disalbe Right click

Monday, July 10, 2017

சங்கங்களை பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?

சங்கங்களை பதிவு செய்ய என்ன செய்ய வேண்டும்?
சில காரியங்களை தனி ஒரு நபரால் செய்ய முடியாது. அதனைச் செய்வதற்கு பல நபர்கள் தேவைப்படும். அந்த நபர்களை சட்டபூர்வமாக ஒன்றிணைக்க சங்கம் ஏற்படுத்துவது அவசியம்.
ஒரு சங்கத்தை அமைப்பதற்கு அதிக நபர்கள் தேவையில்லை. குறைந்தபட்சம் 7 நபர்கள் இருந்தால் போதும். ஆனால், அவர்களுக்கு வயது 18 ஆகியிருக்க வேண்டும்.
சங்கம் அமைத்தால் மட்டும் போதாது. அதனை தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டம், 1975 மற்றும் விதிகள் 1978ன்படி மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் பதிவு செய்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அது சட்டப்படியான அங்கீகாரத்தைப் பெறுகின்றது.
எந்த ஒரு அமைப்பாக இருந்தாலும் அதன் உறுப்பினர்கள் எண்ணிக்கை 20தாண்டிவிட்டாலோ, அதனுடைய ஆண்டு வருமானம் அல்லது செலவு ரூ.10,000/-த்தை தாண்டிவிட்டாலோ மூன்று மாத காலத்திற்குள் சட்டப்படி கண்டிப்பாக அதனை ஒரு சங்கமாக பதிவு செய்ய வேண்டும்.
சங்கத்திற்கு பெயர் வைத்தல்
ஒரு சங்கம் ஏற்படுத்த முதலில் அதற்கு ஒரு நல்ல பெயரை சூட்டுவது மிக அவசியம். ஆனால், சங்கத்தின் பெயர் இந்திய இறையாண்மைக்கு மற்றும் இந்திய சட்ட திட்டங்களுக்கு எதிராக இருக்கக்கூடாது. மேலும் வன்முறையைத் தூண்டுவதாகவோ, அறுவறுப்பானதாகவோ மற்றும் ஆபாசமாகவோ இருக்கக் கூடாது. ஏற்கனவே செயல்பட்டு வருகின்ற ஒரு சங்கத்தின் பெயரை மற்றோரு சங்கத்திற்கு சூட்டுவதும் கூடாது.  இதுபற்றி சங்கத்தை பதிவு செய்ய மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் நீங்கள் விண்ணப்பிக்கும் போது அவர் உங்களுக்கு வழி காட்டுவார். 
பெயர் மாற்றம்
ஏற்கனவே ஒரு பெயரில் செயல்பட்டு வருகின்ற சங்கம் மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் ஒப்புதல் பெற்று தன்னுடைய பெயரை பொதுக்குழு கூட்டத்தில் இயற்றப்படுகின்ற சிறப்புத் தீர்மானம் மூலம் பொதுக்குழு கூட்டம் நடந்த தினத்தில் இருந்து 90 நாட்களுக்குள் மாற்றிக் கொள்ளலாம்.
பெயர் பலகை
அலுவலகம் ஒன்றை ஏற்படுத்தி, சங்கத்தின் பெயர் மற்றும் முகவரி தெளிவாக தெரியுமாறு தமிழில் எழுதி, முகப்பில் விளம்பர பெயர் பலகை மாட்ட வேண்டும். ஒருவேளை சங்கத்தின் பெயர் வேறு மொழியில் இருந்தால் அதன் உச்சரிப்பை தமிழில் எழுதி கண்டிப்பாக போர்டு வைக்க வேண்டும்.
சங்க நிர்வாகக் குழு
சங்கத்தை நிர்வகிக்க குறைந்தபட்சம் 3 உறுப்பினர்கள் நியமிக்கப்பட வேண்டும். அதிகபட்சமாக எத்தனை நபர்கள் வேண்டுமானாலும் நியமித்துக் கொள்ளலாம். சங்க துணை விதிகள் (By Laws) ஏற்படுத்தப் பட்டிருந்தால், அதில் குறிப்பிட்ட அளவின்படிதான் நிர்வாகிகள் நியமிக்கப்பட வேண்டும்.
