குற்ற உடந்தை Abetment
கடந்த 17.02.2017 அன்று கொச்சியில் காரில் சென்று கொண்டிருந்தபோது, நடிகை பாவனா அவர்கள் கடத்தப்பட்டார். அந்தக் காரில் வைத்தே, கடத்தியவர்களால் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டார்.
- அடுத்த சில நாட்களில் குற்றவாளிகளான அந்த கார் டிரைவர் மார்ட்டின் மற்றும் பல்சர் சுனில் என்ற இருவர் உள்பட 6 பேர்கள் கேரள காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
- இந்நிலையில், அந்த வழக்கில் திடீர் திருப்பமாக, கேரள மாநில பிரபல நடிகர் திலீப் அவர்கள் 10.07.2017 அன்று கைது செய்யப்பட்டார். அந்தக் குற்றத்தைச் செய்ய மேற்கண்ட ஆறு பேர்களையும் தூண்டிய காரணத்தினாலேயே நடிகர் திலீப் கைது செய்யப்பட்டார்.
- உடந்தைக் குற்றவாளி என்றால் யார் என்பதை நீங்கள் தெரிந்து கொள்வதற்காகவே அனைவருக்கும் தெரிந்த மேற்கண்ட நிகழ்வை முதலிலேயே இங்கு கூறியுள்ளேன்.
இந்திய தண்டணைச் சட்டத்தின் கீழ் குற்ற உடந்தை என்றால் என்ன? உடந்தைக் குற்றவாளிகள் என்றால் யார்? என்பதைப் பற்றி விரிவாக கீழே காண்போம்.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 107
ஒரு குற்றச் செயலை செய்வதற்கு ஒருவருடன் வேறு ஒருவர் கீழ்க்கண்ட மூன்று வழிகளில் உடந்தையாக இருந்தால் அவர் உடந்தைக் குற்றவாளி ஆவார்.
- ➤ முதலாவதாக, ஒரு குற்றச் செயலை யாரையாவது செய்யத் தூண்டுவது.
- ➤ இரண்டாவதாக, ஒரு குற்றச் செயலை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுடன் இணைந்து சட்டவிரோதமாக அதனைச் செய்வது.
- ➤ மூன்றாவதாக, ஒரு குற்றச் செயலை செய்வதற்கு ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களுக்கு ஆலோசணை வழங்குவது.
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 108
குற்ற உடந்தையர் (Abettor)
- ஒரு குற்றச் செயலுக்கு யார் உடந்தையாக இருக்கிறாரோ அல்லது ஒரு குற்றத்தில் முடிகின்ற செயலுக்கு யார் உடந்தையாக இருக்கிறாரோ அவர் அந்தக் குற்றத்தின் உடந்தையர் ஆவார்.
- ஆனால், செய்யப்பட்ட குற்றமானது குற்ற உடந்தையருக்கு இருக்கின்ற ஒத்த கருத்துடனும், அறிவுடனும் கூடிய திறனுடைய நபரால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
குற்ற உடந்தையின் முக்கியமான ஐந்து ஆக்கக் கூறுகள்
- சட்டப்படி செய்ய வேண்டிய செயலை செய்யாமலிருப்பவருக்கு உடந்தையாக இருப்பதும் குற்ற உடந்தையாகும்.
- ஒருவர் ஒரு குற்றச் செயலுக்கு உடந்தையாக இருந்து, ஆனால் அந்தச் செயலின் விளைவானது குற்றமாக அமையாவிட்டாலும் அவர் குற்ற உடந்தையராகவே கொள்ளப்படுவார்.
- குற்ற உடந்தையாக இருக்கின்ற நபர் சட்டத் தகுதி பெற்றிருக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. அதே போல அந்தக் குற்றத்தை புரிபவன் அதே கருத்தை கொண்டிருக்க வேண்டும் என்பத்ம் அவசியமில்லை.
- குற்ற உடந்தைக்கே உடந்தையாக இருப்பதும் குற்றம்தான்.
- சதி ஒன்று நடைபெறுவதற்கு உடந்தையாக இருக்கின்ற குற்ற உடந்தையாளர் அந்த சதியின் மூலமாக நடைபெறுகின்ற குற்றத்தில் பங்கு பெற வேண்டும் என்பது இல்லை.
குற்ற உடந்தைக்கு தண்டணை- பிரிவு 109
எந்தக் குற்றம் ந்டைபெற உடந்தையாக ஒருவர் இருக்கின்றாரோ, அவரும் அந்தக் குற்றத்திற்கு இந்திய தண்டணைச் சட்டம் வகுத்துள்ள தண்டணையை அனுபவிக்க வேண்டும்.
******************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No comments:
Post a Comment