disalbe Right click

Wednesday, August 2, 2017

வாரிசு இல்லாத பெண்களின் சொத்து என்னவாகும்?

வாரிசு இல்லாத பெண்களின் சொத்து என்னவாகும்?
பெண்களுக்கும் சொத்துரிமை உண்டு
பரம்பரை மூலமாக கிடைக்கின்ற  சொத்தில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்கிற விஷயம் இப்போது எல்லோருக்கும் தெரிந்ததுதான்.  ஆனால், பாக பிரிவினை என்று செய்யும்போது, பெண்களுக்கு எந்தெந்த சூழ்நிலைகளில், நேரிடையாக சொத்து கிடைக்கும் என்று எல்லோருக்கும் தெரியாது.
அந்தக் காலத்தில், இந்து  வாரிசு சட்டம்-1956  என்கிற சட்டம் ஒன்று நமது நாட்டில் இருந்தது. 1956, ஜூலை 4-ம் தேதி நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்தில், பெண்களுக்குள்ள உரிமை என்னவென்றால், பிறந்த வீட்டில் தங்கிக் கொள்ளலாம், படித்துக் கொள்ளலாம், திருமணம் செய்து கொள்ளலாம்  சீர்வரிசை  செய்து அந்தப் பெண்ணை புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைப்பர்; அதோடு சரி. வேறு எந்த உரிமையும் கிடையாது. 
இந்த சட்டத்தை , தமிழ்நாடு மாநில அரசு, ”இந்து வாரிசுச் சட்டம் - 1990” என்று மாற்றி சில  திருத்தங்களைக் கொண்டு வந்தது. பரம்பரையாக கிடைக்கின்ற பூர்வீகச் சொத்தில் கனவன் அவனுக்கு பின் அவன் மனைவி, மகன், மகள் என, அனைவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்ற, அது  கடந்த 1990ம் ஆண்டு ஜனவரி மாதம் 15ம் நாள் முதல் அமுலுக்கு வந்தது.மத்திய அரசும் 2005ம் ஆண்டு திருத்தம் செய்து, இந்து  வாரிசுச் சட்டத்தில், இதே சம உரிமையைக் கொண்டு வந்தது.
ஆனால், இந்து வாரிசுச் சட்டத்தின் திருத்தப்படி 25.03.1989க்கு முன்பு திருமணம் செய்து கொண்ட ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த பெண்ணுக்கு பூர்வீகச் சொத்தில் உரிமை கிடையாது. மேலும், 25.03.1989க்கு பிறகு ஒரு இந்து மதத்தைச் சேர்ந்த பெண் திருமணம் செய்து கொண்டு இருந்தாலும், அவர், 25.03.1989க்கு முன்பு பங்கு பாகம் பிரிக்கப்பட்ட பூர்வீகச் சொத்தில் உரிமை கொண்டாட முடியாது.  
வாரிசு இல்லாத ஒரு பெண்ணுடைய பரம்பரை சொத்து என்ன ஆகும்?
பொதுவாக ஒரு குடும்பத்தில் ஆண் வாரிசுகள் மட்டும் இருந்தால், அந்த சொத்தானது எந்தப் பிரச்னையும் இன்றி, அடுத்த தலைமுறைக்கு சிரமம் என்பதே இல்லாமல் மாறிவிடும். ஆனால், ஆண் வாரிசு யாரும் இல்லாமல், பெண் மட்டுமே, அந்த குடும்பத்தில் வாரிசாக இருந்தால், அந்த சொத்து அடுத்த தலைமுறைக்கு செல்வதில் சில சிக்கல்கள் ஏற்படும். அது என்னவென்று பார்ப்போம்.
குடும்பத் தலைவரான ஒரு தந்தையிடம் இருந்து, மகள் பெயருக்கு ஒரு பரம்பரை சொத்து மாறுகிறது என்றால், அந்த பரம்பரைச் சொத்தினை பெற்ற மகளுக்கு திருமணமாகி குழந்தைகள் இருந்தால், அந்த சொத்து அக்குழந்தைகளின் பெயருக்கு, அந்த மகளின் விருப்பத்தின் அடிப்படையில் சென்றுவிடும். (குழந்தைகளுக்கு கண்டிப்பாக பங்கு தரவேண்டும் என்பது இல்லை) 
ஆனால், இதுபோல பரம்பரைச் சொத்துக்கு வாரிசாகும் ஒரு பெண் திருமணம் செய்யாமல்  தனி நபராகவே வாழ்ந்து வருகிறார் என்றால், அவருக்கு பின்னர் அந்த சொத்தானது யார் பெயருக்கு சேரும் என்பதில் சில சிக்கல் ஏற்படும். சொத்தை எழுதிக் கொடுத்த பெற்றோர் உயிரோடு இருந்தால், மீண்டும் அவர்களிடமே போய்ச் சேர்ந்துவிடும். அவர்களும் இறந்திருந்தால் அந்த பெண்ணுடன் பிறந்த சகோதர, சகோதரிகளுக்கு சென்றடையும்.
யாரும் தலையிட முடியாது
திருமணமும்  செய்யாமல்,  வாரிசும்  இல்லாமல்  பூர்வீகச்  சொத்தை  பெற்ற பெண் ஒருவர்,  தான்  இறப்பதற்கு  முன்னால்,  தனக்கு  விருப்பமான நபர்கள் யாருக்காவது  அந்த  சொத்தை   முழுமனதுடன்    எழுதி   வைத்திருந்தால், அதன்படியே அந்த சொத்து அவர்களுக்குப் போய் சேரும். 
அதில் பெற்றோரோ, சகோதர, சகோதரிகளோ யாரும் தலையிட முடியாது.
இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 14
ஒரு பெண்ணுக்கு எந்த வகையில் சொத்துகள் இருந்தாலும் அது அவருடைய தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். திருமணமான ஒரு பெண்ணுக்கு அவரது பெற்றோர் மூலமாகச் சொத்துகள் கிடைத்தால், அதில் அவரது கணவரோ, குழந்தைகளோ உரிமை கோர முடியாது. 
ஏற்கெனவே சொன்னபடி, இந்து வாரிசு உரிமைச் சட்டம் பிரிவு 14-ன்படி ஒரு பெண்ணிற்கு எந்த வகையில் சொத்து கிடைத்தாலும், அதாவது அவரது பெற்றோர்கள் மூலமாக, கணவனின் மூலமாக அல்லது சுய சம்பாத்தியம் மூலமாக என எந்த வகையில் சொத்து கிடைத்தாலும், அது அவரது தனிப்பட்ட சொத்தாகவே கருதப்படும். எனவே, அந்தச் சொத்தில் அவர் உயிருடன் இருக்கும் வரை அவருக்கு எதிராக பாகமோ, உரிமையோ வேறு யாரும் கோர முடியாது.

*********************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

No comments:

Post a Comment