disalbe Right click

Tuesday, September 5, 2017

மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -7

Image may contain: grass and text
மண்ணுளி முதல் ஈமு வரை..! - மிரள வைக்கும் கொங்கு மோசடிகள் -7
நில மோசடிகள்

"இங்கே தோண்டுன வட்ட கிணத்தை காணோம் சார்... !' என சினிமாவில் நகைச்சுவைக்காக செய்யும் மோசடி வித்தைகள் எல்லாம் கொங்கு மண்டலத்தில் சர்வ சாதாரணம்.

அந்தளவுக்கு நிலமே இல்லாமல் ப்ளாட் விற்பனை, காடு, மலை என அனைத்தையும் லே அவுட் போட்டு விற்பனை செய்துவிட்டனர். 'படையப்பா படத்தில் வருமே, அதே மாதிரி 'இங்கே தான் கிரானைட் கற்கள் நிறைஞ்சிருக்கு' என மலையை காட்டி சாதாரணமாய் விலை பேசுவது போன்ற ரியல் எஸ்டேட்டில் ஏமாற்றும் வித்தைகளைக் கற்றறிந்த மலை முழுங்கி மகாதேவன்களைக் கொண்ட பகுதி கொங்கு மண்டலம்.
நிலத்தைக் காட்டி எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள், மக்கள் எப்படியெல்லாம் ஏமாறுகிறார்கள் என்பது மிக சுவாரஸ்யமான விஷயம். அதைத்தான் இங்கு பார்க்கப் போகிறோம்...
தவணை முறை நில மோசடி
மாதத் தவணையில் ப்ளாட் விற்பனை... நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் அதற்கும் கீழாக உள்ள மாத சம்பளம் வாங்குபவர்களை மையப்படுத்தி இன்றும் கொடி கட்டி நடந்து வரும் ரியல் எஸ்டேட் மோசடி. எப்படியாவது ப்ளாட் வாங்கி விட வேண்டும் என்பவர்கள்தான் மோசடியாளர்களின் டார்கெட்.

நகரின் மையப் பகுதியில் ஒரு அலுவலகத்தைத் தொடங்குவார்கள். மாதத் தவணைத்திட்டத்தில் ப்ளாட் விற்பனை செய்வதாக விளம்பரப்படுத்துவார்கள். எங்கோ ஓர் மூலையில் உள்ள சில ஏக்கர் இடத்தை ப்ளாட் போட்டுள்ளதாக சொல்வார்கள். 15 ஏக்கர் நிலம் இருக்கிறது. மாதம் ரூ. 2 ஆயிரம் முதல் ரூ.5 ஆயிரம் வரை 4 வருடங்கள் செலுத்தினால் போதும், 1200 சதுர அடி நிலம் உங்களுடையது என்பார்கள். எப்படியாவது சொந்த நிலத்தை வாங்க மாட்டோமா என ஏங்கி கிடக்கும் நடுத்தர வர்க்கத்தினர், இவர்கள் பேச்சில் அப்படியே மயங்குவார்கள்.
'முதலில் அட்வான்ஸாக ஒரு குறிப்பிட்ட தொகைக் கொடுக்க வேண்டும். அதன்பின்னர் மாதம் தோறும் தவணை. தவணை முடிந்ததும் நிலம் உங்களுக்கு கிரையம் செய்து தரப்படும்' என சொல்லுவார்கள். எப்படியாவது ஒரு ப்ளாட் வாங்க வேண்டும் என்ற ஆசையில் இருந்தவர்கள், பணத்தைக் கொட்டுவார்கள் மாதம் தவறாமல் தவணையும் செலுத்துவார்கள். கட்டிய பணத்துக்கு பக்காவாக ரசீதும் வழங்கப்படும்.
அவர்கள் குறிப்பிட்ட அந்த நாள் வரும். ஆனால் இடம் கிரையம் செய்து தரப்பட மாட்டாது. இடத்தை கிரையம் செய்து தரச்சொல்லி ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முறையிட்டு விட்டு, நிறுவனம் பூட்டப்பட்டதும், தவணை முறை திட்டத்தில் பலகோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக காவல்நிலையத்துக்கு நடையாய் நடப்பார்கள்.
போலீசில் புகார் கொடுத்த பின்னர்தான் அவர்கள் பெயரில் நிலமே இல்லை என்பதும், நிலமே இல்லாமல் மோசடி செய்தார்கள் என்பதும் தெரியவரும். இது போன்று சில நூறு மோசடிகளாவது கொங்கு மண்டலத்தில் நடந்தேறி இருக்கும். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் இன்றும் இந்த மோசடிகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.
நிலமே இல்லாமல் மோசடி?
அவங்க பேர்ல நிலமே இல்லை. அப்புறம் எப்படி ப்ளாட் விற்பனை செய்வார்கள் என்கிறீர்களா? அதுதான் இங்கே தந்திரமே.

