மண்டபம் தராததால் கோவிலில் திருமணம்,
பாதிக்கப்பட்டவருக்கு ரூ.13 லட்சம் இழப்பீடு!
சென்னை : முன்பதிவு செய்தபடி, திருமண மண்டபத்தை வழங்காத நிர்வாகம், வாடிக்கையாளருக்கு 13 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, மாநில நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை, மாநில நுகர்வோர் நீதிமன்றத்தில், பீர்க்கன்காரணையைச் சேர்ந்த நடேசன் தாக்கல் செய்த மனு:
சென்னை, குரோம்பேட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், 2009ம் ஆண்டு, பிப்., 1ம் தேதி திருமண வரவேற்பும், 2ம் தேதி திருமணம் நடத்தவும் முன்கூட்டியே முன்பதிவு செய்தேன்.
மண்டப வாடகை மற்றும் அலங்காரம் செய்வதற்கான கட்டணமாக, 93 ஆயிரம் ரூபாய் செலுத்தினேன்.
திட்டமிட்டபடி, 1ம் தேதி மதியம், 2:00 மணிக்கு திருமண
மண்டபத்திற்கு சென்றபோது, அங்கு, வேறு ஒருவரின் திருமணத்திற்கு மண்டபம் கொடுக்கப்பட்டு இருந்தது.
அதிர்ச்சியடைந்த நான், நிர்வாகி மற்றும் மேலாளரிடம்
கேட்டதற்கு, பதில் ஏதும் சொல்லாமல் மழுப்பினர்.
உடனடியாக குரோம்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தேன். போலீசார் விசாரிக்க
வந்தபோது, நிர்வாகியும், மேலாளரும் வெளியேறி விட்டனர். இக்கட்டான நிலையில், உடனடியாக வேறு திருமணம் மண்டபம் கிடைக்காததால், அருகில் உள்ள கோவிலில் திருமணம் நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டது.
திருமணத்திற்கு, உணவு, இசை நிகழ்ச்சி, வாகன
ஏற்பாடுகளுக்காக, 3.43 லட்சம் ரூபாய்
சம்பந்தப்பட்டவர்களிடம் முன் கூட்டியே கொடுத்து விட்டேன். அனைத்தும் வீணானது.
கடும் மன உளைச்சலுக்கு ஆளானோம். இதனால், நாங்கள் திருமண மண்டபத்திற்கு செலுத்திய வாடகை மற்றும் உணவு
மற்றும் இசை நிகழ்ச்சி உட்பட செலவான தொகையும் உரிய இழப்பீடும் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில், கோரி இருந்தார்.
இந்த வழக்கில், நீதித்துறை உறுப்பினர் ஜெயராம், உறுப்பினர் பாக்கியவதி, 'பெஞ்ச்' பிறப்பித்த உத்தரவு:
திருமண மண்டப
நிர்வாகம், ஒப்புக்கொண்டபடி நடந்து கொள்ளாததால், மனுதாரர் மன உளைச்சலுக்கு ஆளானது விசாரணையில்
நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால், மண்பட வாடகை, விருந்து மற்றும் இசை நிகழ்ச்சிக்காக செலவிடப்பட்ட, 3.35 லட்சம் ரூபாயும், மன உளைச்சலுக்கு, 10 லட்சம் ரூபாயும், வழக்கு செலவு, 20 ஆயிரம் ரூபாயும், மனுதாரருக்கு, திருமண மண்டப நிர்வாகிகளும், மேலாளரும் வழங்க வேண்டும்.
இவ்வாறு உத்தரவிடப்பட்டது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 17.02.2016
No comments:
Post a Comment