disalbe Right click

Wednesday, August 16, 2017

தொலை தூரக் கல்வியில் முறைகேடு - தூங்கும் தமிழக அரசு

தொலை தூரக் கல்வியில் முறைகேடு - தூங்கும் தமிழக அரசு!
       பல்கலை மானியக்குழு தடை, ஐகோர்ட் உத்தரவு என எதையுமே மதிக்காமல்,  பாரதியார் பல்கலை சார்பில், தொலைதுாரக் கல்வி மையங்கள் நடத்தப்பட்டு, விதவிதமான பட்டப் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை தொடர்ந்து நடந்து வருகிறது; ஆனால், எந்த நடவடிக்கையுமே எடுக்காமல், தமிழக உயர் கல்வித்துறை கைகட்டி வேடிக்கை பார்க்கிறது.
நம் நாட்டில், நான்கு விதமான கல்வி நிறுவனங்கள் நடத்துவதற்கு, இந்திய அரசியலமைப்புச் சட்டம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி, அரசு சார்பிலும், அரசின் நிதியுதவியுடனும், முழுக்க முழுக்க சுயநிதியில் தனியாராலும் கல்வி நிறுவனங்கள் நடத்தப்படுகின்றன. இவற்றைத் தவிர்த்து, அரசியலமைப்பு உரிமைகளின் அடிப்படையில், அரசு மற்றும் தனியார் சார்பில், பல்கலைகள் நடத்தவும் அனுமதிக்கப் படுகிறது.
விதிமுறைகளுக்கு பஞ்சமில்லை!
அரசால் நடத்தப்படும் பல்கலைகளுக்கு,மத்திய அரசின் பல்கலை மானியக்குழு (U.G.C.,)சார்பில், நிதி வழங்கப்படுகிறது. இந்த பல்கலை நிர்வாகங்களின் கீழ், அரசு மற்றும் தனியார் கலை, அறிவியல் கல்லுாரிகள் இணைக்கப்படுகின்றன. பல்கலை மானியக்குழு வகுத்துள்ள விதி முறைகளின்படி மட்டுமே, இந்த கல்லுாரிகளில் பாடத்திட்டங்கள், பட்டப்படிப்புகள் நடத்தப்பட வேண்டும்; கல்லுாரிகளின் கட்டமைப்பு, ஆசிரியர் நியமனம் போன்றவற்றுக்கும் ஏராளமான விதிமுறைகள் இருக்கின்றன.
பல்கலையுடன் இணைக்கப்பட்ட கல்லுாரிகளில், தேர்வு நடத்துவது, விடைத்தாள் திருத்துவது போன்றவையும் பல்கலை மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படியே நடத்தப்படுவது அவசியம். இக்கல்லுாரிகளில் சேரும் மாணவர்களுக்கு, அவரவர் பெற்றுள்ள பிளஸ் 2 மதிப்பெண் அல்லது இளங்கலை பட்டத்தில் பெற்ற மதிப்பெண் சதவீதம் அடிபடையிலேயே, முறையே இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளில், மாணவர்கள் சேர்க்கை நடைபெறும்.
மாணவர்களின் செமஸ்டர் வருகைப்பதிவு, படித்து தேர்வை எதிர்கொள்ளும் விதம் ஆகியவற்றை மதிப்பிட்டே, ஒரு மாணவர் பட்டம் பெற முடியும். ஆனால், சமீபகாலமாக, தமிழகத்தில் பெட்டிக்கடை போன்ற கட்டிடங்களில், தொலைதுாரக் கல்வி மையம் என்ற பெயரில், பட்டப்படிப்புகள், தெருவோரக்கடையில் விற்கப்படும் காய்கறிக் கூறு போல கூவிக்கூவி விற்கும் அவலம் உருவாகியுள்ளது.
