.
சிறப்பு வாடிக்கையாளர்களுக்கு இலவச
சேவைகள் வழங்கும்போது, அவை முற்றிலும் இலவசமாகவோ, பகுதித் தொகை தள்ளுபடியாகவோ இருக்கக்கூடும். அந்நேரத்தில், ஜிஎஸ்டி வரிவிதிப்புக்கு அதே சேவையை மற்ற வாடிக்கையாளர்களுக்கு
வழங்கப்பட்ட சேவையின் சந்தை மதிப்புக்கணக்கில் கொள்ளப்படும். அத்தகையவற்றில்
சேவையின் மீதான ஜிஎஸ்டி-யை வாடிக்கையாளர்களே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
வாடிக்கையாளரிடமிருந்து கட்டணம்
முன்தொகையாக வசூலிக்கையில், (உதாரணமாக, கடனுக்கு விண்ணப்பிக்கையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து
பெறப்படும் 50 சதவிகிதக் கட்டண முன்தொகை), ஜிஎஸ்டி-யும் அப்போதே வசூலிக்கப்படும். செலவினத் தொகையை
வாடிக்கையாளரிடம் இருந்து பெறும்போது (உதாரணமாக, பொறியாளர் கட்டணம், வழக்குரைஞர்
கட்டணம், சரக்கு இருப்புத் தணிக்கையாளர்
கட்டணம் போன்றவை) வங்கியின் பெயரில் விலைப்பட்டி எழுதப்பட்ட பின்பும், அந்தத் தொகை நேரடியாக வாடிக்கையாளரின் கணக்கிலிருந்து
எடுக்கப்படும். அதாவது, அதை வாடிக்கையாளர் செலுத்த
வேண்டும். வாராக் கடனைப் பொறுத்தவரையில், வங்கியால் செலுத்தப்பட்ட அப்படிப்பட்ட கட்டணம் (விலைப்பட்டித் தொகை
+ ஜி.எஸ்.டி) வாடிக்கையாளரிடம் இருந்து கடன் தொகை வசூலிக்கும்போதே வசூல்
செய்யப்படும்.
வரிவிதிப்புக்குரிய எல்லா சேவைகளின்
மீதும் ஜிஎஸ்டி செலுத்த வேண்டும். வங்கியில், இழப்புக் கணக்காகக் குறிப்பிட்டு கடன்தாரர்களின் பட்டியலிலிருந்து
நீக்கப்பட்ட கணக்கில் பெறப்படும் வரவுகளுக்கு ஜிஎஸ்டி வரிவிலக்கு
அளிக்கப்பட்டுள்ளது. வங்கி சேவைகள் மீதான ஜிஎஸ்டி வரிகள் தவிர்க்க முடியாதவை
என்பதால், வாடிக்கையாளர் அனைவரும் அவசியம்
ஜிஎஸ்டிவரியை செலுத்தவேண்டியது இருக்கும்" என்றார் மு.எ.பிரபாகரபாபு.
சோ.கார்த்திகேயன்
நன்றி : விகடன் செய்திகள் - 13.07.2017
No comments:
Post a Comment