திருமாலிடம் சதாசர்வகாலமும் தொண்டு செய்துவரும் நித்ய சூரிகளில் முக்கியப் பங்கு வகித்து, நமக்காகப் பரிந்துரைசெய்து, வரங்களைப் பெற்று நமக்கு அருளும் கருடாழ்வாரைப் பற்றித் தெரிந்துகொள்வோமா?
திருமாலின் நித்ய சூரிகளின் தலையாய பொறுப்பில் இருக்கும் கருடாழ்வார் எனும் பெரிய திருவடி அவதரித்தது சுவாதி நட்சத்திரத்தில்.
கருடாழ்வாரின் கதை:
காசியப முனிவருக்கும் விநதாவுக்கும் பிறந்தவர்கள் இருவர். ஒருவர் கருடாழ்வார்; மற்றொருவர் சூரியனின் தேர்ப்பாகன் அருணன்.
இரண்டாவது மனைவி கத்ருதேவியின் புத்திரர்கள், அநேக கோடி சர்ப்பங்கள்.
பாற்கடலில் அமுதம் கடைந்தபோது வெளிப்பட்ட உச்சைசிரவம் என்ற வெண்குதிரையில் இந்திரன் பவனி வந்ததை, ஒரு சமயம் விநதாவும் கத்ருதேவியும் கண்டனர்.
வெண்குதிரையின் அழகை விநதா புகழ்ந்தாள். அதைப் பொறுக்காத கத்ரு, குதிரை முழுவதும் வெள்ளை இல்லை; வால் கறுப்பு என்று குதர்க்கம் பேசினாள்.
இருவருக்கும் வாக்குவாதம் முற்றி, பந்தயம் கட்டுவதில் முடிந்தது. எவர் சொன்னது சரி என்று ஊர்ஜிதமாகி, வெற்றி பெறுகிறாரோ அவருக்குத் தோற்றவர் அடிமை என்று முடிவாகிறது.
கார்க்கோடகனின் விஷமச் செயல்!
கத்ருவோ தன் பாம்புப் பிள்ளைகளிடம் இந்த விஷயத்தைச் சொல்லி, மூத்தவளையும் அவள் பிள்ளைகளையும் அடிமைப்படுத்த இது நல்ல தருணம்・என்கிறாள்.
இந்திரனின் வெண்குதிரையின் வாலில் நாகம் சுற்றிக்கொண்டால் கறுப்பு வால் போன்று தெரியும் என யோசனையும் சொல்கிறாள். இதற்கு கார்கோடகன் என்ற ஒரு மகனைத் தவிர, மற்றவர்கள் மறுக்கின்றனர்.
கார்க்கோடகன் தன் அம்மாவின் சொல்படி இந்திரனின் குதிரையின் வாலில் சுற்றிக்கொண்டு, தன் விஷ மூச்சையும் செலுத்தி, வால் கறுப்பு நிறமாகத் தோன்றும்படி செய்கிறான்.
அதை நம்பி ஏமாறும் விநதாவும், அவள் பிள்ளைகளும் கத்ருவுக்கு அடிமை ஆகிறார்கள். அவளும், இவர்களுக்குக் கடுமையான வேலைகளை ஏவி, கொடுமைப்படுத்துகிறாள்.
தாயின் துயரம்!
தாய் துயருறுவதைக் கண்டு பொறுக்காத கருடன், சித்தியிடம் அவளை விடுவிக்கும்படி வேண்ட, அவளோ தேவர்களின் பாதுகாப்பில் தேவலோகத்தில் இருக்கும் அமிர்தத்தைக் கொண்டு வந்து கொடுத்தால், தாயையும் மற்றவர்களையும் விடுதலை செய்வதாகக் கூறுகிறாள்.
கருடன் உடனே அமிர்த கலசத்தைக் கொண்டு வர, தேவலோகம் சென்று, தேவர்களோடு யுத்தம் செய்கிறார். இந்திரன் தனது வஜ்ராயுதத்தால் தாக்குகிறான். எனினும், பலசாலியான கருடனுக்கு வஜ்ராயுதம் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
இருந்தாலும், இந்திரனுக்குப் பெருமையும், வஜ்ராயுதத்துக்கு மதிப்பும் தரவேண்டும் என்கிற எண்ணத்தில், கருடன் தன் சிறகிலிருந்து ஒரு துளியை மட்டும் உதிர்த்துவிட்டு, இந்திரனிடமிருந்து பெற்ற அமிர்த கலசத்துடன் புறப்படுகிறார்.
அமிர்த கலசத்துக்கு அனுமதி
இதைக் கண்ட தேவாதி தேவர்கள், கொடிய பாம்புகளுக்கு அமிர்தம் கிடைத்துவிட்டால் விபரீதமாகிவிடுமே என்று அஞ்சி, திருமாலிடம் ஓடிச் சென்று விஷயத்தைச் சொன்னார்கள்.
அதைத் தொடர்ந்து திருமால், கருடன் மீது போர் தொடுத்தார். கருடனிடமிருந்து அமிர்த கலசத்தை மீட்கும்பொருட்டு, திருமாலுக்கும் கருடனுக்கும் தொடர்ந்து 21 நாட்கள் போர் நடந்ததாக விஷ்ணு புராணம் கூறுகிறது.
தாய் மீது அளவற்ற பற்று வைத்திருந்த கருடனின் மன உறுதியைப் பாராட்டி, இறுதியில் அந்த அமிர்த கலசத்தைக் கொண்டு செல்ல, அனுமதி அளிக்கிறார் திருமால்.
வாகனமாக இரு!
தன்னுடன் போரிட்டு அமிர்த கலசத்தைப் பெற்ற கருடனுக்கு, திருமால் என்ன வரம் வேண்டுமெனக் கேட்க, கருடனோ தான் வெற்றிபெற்ற அகந்தையில், உங்களுக்கு என்ன வரம் வேண்டும் கேட்டால், அதை நான் தருகிறேன்・என்கிறார். இறைவனும் உடனே, சரி, எனக்கு வாகனமாக இருந்து, சேவை சாதிப்பாயாக!・என
வரம் கேட்டதாகப் புராணம் விவரிக்கிறது.
கருடன் தனது ஆணவத்தைத் துறந்தார். அப்படியே ஆகட்டும் ஐயனே! என் தாயை மீட்டவுடன், ஓடோடி வந்து தங்களுக்குச் சேவை செய்கிறேன்・என வாக்களித்துவிட்டுச்
செல்கிறார்.
பிறகு, சித்தியிடம் அமிர்த கலசத்தைக் கொடுத்து தாயையும் சகோதரரையும் மீட்ட பின்பு, சொன்னது போலவே வைகுண்டம் வந்து, திருமாலிடம் சேவை செய்யத் தொடங்கியதாகப் புராணங்கள் கூறுகின்றன.
---------------------------------------------------------------------------------------------------- எஸ்.கதிரேசன்
நன்றி : விகடன் செய்திகள் - 07.10.2016
No comments:
Post a Comment