இந்த முறைகேட்டில், முதலிடம் பிடித்துள்ளது, கோவை பாரதியார் பல்கலைக்கழகம். ஏழை, எளிய மாணவர்கள், பணிக்குச் செல்வோர் ஆகியோர், மேற்படிப்புப் படிக்க வேண்டும் என்பதற்காகவே, தொலை துார கல்வி மையங்களை நடத்திக்கொள்ளலாம் என்று பல்கலை மானியக்குழு அனுமதி அளிக்கிறது. இவற்றை கண்காணிக்க, தொலைதுாரக் கல்வி அமைப்பு (Distance Education Bereau) என்ற அமைப்பும், யு.ஜி.சி.,யின் கீழ் செயல்படுகிறது. இந்த அமைப்பு, தொலைதுாரக் கல்வி மையங்களுக்கு, பல்வேறு வரன்முறைகளையும் உருவாக்கியுள்ளது.
எல்லை தாண்டிய 'சேவை'
இந்த விதிகளின்படி, ஒவ்வொரு பல்கலையும் அதனதன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே, இந்த மையங்களை நடத்திக் கொள்ள வேண்டும்; அவற்றையும் பல்கலை நிர்வாகமே நடத்த வேண்டும். பல்கலை அனுமதித்துள்ள பட்டப்படிப்புகளுக்கு மட்டுமே, இந்த மையங்களில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு விதிமுறைகளும் உள்ளன. ஆனால், இவை எதையுமே பாரதியார் பல்கலை நிர்வாகம் மதிப்பதே இல்லை.
சி.பி.ஓ.பி., (Centre for Participatory and Online Programme), 
சி.சி.ஐ.ஐ., (Centre for Colabration of Industries and Institutions), 
சி.பி.பி., (Centre for Participatory Programme) 
என பல்வேறு பெயர்களில், தொலைதுார கல்வி மையங்களை உருவாக்க அனுமதியை   வாரி   வழங்கியுள்ளது.   கடந்த 2007 ம் ஆண்டில்,     ஒன்றிரண்டாக துவங்கிய இந்த மையங்கள், இப்போது வெளிநாடுகள்,வெளி மாநிலங்கள் என உலகம் முழுவதும் 360க்கும் அதிகமாகவுள்ளன.
வெறும் பத்துக்குப் பத்து சதுரடி பரப்பிலான கட்டிடங்களில், ஏதாவது ஒரு பெயரில் இந்த மையத்தைத் துவக்கி, பாரதியார் பல்கலை சான்று தருவதாகக் கூறி, மாணவர்கள் சேர்க்கப் படுகின்றனர்
பல்கலை எல்லையைத் தாண்டி நடத்தப்படும் இந்த மையங்களில், எந்த கலை, அறிவியல் கல்லுாரியிலும் நடத்தப்படாத புதுப்புது பட்டப்படிப்புகள் படிக்கலாம் என்று விளம்பரம் தரப்படுகிறது.
               பாரதியார் பல்கலையே அனுமதி தர முடியாத மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்பு படிக்கலாம் என்றும் துணிச்சலோடு இந்த மையங்கள் விளம்பரங்கள் செய்கின்றன. அதற்கான தேர்வையும் நடத்தி, பல்கலை சான்றையும் தருகின்றன. இதுபோன்ற எந்த பட்டப்படிப்புக்கான சான்றும் செல்லாது என்று, பல்கலை மானியக்குழு பகிரங்கமாகவே அறிவித்து விட்டது. ஆனால், இன்று வரையிலும் இந்த மையங்களில் சேரும் மாணவர்களுக்கு, பாரதியார் பல்கலை சான்று, தாராளமயமாக வழங்கப்படுகிறது.
இந்த மாணவர்களுக்கான தேர்வு நடத்துவது, விடை தாள் திருத்துவது எல்லாமே, சட்ட விரோதமாக நடத்தப்படுகிறது என்று கல்வியாளர்கள் பகிரங்க குற்றம்சாட்டி வருகின்றனர். எதைப்பற்றியும், பல்கலை நிர்வாகம் கவலைப்படுவதே இல்லை. நான்கு ஆண்டுகளில், இந்த மையங்களின் விதி மீறல், உச்சத்துக்குச் சென்று விட்டது. இதனால், கல்லுாரிக்குச் சென்று, கஷ்டப்பட்டு படித்து பட்டம் வாங்கும் மாணவர்கள், கடும் விரக்திக்கு உள்ளாகியுள்ளனர்.
