disalbe Right click

Tuesday, September 12, 2017

தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு

தமிழக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு
நவோதயா வித்யாலயா பள்ளிகள்
தமிழகத்தில் துவங்க தமிழகத்தில் மாவட்டந் தோறும் நவோதயா வித்யாலயா பள்ளிகளை துவக்க, அனுமதி வழங்குவது குறித்து, தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும்என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
குமரி மகாசபா செயலர் ஜெயகுமார் தாமஸ் தாக்கல் செய்த பொதுநல மனு:
கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை மத்திய அரசு நடத்துகிறது. தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மட்டுமே உள்ளன. ஜவஹர் நவோதயா வித்யாலயா என்பது உண்டு, உறைவிடப் பள்ளி.மும்மொழி கொள்கைஆறாவது வகுப்பு முதல், பிளஸ் 2 வரை கற்பிக்கப்படுகிறது. பிராந்திய மொழி, ஆங்கிலம், ஹிந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
மும்மொழிக் கொள்கையுடையது
தமிழகத்தில் மாவட்டந்தோறும், ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை துவக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு ஜெயகுமார் தாமஸ் மனு செய்திருந்தார். 
தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த பதில் மனுவில்,
தமிழ்நாடு தமிழ்வழி கற்பித்தல் - 2006 சட்டத்தின்படி, தமிழ், ஆங்கிலம் இருமொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது.
நவோதயா பள்ளியானது பிராந்திய மொழி, ஆங்கிலம், ஹிந்தி மும்மொழிக் கொள்கையுடையது. தமிழுக்கு வாய்ப்பு மறுக்கப்படும்என குறிப்பிட்டு இருந்தது.மத்திய அரசு சார்பில் தாக்கலான பதில் மனுவில், ’நவோதயாவில் 6ம் வகுப்புமுதல், 10ம் வகுப்பு வரை, தமிழ் கட்டாயப் பாடம். ஆங்கிலம் உட்பட இதர பாடங்கள் உள்ளன.
பிளஸ் 1 முதல், பிளஸ் 2 வரை, தமிழ் கூடுதல் மொழி. நவோதயாவில் தங்குமிடம், உணவு,கட்டணம் இலவசம். கிராமப்புற மாணவர்களுக்கு, 75 சதவீதம் முன்னுரிமை உண்டு. தமிழக அரசு ஒப்புதல் அளித்தால் நவோதயா பள்ளிகள் துவக்கத் தயார்என, தெரிவித்து இருந்தது.
நீதிபதிகள், கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு நேற்று விசாரித்தது.தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், ’இவ்விவகாரம் அரசின் கொள்கை முடிவு தொடர்புடையது; அமைச்சரவை கூடித்தான் இறுதி முடிவு எடுக்க முடியும்என்றார்.
மாவட்டத்திற்கு, ரூ.20 கோடி
புதுச்சேரி ஜவஹர் நவோதயா வித்யாலயா முதல்வர் வெங்கடேஸ்வரன் ஆஜராகி விளக்கமளிக்கையில்
மாவட்டந்தோறும் நவோதயா வித்யாலயாக்கள் அமைக்கதலா, 30 ஏக்கர் நிலம் தேவை. கட்டுமானத்திற்கு ஒரு மாவட்டத்திற்கு, 20 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கும். கட்டுமானம் முடியும் வரை, முதல் மூன்று ஆண்டுகளில் தற்காலிக இடத்தில் பள்ளிகள் இயங்கும்.
முதற்கட்டமாக, 6ம் வகுப்பில், 240 மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். அவர்கள் பிளஸ் 2 வரை படிப்பை தொடர்வர்.நவோதயா வித்யாலயாவில், 2018 - 19 கல்வியாண்டில் சேருவதற்கான நுழைவுத் தேர்வு, 2018 ஜனவரியில் நடக்கிறது. அதற்கேற்ப தமிழகத்தில், நவோதயா வித்யாலயாக்களை துவங்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்என்றார்.இவ்வாறு விவாதம் நடந்தது.
30ஆண்டு நடைமறை சிக்கல்
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:
நவோதயாவில் தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதுஎன, மத்திய அரசு கூறுகிறது. நவோதயாவை தமிழகத்தில் துவங்க அனுமதிப்பதன் பயனாக, இவ்விவகாரத்தில், 30 ஆண்டுகளாக இருந்த நடைமுறைச் சிக்கல்களுக்கு தீர்வு ஏற்படும். இதில் மத்திய, மாநில அரசுகள் இடையே தகவல் தொடர்பில் இடைவெளி இருந்துள்ளது.
இப்பள்ளிகளை அனுமதிப்பது, கட்டமைப்பு மற்றும் தடையில்லாச் சான்று வழங்குவது குறித்து, தமிழக அரசு, எட்டு வாரங்களில் தகுந்த முடிவெடுக்க வேண்டும்.இவ்வாறு உத்தரவில் கூறினர்.
நன்றி : தினமலர் - கல்விமலர் - 12.09.2017 

No comments:

Post a Comment