உங்கள் வழக்கில் நீங்களே வாதாடலாம்!
எஸ்.பி.ஐ. வங்கி தோற்றது:
வழக்கறிஞராக மாறி வாதிட்டு வெற்றி பெற்ற டீக்கடைக்காரர்!
டீ விற்றவர் பிரதமர் ஆன கதை அனைவரும் அறிந்ததே. போபாலை சார்ந்த ராஜேஷ் சக்ரே எனும் டீ விற்பவர் வழக்கறிஞராக மாறியுள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அன்று ராஜேஷ் சக்ரே தனது எஸ்.பி.ஐ. வங்கியின் கணக்கில் இருந்து ரூ.10,800 எடுத்திருக்கிறார். மீதி ரூ.9,200 இருந்திருக்கிறது. ஆனால், அடுத்த நாள் தனது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் போனதை பார்த்த ராஜேஷ் சக்ரேக்கு பேரதிர்ச்சி.
இது குறித்து வங்கி அலுவலர்களிடம் புகார் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. மேலும், அவரே கவனக்குறைவாக இருந்ததாக வங்கி பதில் குற்றச்சாட்டு வைத்தது. இதையடுத்து, மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமை அலுவலத்தில் ராஜேஷ் முறையிட்டார். அங்கும் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை.
இறுதியாக, மாவட்ட நுகர்வோர் வழக்கு தீர்க்கும் மையத்தில் புகார் செய்தார். அங்கேயும் வங்கி ராஜேஷின் பெயரிலேயே குற்றம் இருப்பதாக வாதிட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஐந்தாவது படித்த டீக்கடைக்காரரான ராஜேஷ், வழக்கறிஞர் போல் மாறினார். நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தானே வாதாடினார்.
ஸ்டேட் பாங்க் தனது சார்பில் திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வந்தது. ஆனால், அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்து ராஜேஷ் சக்ரே, தனது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடினார்.
அதற்கான வெற்றி தற்போது கிடைத்திருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 16ஆம் தேதி இந்த வழக்கில் ராஜேஷுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வாரம் எஸ்.பி.ஐ. வங்கி 6% வட்டியுடன் அந்த 9200 ரூபாயை திருப்பி அளித்தது. அது மட்டுமல்லாமல் அவரை கஷ்டப்படுத்தியதற்கு நிவாரணமாக 10,000 ரூபாயும், வழக்கின் செலவிற்காக 2000 ரூபாயும் வழங்கியது.
தனி ஒரு மனிதன் நினைத்தால்கூட மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும்! என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.
-கிருத்திகா மாடசாமி-
நன்றி : விகடன் செய்திகள் (23/08/2015)
No comments:
Post a Comment