தரமான மாணவர்களை உருவாக்க அரும்பாடுபட்டு வரும் அரசு, அரசு உதவி பெறும் கல்லுாரிகள், பல கோடி ரூபாய் முதலீடு செய்து கல்லுாரிகளை நடத்தும் சுயநிதிக் கல்லுாரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள் எல்லோரும் பெரும் கொதிப்புக்கு ஆளாகியுள்ளனர். பாரதியார் பல்கலையின் இந்த அத்துமீறலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, சிண்டிகேட், செனட் உறுப்பினர்களாலும் முடியவில்லை; மாறாக, பெரும்பாலானோர், இதற்கு துணை போவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
இதில் பெரிய அளவில் காசு வருவது தெரிந்து, மதுரை காமராஜர், அழகப்பா பல்கலைகளும் இதே பாணியில் செல்வதை அறிந்த பின்பே நிலைமை மோசமாவதை உணர்ந்து, தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம், இப்பிரச்னையைக் கையில் எடுத்தது. இந்த சங்கம்,  தாக்கல் செய்துள்ள வழக்கின் அடிப்படையில், இந்த மையங்களை மூடவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. சங்கத்தின் புகாரை ஏற்று, தொலைதுார கல்வி மையம் நடத்தும் அனுமதியும் யு.ஜி.சி.,யால் மறுக்கப்பட்டுள்ளது.
               இவ்வழக்கு தொடர்பாக, பல்கலை நிர்வாகம் தாக்கல் செய்த பிரமாணப்பத்திரத்தில், 'நடப்பு கல்வியாண்டில், இந்த மையங்களுக்கான அனுமதியை விலக்கிக் கொள்வதாக' உறுதி தந்தது. ஆனால், இப்போது வரை எந்த மையமும் மூடப்படவில்லை; மாணவர் சேர்க்கையும் நிற்கவில்லை. இதனால், கொதித்துப்போன சுயநிதி கல்லுாரிகள் சங்கத்தினர், கடந்த ஜூலை 19 அன்று, பல்கலை துணைவேந்தர் கணபதியை அவரது அலுவலகத்தில் முற்றுகையிட்டனர்.
சொன்னது என்னாச்சு?
அவர்களுக்கு பதிலளித்த துணைவேந்தர் கணபதி, 'இந்த மையங்களை மூடுவது தொடர்பாக, விரைவில் சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்டி, முடிவு எடுக்கப்படும்; அதற்கு 15 நாட்கள் அவகாசம் வேண்டும்' என்றார். அந்த அவகாசமும் முடிந்து விட்டது; சிண்டிகேட் கூட்டப்படவில்லை; எந்த மையத்தை மூடவும், பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவும் இல்லை. இதற்காக, உயர் கல்வித்துறையும் சிறிதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.
இதற்கிடையில், இந்த சங்கத்தின் புகார்குறித்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலருக்கும் பல்கலை மானியக்குழு, கடந்த ஆக.,4ல் கடிதம் அனுப்பியுள்ளது.
ஆனால், பாரதியார் பல்கலை மீது, உயர் கல்வித் துறையோ, தமிழக கவர்னரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில், தமிழகத்தில் பெறப்படும் பட்டங்களுக்கு, எந்த ஊரிலும் மதிப்பே இல்லாமல் போய் விடும் என்பது நிச்சயம்.
பல கோடி ரூபாய் முதலீடு செய்து கல்லுாரிகள் நடத்துவதும், மூன்று ஆண்டுகள் கல்லுாரிக்குச் சென்று படித்து பட்டம் வாங்குவதும் அர்த்தமற்றதாகி விடும். ஐகோர்ட் உத்தரவு, பல்கலை மானியக்குழு தடை அனைத்தையும் மீறி, இந்த மையங்களை நடத்த பல்கலை ஆதரிக்கிறது என்றால், அதில் பணம் விளையாடுகிறது என்பதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை; இருந்தும், இதைத் தடுக்க வேண்டிய பொறுப்பி லுள்ள உயர் கல்வித் துறை, எப்போது உறக்கம் கலைக்குமோ தெரியவில்லை.
எழுதினாலே 'பாஸ்' தான்!
