தனி நபர் விபத்து காப்பீடு ரூ.15 லட்சம்! உயர்த்த உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, வாகன உரிமையாளர்களுக்கான, தனிநபர் விபத்து பாலிசி தொகையை, ஒரு லட்சத்தில் இருந்து, 15 லட்சம் ரூபாயாக உயர்த்தும்படி, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்துக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடலுார் மாவட்டம், நெய்வேலியை சேர்ந்தவர், ரஜினி; இவரது இரு சக்கர வாகனத்தை, பாலமுருகன் என்பவர் ஓட்டினார். பின் இருக்கையில், ரஜினி இருந்தார். நெய்வேலி - விருத்தாச்சலம் சாலையில் வாகனம் சென்றபோது, சைக்கிளில் வந்தவர் குறுக்கே புகுந்தார். இதனால், உடனடியாக வாகனத்தை நிறுத்தினார். இதில், பின் இருக்கையில் இருந்த ரஜினி, துாக்கி எறியப்பட்டார்.
பலத்த காயமடைந்த ரஜினி, புதுச்சேரியில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பின், சிகிச்சை பலனின்றி இறந்தார். 2011 ஜூனில், சம்பவம் நடந்தது. 60 லட்சம் ரூபாய் இழப்பீடு கேட்டு, ரஜினியின் மனைவி மற்றும் குடும்பத்தினர், நெய்வேலி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், ௫௧.௩௭ லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும்படி, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், யுனைடெட் இந்தியா நிறுவனம், மேல்முறையீடு செய்தது. மனுவை, நீதிபதிகள் சுப்பையா, ஜெகதீஷ் சந்திரா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' விசாரித்தது.
யுனைடெட் இந்தியா நிறுவனம் சார்பில், வழக்கறிஞர் எஸ்.அருண்குமார், ''காப்பீட்டு நிறுவனம் இழப்பீடு வழங்க வேண்டும் என்பது, உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு முரணானது. காப்பீட்டு நிறுவனத்திடம் இழப்பீடு கோர முடியாது. கட்டாய தனிநபர் விபத்து நிவாரண தொகையாக, ஒரு லட்சம் ரூபாய் மட்டுமே பெற முடியும்,'' என்றார்.
மேல்முறையீட்டு மனுவை விசாரித்த, டிவிஷன் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கைப் பொறுத்தவரை, வாகன உரிமையாளர் இறந்துள்ளார். விபத்தில், வேறு எந்த வாகனங்களுக்கும் சம்பந்தம் இல்லை. அவரது சொந்த வாகனத்தில் இருந்து, கீழே விழுந்து இறந்துள்ளார். மூன்றாம் நபருக்கான இழப்பீடு மற்றும் வாகனத்துக்கான சேத தொகையை தான், காப்பீட்டு நிறுவனம் வழங்க முடியும். எனவே, வாகன உரிமையாளர் இறந்ததற்கு, மோட்டார் வாகன சட்டப்படி, காப்பீட்டு நிறுவனம் பொறுப்பாகாது.
வாகன உரிமையாளர் தான் இறந்துள்ளார்; அவர், மூன்றாம் நபர் அல்ல. இழப்பீடு கோரி, அவரது வாரிசுகள் வழக்கு தொடுப்பது, மோட்டார் வாகன சட்டத்தின் வரம்புக்குள் வராது. அதனால், நெய்வேலி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, ஏற்க முடியாது. அதேநேரத்தில், தனி நபர் விபத்து பாலிசி தொகையாக, ஒரு லட்சம் ரூபாய் பெற, அவரது வாரிசுகளுக்கு உரிமை உள்ளது.
கட்டாய தனி நபர் விபத்து பாலிசியின்படி, வாகன உரிமையாளர் இறந்தால், இரு சக்கர வாகனம் என்றால், ஒரு லட்சம் ரூபாய், நான்கு சக்கர வாகனம் என்றால், இரண்டு லட்சம் ரூபாய், இழப்பீடு தொகையை, அவரது வாரிசுகள் பெறலாம். இந்த திட்டம், 2002 ஆகஸ்ட்டில் அமலுக்கு வந்தது. அதற்கு முன், இந்த இழப்பீட்டு தொகையும் கிடையாது.
கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையால் தான், விபத்து ஏற்படுகிறது. தானாக யாரும் காயத்தை ஏற்படுத்தி கொள்வதில்லை; இறப்பதற்கும் முன்வருவதில்லை. வாகனங்களை ஓட்டும் போது, சிறிய தவறுகள், தடுமாற்றம் காரணங்களால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. உரிமையாளருக்கு ஏற்படும் உயிரிழப்பு, காயங்களால், அவர்களின் வாரிசுகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர்.
தனி நபர் விபத்து பாலிசி திட்டம், 15 ஆண்டுகளுக்கு முன், அமலுக்கு வந்தது. அப்போது, ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடு என்பது, போதுமானதாக இருந்திருக்கலாம். ௧௫ ஆண்டுகள் கடந்துவிட்டன.
தற்போது, மருத்துவ சிகிச்சை செலவு, எகிறி விட்டது. வாகன விபத்துக்களால் உயிரிழப்பு, படுகாயங்கள் ஏற்படும் போது பாதிக்கப்படுவது, அவர்களின் வாரிசுகளும் தான். அவர்களின் குடும்பமே முடங்கி போய் விடுகிறது.
வாகனம் ஓட்டுபவரின் கவனக்குறைவால் ஏற்படும் விபத்தில், மூன்றாம் நபர் உயிரிழந்தாலோ, படுகாயம் ஏற்பட்டாலோ, அவரது குடும்பத்துக்கு, காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து போதிய இழப்பீடு கிடைக்கும். அதுவே, வாகன உரிமையாளரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டு, உயிரிழந்தாலோ, காயம் அடைந்தாலோ, காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு கிடைக்காது; இது, துரதிருஷ்டவசமானது.
எனவே, அதிகரிக்கும் மருத்துவ சிகிச்சை செலவு, அன்றாட வாழ்க்கை செலவு உயர்வின் அடிப்படையில், கட்டாய தனிநபர் விபத்து பாலிசி தொகையை, 15 லட்சத்துக்கும் குறையாமல் உயர்த்தும்படி, காப்பீட்டு ஒழுங்குமுறை மேம்பாட்டு ஆணையத்துக்கு உத்தரவிடப்படுகிறது. இதனால், விபத்தில் பாதிக்கப்படும் வாகன உரிமையாளர்களுக்கு உதவியாக இருக்கும்.
வாகன உரிமையாளர் விரும்பினால், கூடுதல் இழப்பீடு தொகை பெற ஏதுவாக, பிரீமியம் தொகையை, அதிகம் செலுத்துவதற்கும் வழி வகை செய்யலாம். இழப்பீட்டு தொகையை உயர்த்துவதற்கு முன், சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும். ஆறு மாதங்களுக்குள், இந்த நடவடிக்கைகளை, காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் முடிக்க வேண்டும்.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, நெய்வேலி நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, ரத்து செய்யப்படுகிறது. ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டு தொகை பெற, வாரிசுளுக்கு உரிமை உள்ளது.
இவ்வாறு டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 28.10.2017
No comments:
Post a Comment