இந்த மோசடியில் ஈடுபடுபவர்கள் வெறுங்கையால் முழம் போடுவதில் கில்லாடிகள். ஒரு கிராமத்தில் சில ஏக்கர் நிலத்தை வாங்குவது போல நில உரிமையாளரிடம் பேசுவார்கள். அதற்கு அட்வான்ஸாக சிறுதொகையை செலுத்தி ஒப்பந்தம் போடுவார்கள். அதன் பின்னர் அந்த ஏரியாவில் 15 ஏக்கர் நிலத்தை வாங்கியது போல, இடத்தை விற்பனை செய்யும் முயற்சியில் இறங்குவார்கள். மாத தவணை என்பதால், பணம் முழுவதும் கட்டி முடித்த பின்னர்தான் கிரையம் செய்து தர வேண்டும் என்பதால் எந்த பிரச்னையும் இருக்காது.
அதுவரை, 'உங்க இடம் இதுதான்!' என குறிப்பிட்டு ரசீது தருவார்கள்.. அவ்வளவுதான். பணம் எல்லாம் கட்டி முடித்த பின்னர்தான் அங்கு அவர்களுக்கு இடமே இல்லை என்பது உங்களுக்குத் தெரியவரும். அப்போது சில கோடிகளுடன் அவர்கள் எஸ்கேப் ஆகியிருப்பார்கள். போலீஸ் ஸ்டேஷனுக்கு நடையாய் நடந்த பின்னர்தான் அந்த இடம் வேறு ஒருவருக்கு சொந்தமானது என்பது தெரிய வரும்.
இதில் இன்னொரு ரகமும் உண்டு. ஒரு இடத்தை காட்டி, மாத தவணையில் விற்பதாகச் சொல்வார்கள். 'லே அவுட்' போடுவார்கள். உங்களுக்குக் காட்டப்படும் இடம் 3 முதல் 4 பேருக்கு விற்கப்படும். இறுதியில் எல்லோருக்கும் பெப்பேதான். "தவறுதலாக இப்படி நடந்து விட்டது. இந்த இடம் இல்லை.. வேறு வேண்டுமானால் தருகிறேன்..!" என சொல்லி, மற்றொரு இடம் காட்டப்படும். மிகக் குறைந்த விலைக்குப் போகும் அந்த இடம் தான் உங்களுக்கு. இந்த நிலம் அப்படியே இருக்கும். மீண்டும் 'லே அவுட்', மாதத் தவணை விற்பனை என ஒன்றுக்கும் பெறாத மற்றொரு நிலம் கைமாற்றி விடப்படும்.
ஏமாற்றுவது இப்படித்தான்
அட நிலமே இல்லாம மோசடி நடக்குதா? நிலத்தை வாங்குறவங்க இதைக் கூட யோசிக்க மாட்டாங்களா? என்று தானே யோசிக்கிறீர்கள். யோசிக்க விட்டாதானே. அந்தளவுக்கு பேசுவார்கள். உங்கள் ஆசையைத் தூண்டி விட்டால், நீங்கள் அதன் பின்னால் எதையும் யோசிக்க மாட்டீர்கள். அதுதான் இவர்களின் டெக்னிக்.
"இந்த இடத்தோட இப்போதைய மதிப்பு 3 லட்ச ரூபாய். உங்களுக்கு ஒரு லட்ச ரூபாய்தான் வருது. வேணும்னா விசாரிச்சுக்கோங்க..." என்பார்கள்.

