disalbe Right click

Friday, August 11, 2017

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு

பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளுக்கு ஐகோர்ட் உத்தரவு
அனுமதி பெறாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கை
பள்ளிக்கல்வி அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கேள்வி
சென்னை:'அரசு அனுமதி பெறாத பள்ளிகளில், மாணவர்கள் சேர்க்கை நடக்கும் போது, அதிகாரிகள் விரைந்து ஏன் நடவடிக்கை எடுக்க வில்லை?' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தஞ்சை மாவட்டத்தில், அரசு அனுமதியின்றி துவங்கப்பட்ட பள்ளியில், 200 மாணவர்கள் படித்து வந்தனர். அந்த மாணவர்களை, வேறு பள்ளிகளில் சேர்க்க, அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்தனர். அதை எதிர்த்து, பள்ளி நிர்வாகம், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. மனுவை, நீதிபதி கிருபாகரன் விசாரித்தார்.
தஞ்சையில் உள்ள, மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர் தாக்கல் செய்த பதில் மனுவில், 'அனுமதி கேட்டு, பள்ளி நிர்வாகம் விண்ணப்பித்துள்ளது; ஆனால், ஒப்புதல் பெறவில்லை. அதனால் தான், வேறு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க உத்தரவு பிறப்பிக்கபட்டது' என,கூறப்பட்டது.
நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த உத்தரவு:
ஒரு பகுதியில், அரசு அனுமதியுடன் எத்தனை பள்ளிகள் இயங்குகின்றன என்பது, கல்வித் துறை அதிகாரிகளுக்கு தெரியும். அனுமதி பெறாமல் மாணவர்களை சேர்த்தால், அதிகாரிகள் உடனுக்குடன் செயல்பட வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளி அதிகாரிகளுக்கு எதிராக, நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியின்றி பள்ளிகள் திறக்கப்பட்டு, அனுமதி கோரிய பள்ளியின் விண்ணப்பம் திருப்பி அனுப்பப்பட்ட பின்னே, கல்வித்துறை அதிகாரிகள் துாக்கத்தில் இருந்து விழித்து, மாணவர்களை வேறு பள்ளிகளில் சேர்க்க உத்தரவு பிறப்பிக்கின்றனர்.
கல்வித்துறை அதிகாரிகள், சரியாக செயல்படாததால், இத்தகைய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால், மாணவர்களின் உரிமைகள் மீறப்பட்டு, அவர்களின் எதிர்காலம் பாழடிக்கப்படுகிறது. எனவே, கீழ்கண்ட கேள்விகளுக்கு,பதிலளிக்க வேண்டும்.
➤ பள்ளிகளுக்கு அனுமதி கோரி விண்ணப்பம் வரும் போது, அதிகாரிகள் ஏன் முறையாக செயல்பட வில்லை.
 மாணவர்கள் சேர்க்கையை அந்த பள்ளிகள் துவங்கி விட்டதா, இல்லையா என்பதை ஏன் சரிபார்க்கவில்லை?
 மாணவர்கள் சேர்க்கப்பட்டிருந்தால், அவர்களின் நலன் கருதி, துவக்கத்திலேயே அதிகாரிகள் ஏன் விரைந்து செயல்படவில்லை?
 அனுமதி பெறாமல் மாணவர்களை சேர்த்த பள்ளிகள் மீது, ஏன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை?
 அனுமதி பெறாமல், ரகசியமாக மாணவர் களை சேர்க்கும் பள்ளிகளை தடுக்க, சட்டத்தின் கீழ் எந்தெந்த வழிகள் உள்ளன?
➤ தமிழகம் முழுவதும், அரசின் அனுமதியின்றி எவ்வளவு பள்ளிகள் இயங்குகின்றன?
மேற்கூறிய விபரங்களை, வரும், 16க்குள் வழங்க வேண்டும். அரசின் அனுமதி பெறாமல் இயங்கும் பள்ளிகளில், மாணவர்களை சேர்ப்பதை தடுக்க, விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.
நன்றி : தினமலர் நாளிதழ் -11.08.2017

No comments:

Post a Comment