இந்த நிர்வாகக்குழு உறுப்பினர்களை பொதுக்குழுக்கூட்டம் மூலம் சங்கத்தின் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். இவர்களது பதவிக்காலம் 3 ஆண்டுகளுக்கு மேல் கண்டிப்பாக இருக்கக்கூடாது. அதே நேரத்தில், சங்க உறுப்பினர்கள் மறுபடியும் சங்க நிர்வாகிகளாக இவர்களையே மீண்டும் தேர்ந்தெடுக்க எந்தவித தடையும் இல்லை.
இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் பெயர் பட்டியலை FORM-VII மூலமாக மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் சமர்ப்பித்து அவரது சான்றொப்பம் பெற வேண்டும்.
பொதுக்குழுக் கூட்டம்
ஆண்டுக்கு ஒரு முறை பொதுக்குழுக் கூட்டம் கண்டிப்பாக கூட்டப்பட வேண்டும். சட்டப்படி கூட்டம் நடைபெறும் நாளுக்கு 21 நாட்கள் முன்னதாக உறுப்பினர்களுக்கு கூட்டம் பற்றிய அறிவிப்பானது அறிவிக்கப்பட வேண்டும். அந்த அறிவிப்பில் நாள், இடம், கூட்டத்தின் குறிக்கோள் ஆகியவற்றை கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்.
அந்தக் கூட்டத்தில் சங்கத்தின் ஆண்டு வரவு செலவு கணக்குகள் தணிக்கை செய்யப்பட்டு (நகல்கள்) உறுப்பினர்களுக்கு வழங்கி அவர்களின் ஒப்புதல் பெற வேண்டும். மற்றும் அதில் இயற்றப்படும் தீர்மானங்கள் நிர்ணயம் செய்யப்பட்ட உறுப்பினர்களால் (Quorum) ஏற்றுக் கொள்ளப்பட்டு கூட்ட நடவடிக்கை குறிப்பேடு என்ற Minutes Bookல் கையெழுத்திடப்பட வேண்டும். இதனையும் மாவட்டப் பதிவாளர் அவர்களிடம் சமர்ப்பித்து அவரது சான்றொப்பம் பெற வேண்டும்.
உறுப்பினர்கள் மாற்றம்
உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் நீக்கம் சம்பந்தமான விபரங்களை FORM-VI மூலமாக விண்ணப்பித்து மாவட்டப் பதிவாளர் அவர்களின் சான்றொப்பம் பெற வேண்டும்.
சங்க துணை விதிகள்
சங்கத்திற்கென்று சட்டதிட்டங்களை ஏற்படுத்தி பொதுக்குழு கூட்டத்தில் உறுப்பினர்களின் ஆதரவுடன் ஏற்றுக் கொள்ளப்பட்டு அதனை தீர்மானமாக நிறைவேற்றி மாவட்டப் பதிவாளரின் ஒப்புதலோடு  சங்கத்தை நிர்வகிக்கலாம்.
மாவட்டப் பதிவாளர்
சங்க நிர்வாகிகளால் சமர்ப்பிக்கப்படுகின்ற ஆவணங்களை மாவட்டப் பதிவாளர் அவர்கள் (தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்ட விதிகள் 1978 - விதி எண்: 50ன்படி) ஆய்வு செய்தே ஏற்றுக் கொள்ள வேண்டும்.  
கலைப்பு
சட்டவிரோதமாக ஒரு சங்கம் செயல்படுவதாக தெரியவந்தால், உரிய விசாரணைக்குப் பிறகு அதனை கலைக்க மாவட்டப் பதிவாளர் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. 
******************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி


No comments:

Post a Comment