அப்போது அங்கு வருபவர்களிடம் அவர்களே கேட்பார்கள். அவர்கள், "நிலத்தின் மார்க்கெட் வேல்யூ 3 லட்சத்துக்கு மேலே...!" என சொல்வார்கள்" உண்மையில் அங்கு வருபவர் ஒன்று அவர்களின் ஆளாக இருப்பார் அல்லது நிலத்தின் மதிப்பு 3 லட்சத்துக்கு மேல் என ஏற்கெனவே நம்பவைக்கப்பட்டவர்களாக இருப்பார்கள்.
"மாசம் 5 ஆயிரம் கட்டினா போதும். இந்த இடம் உங்களுக்குச் சொந்தம். அப்போ இந்த நிலத்தோட மதிப்பு 15, 20 லட்சமா இருக்கும். நீங்க கட்டுறது வெறும் 2 லட்சம் தான். அப்போ 13 லட்சம் உங்களுக்கு லாபம். அதுவும் ரொம்ப ஈசியா மாச தவணையில கட்டிடலாம்" என இவர்கள் பேசுவது எல்லாம் மக்களின் ஆசையைத் தூண்டும் ரகம் தான். அடுத்து ரசீது. 'ஏமாற்றத்தானே போகிறோம். ரசீது எதற்கு தர வேண்டும்?' என இல்லாமல், கொடுக்கும் பணத்துக்கு பக்காவாக ரசீது வழங்குவார்கள்.
சாதாரணமாக பெயரை எழுதி பூர்த்தி செய்து கொடுக்காமல், அனைத்து விவரங்களுடன் அந்த ரசீது இருக்கும். 'ரசீதை பத்திரமா வைச்சுக்கோங்க. கிரையம் அன்னைக்கு தேவைப்படும்" என அவர்கள் ஒவ்வொரு முறை சொல்லும் போதும், 'இவர்களை எல்லாம் சந்தேகப்பட்டா அவ்வளவுதான்!' என மனசு சொல்லும். அந்தளவுக்கு இவர்களின் பேச்சும், நடவடிக்கையும் இருக்கும். இதையெல்லாம் மீறி ஒருவர் அந்த இடம் குறித்து விசாரித்தால் கூட பலரும் ஏமாறாமல் தடுக்க முடியும். ஆனால் 100ல் ஒரு இடத்தில் கூட அப்படி நடப்பதில்லை என்பதுதான் கொடுமை.
காட்டுக்கும், மலைக்கும் கூட லே அவுட் 
மிக குறுகிய காலத்தில் கோடிகளில் சுருட்ட முடியும் என்பதுதான் இந்த மோசடியாளர்களின் ஐடியா. இதில் இன்னுமொரு மோசடி இருக்கிறது. கேட்பாரற்று கிடக்கும் நிலத்தை லே அவுட் போட்டு விற்பது. கோவை, திருப்பூர் பகுதியில் இந்த மோசடி படு பிரபலம். அதாவது குறிப்பிட்ட இடத்தில் லே அவுட் போடுவார்கள். விற்பனையும் நடக்கும். ஆனால் உண்மையில் அது யாருக்கும் சொந்தமான இடமாக இருக்காது.

காடு, மலை, புறம்போக்கு என எந்த கணக்குமில்லாமல் லே அவுட் போட்டு விற்று விடுவார்கள் மோசடியாளர்கள். அப்ரூவல் இருக்கிறதா? ஆவணங்கள் சரியாக இருக்கிறதா என்பதை எல்லாம் ஆராய்ந்து பார்க்காமல், இன்வெஸ்ட் செய்து ஏமாந்த ஜனங்கள் எக்கச்சக்கம்.
இது தவிர அரசு விதிகளை மீறி, ஒரு ஏக்கரில் 12 ப்ளாட்களுக்கு பதிலாக அதிக ப்ளாட்களை போட்டு விற்று விட்டு எஸ்கேப் ஆகும் ரியல் எஸ்டேட் ஆசாமிகளும் உண்டு. இடத்தை வாங்கி வீடு கட்டும் போதுதான், இந்த இடத்தில் பார்க் வரணும். இது ரிசர்வ் லேண்ட் என அரசு தரப்பு சொல்ல.. சிக்கல் கிளம்பும்.
'இந்த நிலத்துல கிரானைட் இருக்கு பாஸ்..!'
இவற்றை எல்லாம் மீறி மற்றொரு நில மோசடி இருக்கிறது. அதுதான் விலை உயர்ந்த கற்கள் மண்ணில் இருப்பதாகச் சொல்லி ஏமாற்றி விற்பது. கோவையில் நடந்த மோசடி சம்பவம் ஒன்றைப் பார்க்கலாம்.

