disalbe Right click

Tuesday, September 12, 2017

ஆவணங்களின் முக்கியத்துவம் பற்றி .....


ஆவணங்களின் முக்கியத்துவம் பற்றி .....
குற்றங்களை வகைப்படுத்தி,  இந்திய தண்டணைச் சட்டத்தின் கீழ்,  அதனைச் செய்தவர்களுக்கு உரிய தண்டணையை வழங்குவதற்கு நீதிமன்றங்களில் இந்திய சாட்சியச் சட்டம் பயன்படுத்தப்படுகிறது. 
சாட்சியம் என்று சொன்னால், ஒரு நீதிமன்றத்தில் ஒருவராலோ அல்லது பலராலோ கொடுக்கப்படுகின்ற வாக்குமூலங்கள்  அல்லது சமர்ப்பிக்கப்படுகின்ற ஆவணங்கள் ஆகும்.
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 3
எழுத்தால் எழுதப்பட்ட உரையையே நாம் ஆவணம் என்கிறோம். இதனை நீதிமன்றத்தில் சாட்சியமாக அளிக்கும்போது "ஆவண சாட்சியம்" (Documentary Evidence) என்று சொல்கிறோம்.  ஒரு ஆவணத்தில் கூறப்பட்டு உள்ள சங்கதிகளை நிரூபிப்பதற்கு, அந்த ஆவணத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பது தவிர சிறந்தது ஏதுமில்லை. 
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 59
ஆவணங்களில் உள்ள சங்கதிகளை வாய்மொழி சாட்சியங்கள் மூலம் மெய்ப்பிக்க வேண்டியதில்லை. ஏனென்றால், அந்த ஆவணத்தையே ஒரு சாட்சியமாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது அதில் உள்ள சங்கதிகளை மெய்ப்பித்து விடலாம். அந்த அளவுக்கு ஒரு சிறந்த சாட்சியம் ( Best Evidence) ஆவண சாட்சியம் ஆகும்.
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 61
ஒரு ஆவணத்திலுள்ள சங்கதிகளை தலைநிலை சாட்சியம் மூலமாகவோ அல்லது சார்நிலை சாட்சியம் மூலமாகவோ நீதிமன்றத்தில் நாம் மெய்ப்பிக்கலாம்
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 62
ஒருவர் ஆவண சாட்சியத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது அந்த ஆவணத்தின் அசலையே தாக்கல் செய்ய வேண்டும்   இந்த  அசல்  ஆவணமானது  “தலை நிலை சாட்சியம்”      
 ( Primary Evidence) அல்லது “முதல் நிலை சாட்சியம்”  ஆகும்.  இதற்கு இணை ஏதுமில்லை. 
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 63
ஆவண சாட்சியத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யும்போது அந்த ஆவணத்தின் அசலை தாக்கல் செய்ய முடியாத சமயத்தில் அந்த அசல் ஆவணத்தின் உண்மை நகலை தாக்கல் செய்யலாம். இது சார்நிலை சாட்சியம் (Secondary Evidence)  ஆகும். ஆனால், இது  இரண்டாந்தரமான  சாட்சிய்ம் ஆகும்.
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 64
ஆவணங்களை நீதிமன்றத்தில் மெய்ப்பிக்க தலைநிலை சாட்சியம் மூலமாகவே மெய்ப்பிக்க வேண்டும்.  
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 65
சார்நிலை சாட்சியம்  எந்தெந்த சூழ்நிலைகளில் அளிக்கப்படலாம்? என்பது குறித்து இந்தப்பிரிவு விளக்குகிறது.
  1. எவர் ஒருவருக்கு அந்த ஆவணமானது பயன்படுத்தப்படுமோ, அந்த நபர் அந்த ஆவணத்தின் அசலை வைத்திருக்கும்போது அல்லது அவ்வாறு வைத்திருப்பதாக தோன்றும் போது.
  2. எவருக்கு எதிராக ஒரு ஆவணத்தின் சங்கதிகள் பயன்படுத்தப்படுமோ அவரே அதனை எழுத்து மூலமாக அந்த ஆவணத்தின் சங்கதிகளை ஏற்றுக் கொண்டுள்ளார்! என்று மெய்ப்பிக்கப்படும்போது.
  3. அசல் ஆவணமானது அழிந்து போயிருந்தாலோ அல்லது தொலைந்து போயிருந்தாலோ.
  4. அசல் ஆவணத்தை எளிதாக வெளியில் எடுத்துச் செல்ல முடியாதபோது.
  5. அசல் ஆவணமானது இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு-74ன்படி பொது ஆவணமாக இருக்கும்போது.
  6. அசல் ஆவணமானது எந்த ஒரு சட்டத்தாலும் அனுமதிக்கப்பட்ட வகையில் சான்றளிக்கப்பட்ட நகலாக இருக்கும்போது.
  7. அசல் ஆவணமானது நீதிமன்றத்தில்  வைத்து வசதியாக ஆய்வு செய்வத்ற்கு முடியாதவாறு ஏராளமான பக்கங்களை கொண்டிருக்கும்போது.
தொல்லாவணம் ( Ancient Document) 
ஒரு ஆவணமானது முப்பது ஆண்டுகளுக்கு முந்தையதாக இருந்தால், அதனை தொல்லாவணம் என்கிறோம். எதிர் தரப்பினர் மறுப்பு ஏதும் இல்லாமல் இருந்தால் அதிலுள்ள சங்கதிகள் அனைத்தையும் நீதிமன்றம் உண்மையானது என்று  நம்பிக்கை கொள்ளலாம். ஆனால், சம்பந்தப்பட்ட ஆவணம் அது எழுதப்பட்ட நாளில் இருந்து முப்பது ஆண்டுகளை கடந்ததாக இருக்க வேண்டும். அது அந்த ஆவணத்தில் குறிக்கப்பட்டு இருக்கவேண்டும். 
இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 90
மேற்கண்ட தொல்லாவணத்தைப் பற்றி இந்திய சாட்சியச் சட்டம் பிரிவு 90ல் கூற்ப்பட்டுள்ளது. மேலும், தொல்லாவணம் போல் ஐந்து ஆண்டுகள் ஆகிய மின்னியக்க பதிவேடுகள் (Online Documents) குறித்தும் நம்பிக்கை கொள்ளலாம் என்று புதிதாக சேர்க்கப்பட்ட இந்திய சாட்சியச் சட்டம், பிரிவு - 90-A-3 ல் கூறப்பட்டுள்ளது.
************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி

No comments:

Post a Comment