சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும்!
சென்னை, இஸ்லாமிய நாடுகளில் உள்ளது போல, பிறருடைய சொத்துக்களை அபகரிக்கும் நபர்களின் கைகள், விரல்களை வெட்டுவதற்கு இந்தியாவில் சட்டம் இல்லையே என்று சென்னை ஐகோர்ட்டு நீதிபதி வைத்தியநாதன் வருத்தம் தெரிவித்து உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
பத்திரப்பதிவு
சென்னை கோட்டூரை சேர்ந்தவர் பி.எம்.இளவரசன். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:–
சாலிகிராமத்தில் உள்ள 3,830 சதுர அடி நிலத்தை எஸ்.என்.பத்மநாபன், ஆர்.தினேஷ்பாபு ஆகியோரிடம் இருந்து ரூ.1.25 கோடிக்கு கடந்த 2013–ம் ஆண்டு ஏப்ரல் 17–ந் தேதி வாங்கினேன். இந்த நிலத்துக்குரிய பத்திரப்பதிவு அதேநாளில், விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடந்தது. பத்திரப்பதிவின்போது, அதற்குரிய முத்திரைத்தாள் கட்டணம் முழுவதையும் செலுத்தி விட்டேன். இதன்பிறகு, பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை வழங்க விருகம்பாக்கம் சார்பதிவாளர் மறுத்துவிட்டார்.
போலி ஆவணம்
எனக்கு நிலத்தை விற்பனை செய்த எஸ்.என்.பத்மநாபன் நிலத்தின் மீதான பத்திரத்தை போலியாக தயாரித்துள்ளதாகவும், இது சம்பந்தமாக பத்திரப்பதிவு ஐ.ஜி. விசாரணை நடத்தி, சில உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும், எனவே பத்திரத்தை வழங்க முடியாது என்றும் கடந்த 2013–ம் ஆண்டு மே 22–ந் தேதி விருகம்பாக்கம் சார் பதிவாளர் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
இவ்வாறு உத்தரவு பிறப்பிக்க சார்பதிவாளருக்கு அதிகாரம் இல்லை. எனவே, நிலம் தொடர்பான பத்திரத்தை எனக்கு வழங்கும்படி சார் பதிவாளருக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
பார்க்கவில்லை
இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பத்திரப்பதிவு துறை ஐ.ஜி., விருகம்பாக்கம் சார் பதிவாளர் ஆகியோர் பதில் மனுவை தாக்கல் செய்தனர். அதேபோல, தி.நகரை சேர்ந்த வி.வி.வி.நாச்சியப்பன்(வயது 81) என்ற முதியவர் இந்த வழக்கில் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக் கொண்டு, பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:–
தெற்கு ரெயில்வேயில் மண்டல மூத்த என்ஜினீயராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். சாலிகிராமத்தில் 4 ஆயிரம் சதுர அடி நிலத்தை என் மனைவி சரஸ்வதி பெயரில் 1961–ம் ஆண்டு வாங்கினேன். என் மனைவி 2001–ம் ஆண்டு இறந்து விட்டார். முதுமையின் காரணமாக, இந்த நிலத்தை பார்வையிட செல்லவில்லை.
வழக்குப்பதிவு
கடந்த 2012–ம் ஆண்டு நிலத்தை பார்க்க சென்றபோது, அதில் சிலர் குடிசை போட்டு ஆக்கிரமித்து இருந்தனர். இதையடுத்து விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலகத்துக்கு சென்று வில்லங்கம் சான்றிதழ் பெற்று பார்த்தபோது, கடந்த 2011–ம் ஆண்டு தனலட்சுமி, பத்மநாபன் உட்பட பலர் கூட்டாக சேர்ந்து போலி ஆவணங்கள் மூலம் என் நிலத்தை அபகரித்துள்ளது தெரியவந்தது.
இதுகுறித்து நான் செய்த புகாரின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுதொடர்பாக ஐகோர்ட்டிலும் ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. இதையெல்லாம் மனுதாரர் இளவரசன் மறைத்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.
மேலும், இந்த நிலத்தை அபகரித்து 2–வது முறையாக போலி ஆவணங்களை தயாரித்து பத்திரப்பதிவை செய்துள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
அபகரிக்க முயற்சி
இந்த வழக்கு விசாரணையின்போது, மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் விஜயநாராயணன், எதிர்மனுதாரர் நாச்சியப்பன் சார்பில் வக்கீல் எஸ்.தங்கசிவம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டார்கள்.
இதையடுத்து நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில் கூறயிருப்பதாவது:–
போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு நடைபெறும்போது, அந்த பத்திரத்தை வழங்க முடியாது என்று மறுப்பதற்கு சார் பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது.
இந்த வழக்கின் ஆவணங்கள், வக்கீல்கள் வாதங்கள் அனைத்தையும் ஆராயும்போது, மனுதாரர் இளவரசன், நாச்சியப்பனின் சொத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயற்சித்துள்ளது தெளிவாகிறது.
வெட்டவேண்டும்
இதுபோல மோசடிகளை செய்பவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க சட்டத்தில் இடம் இருந்திருந்தால், இதுபோன்ற மோசடிகளில் ஈடுபட யாருக்கும் தைரியம் வராது.
இந்த வழக்கில், அப்பாவி ஒருவரின் நிலத்தை அபகரிக்க மோசடிக்காரர்களுக்கு உடந்தையாக விருகம்பாக்கம் சார் பதிவாளர் அலுவலக ஊழியர்கள் சிலரும் இருந்துள்ளனர். இஸ்லாமிய நாடுகளில், சிறு திருட்டு சம்பவத்தில் ஈடுபடுபவர்களுக்கு கூட, கைகள், விரல்கள் வெட்டப்படுகிறது.
அதுபோல மோசடியில் ஈடுபட்ட இந்த மனுதாரருக்கும், விரல்களை வெட்டும் கடுமையான தண்டனையைத்தான் வழங்க வேண்டும் என்பது இந்த கோர்ட்டின் எண்ணமாக உள்ளது. ஆனால், அப்படி தண்டனை வழங்க நம் நாட்டின் சட்டத்தில் இடமில்லையே?
ஒரு லட்சம் ரூபாய்
எனவே, போலி ஆவணங்கள் மூலம் பிறருடைய நிலத்தை அபகரிக்க முயற்சி செய்த மனுதாரர் இளவரசனுக்கு, வழக்கு செலவாக ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்.
மனுதாரரிடம் இந்த தொகையை ஐகோர்ட்டு பதிவுத்துறை வசூலிக்க வேண்டும். பின்னர், புற்றுநோய் சிகிச்சை மையம், பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றோர் பள்ளி, கோட்டூபுரத்தில் உள்ள வித்யா சாகர் தன்னார்வ அமைப்பு, சென்னையில் உள்ள எய்ட்ஸ் ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாக ஒய்.ஆர்.ஜி. மையம் ஆகியவைகளுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ஐகோர்ட்டு பதிவுத்துறை பிரித்து கொடுக்க வேண்டும்.
அதிகபட்ச தண்டனை
இந்த நிலத்தை அபகரித்ததாக நாச்சியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் மனுதாரர் இளவரசன் உட்பட பலர் மீது பதிவான வழக்கை விசாரிக்கும் கீழ் கோர்ட்டு, இவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடுகிறேன்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
நன்றி : தினத்தந்தி நாளிதழ் - 11.07.2014
No comments:
Post a Comment