பல்கலையுடன் இணைக்கப்பட்ட கலை, அறிவியல் கல்லுாரிகளில் படிக்கும் மாணவர் களின் விடைத்தாள்கள், ஏகப்பட்ட கட்டுப்பாடுகளுடன் (சென்ட்ரல் வேல்யேஷன்) திருத்தப்படுகின்றன. ஒரு நாளில், அதிகபட்சம் 40 விடைத்தாள்கள் மட்டுமே, ஒருவர் திருத்துவதற்குத் தரப்படுகிறது. ஆனால், சி.பி.ஓ.பி., உள்ளிட்ட தொலைதுாரக்கல்வி மையங்களில் தேர்வு எழுதுவோரின் விடைதாள்கள், மாலை 5:00 மணிக்கு மேல், திருத்தப்படுகின்றன.
அதிகபட்சம் ஒரு மணி நேரத்துக்குள், நுாற்றுக்கும் மேற்பட்ட விடைத்தாள்கள் திருத்தப்படுவதாகவும், அதற்கு ஆயிரம் ரூபாய் வீதம், ஆசிரியர்களுக்குக் கட்டணம் தரப்படுவதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. எதையும் பார்க்காமல், 'பாஸ் மார்க்' போட வேண்டும் என்பதே, இவர்களுக்குத் தரப்படும் ஒற்றைக் கட்டளை. இது பற்றி துணைவேந்தர் கணபதியிடம் கேட்டதற்கு, ''நேரம் இல்லாததால், மாலைக்கு மேல் அந்த விடைத்தாள்கள் திருத்தப்படுகின்றன,'' என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார்.
5 பல்கலைகளுக்கே அனுமதி!
நடப்பு கல்வியாண்டில், தொலைதுாரக் கல்வி மையங்கள் நடத்துவதற்கு, அனுமதிக்கபட்டு உள்ள பல்கலைகளின் பட்டியலை, பல்கலை மானியக்குழு, கடந்த மே 2 அன்று வெளியிட்டுள்ளது. இதில், தமிழகத்தில், தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலை கழகம், தக்ஷின் பாரத் ஹிந்தி பிரசார சபா, அன்னை தெரசா மகளிர் பல்கலை மற்றும் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகிய ஐந்து பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அது போன மாசம்...இது இந்த மாசம்!
தொலைதுாரக் கல்வி மையங்களின் அத்து மீறலைக் கண்டித்து, முற்றுகையிட்ட சுயநிதி கல்லுாரிகள் சங்க நிர்வாகிகளிடம், 'இன்னும் 15 நாட்களில் தீர்வு காண்பதாக' கூறியது பற்றியும், ஐகோர்ட்டில் 'இந்த மையங்களின் அனுமதியை இந்த கல்வியாண்டிலேயே திருப்பிக் கொள்வதாக' பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது குறித்தும் துணைவேந்தர் கணபதியிடம் கேட்டதற்கு, ''சிண்டிகேட் கூட்டத்தைக் கூட்டுவதற்கு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் கூட்டப்பட்டு, இந்த மையங்கள் குறித்து முடிவு எடுக்கப்படும். அடுத்த ஆண்டிலிருந்து மையங்களுக்கான அனுமதியை விலக்கிக் கொள்வதாகவே, ஐகோர்ட்டில் 'அபிடவிட்' தாக்கல் செய்துள்ளோம்,'' என்றார்.
எங்களிடம் சொன்ன கால அவகாசத்துக்குள், பாரதியார் பல்கலை துணைவேந்தர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இனியும் எடுப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இல்லை. உயர் கல்வித்துறை செயலரிடம் இதுபற்றி முறையிட்டுள்ளோம்; அடுத்த கட்டமாக, கவர்னரைச் சந்தித்து மனு கொடுத்து, நேரில் விளக்குவதற்கு முயற்சி செய்து வருகிறோம். அது கை கூடினால், நல்ல தீர்வு வருமென்று நம்புகிறோம்.
ஏ.எம்.எம்.கலீல்தலைவர், தமிழ்நாடு சுயநிதி கல்லுாரிகள் சங்கம்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 15.08.2017 

No comments:

Post a Comment