”குற்றமுறு சதி”யின்னா என்னாங்க?
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-120A
இந்திய தண்டணைச் சட்டத்தில், பிரிவு 120A குற்றமுறு சதியைப் பற்றி தெளிவாக குறிப்பிடுகிறது.
- குறைந்தது இருவர் அல்லது இருவருக்கு மேற்பட்டவர்கள் சட்டத்திற்கு விரோதமான ஒரு செயலை அல்லது சட்டத்திற்கு முரணான வழியில் ஒரு செயலை செய்வதற்கு அவர்கள் உடன்படுகின்ற செயலானது “குற்றமுறு சதி” எனப்படும்.
- இந்த குற்றமுறு சதியைப் பொறுத்த அளவில் ஒரு செயலை செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு நபர்கள் உடன்பட்டிருக்க வேண்டும். இது மிக முக்கியமானதாகும்.
சரி, இதற்கு சட்டம் தருகின்ற தண்டணை என்ன?
இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு-120B
- மரணதண்டணை, ஆயுள் தண்டணை வழங்கப்படும் குற்றங்கள் அல்லது இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டணை அல்லது அதற்கு மேற்பட்ட கால அளவிற்கு சிறைத்தண்டணை விதித்து தண்டிக்கப்படக்கூடிய குற்றத்தை செய்வதற்கான குற்றமுறு சதியில் பங்கு கொள்கின்ற யாராக இருந்தாலும் (அது போன்ற ஒரு குற்றமுறு சதியை இந்திய தண்டணைச் சட்டத்தின் கீழ் தண்டிப்பதற்கு வழிமுறைகள் எதுவும் ஏற்படுத்தாமல் இருந்தால்) அத்தகைய குற்றத்திற்கு உடந்தையாக இருந்தது போலவே அவர் தண்டிக்கப்படுதல் வேண்டும்.
- மேலே கூறப்பட்ட கடுமையான குற்றங்களாக இல்லாமல் இருந்து வேறு சிறிய குற்றங்களுக்கு என சதி செய்யப்பட்டு இருந்தால், சதியில் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஆறு மாதங்களுக்கு மேற்படாத கடுங்காவலோ அல்லது அபராதமோ அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
- செயல் நடைபெறாமல் குற்றமுறு சதிக்காக மட்டும் நடவடிக்கை எடுக்கலாம்
- குற்றச் செயல்கள் எதுவும் நடைபெற்று இருக்க வேண்டும் என்ற அவசியம் எதுவும் இல்லை.
- குற்றச் செயலை செய்வதற்கு இரண்டு நபர்கள் உடன்பட்டாலே போதும். அதனைக் கொண்டே குற்றமுறு சதிக்காக அவர்களை தண்டிக்கலாம்.
- உதாரணமாக, ஒரு பெண்ணை அவளது மாமியாரும், கணவரும் சேர்ந்து விஷம் கொடுத்து கொல்ல வேண்டும் என்று சதி செய்கின்றனர்! என்று வைத்துக் கொள்வோம்.
- அதனை நிறைவேற்ற செயலில் இறங்கினர் என்று நிரூபிக்க வேண்டியதில்லை. இரண்டு பேரும் அதற்கு உடன்பட்டனர் என்பதற்கான திட்டத்தை நிரூபித்தாலே போதுமானது.
State of Andhra Pradesh vs I.B.S.Prasad Rao and Others - A.I.R. 1970 S.C.648
- மேற்கண்ட வழக்கில் நான்கு பேர்கள் குற்றஞ்சாட்டப்பட்டனர்.
- அவர்கள் நால்வரும் ஆந்திர மாநில மத்திய கூட்டுறவு வங்கியில் வேலை செய்பவர்கள்.
- போலியான வரைவோலைகள் மற்றும் ரசீதுகளை தயார் செய்து தாங்கள் வேலை செய்கின்ற வங்கியை ஏமாற்ற இவர்கள் நால்வரும் சதித்திட்டம் தீட்டினர்.
- ஆனால், ஏமாற்றவில்லை. அதற்குள் இவர்களது சதி கண்டுபிடிக்கப்பட்டு நால்வரும் இந்திய தண்டணைச் சட்டம் பிரிவு 420 மற்றும் 120B ன் கீழ் தண்டிக்கப்பட்டனர்.
****************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No comments:
Post a Comment