மத்திய அரசின் “தேசிய தொழில் பழகுநர் பயிற்சி”
சிறந்த வேலைவாய்ப்பை பெற, வெறும் பொறியியல் அல்லது தொழில்நுட்பப் பட்டம் மட்டும் போதாது, என்பது சமீப காலமாக நன்கு உணரப்பட்டுள்ளது!
இன்றைய இளைஞர்கள், செயல்முறை பயிற்சியின் மூலம் தேவையான திறன்களை வளர்த்து கொள்ள வேண்டியது அவசியம், என்பதை அறிந்த மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம், ‘நேஷனல் அப்ரன்டிஸ் டிரைனிங் ஸ்கீம்’ (தேசிய தொழில் பழகுநர் பயிற்சி) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது!
திட்டத்தின் நோக்கம்
திறன்மிக்க நாடாக இந்தியாவை மாற்றுவதே இத்திட்டத்தின் பிரதான நோக்கம் என்று, மத்திய அமைச்சகம் தெரிவிக்கிறது. குறிப்பிட்ட வேலைக்கு தகுதிப்படுத்தி கொள்ளும் வகையில், இளைஞர்களுக்காக இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, தொழில்நுட்ப திறன்களை கற்க விரும்புபவர்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இடையில் பாலமாக, இத்திட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்
தொழில் துறைகளில் உள்ள வாய்ப்புகள் மற்றும் தொழில்நுட்ப திறன்கள் பற்றிய விரிவான விளக்கங்களை, நன்கு பயிற்சி பெற்ற ஆசிரியர்களே கற்பிக்கின்றனர். இத்திட்டத்தில் பங்குபெறும் மாணவர்கள், வகுப்பறை கல்வியோடு நின்றுவிடாமல், தொழில் நிறுவனங்களுக்கு சென்று நேரடி பயிற்சி பெறுகின்றனர்.
மென்திறன்கள், பணிப் பண்பாடு, தொழில் அறங்கள், தொழில் நிறுவனங்களின் செயல்பாடுகள் ஆகியவற்றை பயிற்சிக் காலத்தின்போதே மாணவர்கள் கற்றுக் கொள்வதால், சிறப்பாக பணிபுரிய அவர்களுக்குப் பேருதவியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது!
உதவித்தொகை
இந்த திட்டத்தின் கீழ், பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் உதவித்தொகை அளிக்கப்படுகிறது. உதவித்தொகையில் 50 விழுக்காட்டினை பணியமர்த்தும் நிறுவனத்திற்கு மத்திய அரசு செலுத்தும். பயிற்சி கால முடிவில் பயிற்சி பெற்றவர்களுக்கு, மத்திய அரசால் தேர்ச்சி திறன் சான்றிதழ் வழங்கப்படும். அதனை, பணி அனுபவ சான்றிதழாக வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து கொள்ளலாம்.
விண்ணப்பித்தல் மற்றும் பயிற்சி
பயிற்சி பெற விரும்பும் மாணவர்கள், தேசிய தொழில் பழகுநர் பயிற்சி திட்டத்தின் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும்.
தகுதிகள்: பொறியியல் பட்டப்படிப்பு அல்லது பட்டயப் படிப்பில் தேர்ச்சி. இப்பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள், அவ்வப்போது இத்திட்டத்தின் சார்பில் நடத்தப்படும் தொழில் பழகுநர் கண்காட்சியில் பங்கெடுக்க வேண்டியதும் அவசியம்.
பாடப்பிரிவுகள்: மொத்தம் 126 பாடப்பிரிவுகள்.
பயிற்சி காலம்: ஓர் ஆண்டு.
விபரங்களுக்கு: http://mhrdnats.gov.in
நன்றி : தினமலர் நாளிதழ் (கல்விமலர்) - 28.09.2017
No comments:
Post a Comment