கோவை மாவட்டத்தில் மலைப் பாறைகள் நிறைந்த பகுதி அது. அங்கு கிரானைட் கற்கள் நிறைந்திருப்பதாக சொல்லி ஒரு கும்பல் ஊடுருவுகிறது. திருப்பூரில் உள்ள தொழிலதிபர் அவர். கிரானைட் கற்கள் நிறைந்திருப்பதாக சில புகைப்படங்களை அவர்களிடம் அந்த கும்பல் காட்டுகிறது. " 'படையப்பா' படம் பார்த்தீங்களா? அதுல ரஜினிக்கு சொந்தமான இடத்துல வெட்ட வெட்ட கிரானைட் கற்கள் கிடைக்குமே அது மாதிரிதான் இந்த இடத்துலயும் வெட்ட வெட்ட கிரானைட் கிடைக்கும்" எனச்சொல்லி அவரை நம்ப வைத்தவர்கள், கிரானைட் அந்த விலைக்கு போகும், இந்த விலைக்கு போகும்.. என் இடத்தை வாங்குனா நீங்க பெரிய கோடீஸ்வரர். என்னை மறந்துடாதீங்க..!" என புரோக்கர் போல பேசி, ஆசையைத் தூண்டுவார்கள். "நீங்க சொன்னா இடத்தைப் பார்க்கலாம்..!" என்பார்கள்.
அந்த இடம் செல்ல நாள் குறிக்கப்பட்டது. மலைப்பாறைகள் நிறைந்த பகுதியில் விலை உயர்ந்த சொகுசு காரில் தொழிலதிபரும், மற்றவர்களும் வந்திறங்கினார்கள். இந்த இடத்தில் கிரானைட் கற்கள் உள்ளதாக சொல்லி, சாட்டிலைட் மேப்பில் (?)காட்டுவார்கள். அப்போது அங்கு மற்றொரு சொகுசு காரில் மற்றொருவர் வந்திறங்கினார். பரஸ்பர அறிமுகத்துக்கு பின்னால், காரில் இருந்து நகைப்பெட்டி ஒன்றை எடுக்கிறார். அதில் கிரானைட் கற்கள் மின்னுகிறது.
அவசரமாய் பெட்டி மூடப்பட்டு காரில் போடப்படுகிறது. "சரி.. இங்கே யூரின் போற மாதிரி, நிலத்தைப் பாருங்க. மத்ததை வெளியில போய் பேசிக்குவோம். இங்கே கிரானைட் இருக்குறது தெரிஞ்சுதுன்னா, பக்கத்து நிலத்துக்காரன் விலையை கன்னா பின்னானு கூட்டிடுவான்!" எனச்சொல்லி, அவசர அவசரமாய் தொழிலதிபரை காரில் ஏற்றிக்கொண்டு பறந்து விடுவார்கள்.
இன்னும் இருக்கு மோசடிகள்!
அதன் பின்னர் மீண்டும் ஆசை தூண்டப்படும். எல்லாம் முடிவான பின்னால், அட்வான்ஸ் என சில லட்சங்கள் கை மாறும். நிலத்தை கிரையம் செய்ய நாள் குறிக்கப்படும். அன்று இடத்துக்கு சென்றால் டிப் டாப் உடையணிந்து சிலர் நின்று கொண்டிருப்பார்கள். "கனிம வளத்துறை அதிகாரிகள் ரெய்டு...நாம் இங்கே இருக்க வேண்டாம்!' எனச்சொல்லி திரும்பி விடுவார்கள். "அதிகாரிகளைச் சமாளிக்க கொஞ்சம் பணம் வேணும்.. ஒரு 5 லட்சம் கொடுங்க!" என தொழிலதிபரிடம் கேட்டு வாங்குவார்கள். அதோடு சரி.. அவர்கள் எஸ்கேப்!

உண்மையில் அந்த இடம் வேறு ஒருவருக்கு சொந்தமானது. கிரானைட் நிலம் அடிமாட்டு விலைக்கு கிடைக்கிறது என நினைத்து, பல லட்சங்களை இழந்த சம்பவம்தான் இது. இப்படி பல வகைகளில் நில மோசடிகள் அரங்கேறிய பகுதி கொங்கு மண்டலம்.
இப்படி பல மலைமுழுங்கி மகாதேவன்கள் நடமாடும் கொங்கு மண்டலத்தில் மக்கள் ஜாக்கிரதையாக இருப்பது ஒன்றுதான் மோசடியைத் தடுக்கும் வழி. ஆனால் மக்கள் எப்போது ஜாக்கிரதையாக இருந்தார்கள்?
இன்னும் ஏராளமான மோசடிகள் நித்தமும் அரங்கேறிக்கொண்டுதான் இருந்தன. மக்களை ஏமாற்றிய கதையும், மக்கள் ஏமாந்த கதையும் இங்கு ரொம்பவும் அதிகம். இன்னுமா மோசடிகள் இருக்கின்றன என்கிறீர்களா? நிறைய இருக்கின்றன. அவற்றை அடுத்த வாரம் பார்க்கலாம்...
- ச.ஜெ.ரவி
நன்றி : விகடன் செய்திகள் - 04.09.2015 

No comments:

Post a Comment