யாருக்காக, இது யாருக்காக?
கடந்த வருடத்தில் ஒரு நாள் வழக்கம் போல காலையில் இணையத்தில் செய்தித்தாள்களில் உள்ள செய்திகளை வாசித்துக் கொண்டிருந்தேன். தி இந்து (தமிழ்) நாளிதழில் திரு எஸ்.ராமகிருஷ்ணன் என்பவர் எழுதிய யாருக்கானது சட்டம்! என்ற தொடரில் இந்த கதை இருந்தது. படித்தேன், ரசித்தேன்.
அதை தங்களின் பார்வைக்காக சமர்ப்பிக்கின்றேன்.
************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி
‘நீதி என்பது வெறும்கால் கொண்டவனை கடிக்கும் பாம்பு’ எனச் சொல்கிறார் எழுத்தாளர் எடுவார்டோ கலியானோ.
அது உண்மை. பணம் படைத்தவனுக்கு சட்டம் வளையவே செய்கிறது. வசதியானவன் செய்யும் குற்றங்கள் கண்டுகொள்ளப்படுவதே இல்லை.
ஆப்பிரிக்க
பழங்கதை ஒன்றிருக்கிறது.
அதில் பாம்புகள் ஒன்றுசேர்ந்து புதிதாக சட்டம் ஒன்றை உருவாக்கு கின்றன. அதன்படி ‘இனிமேல் எலிகளின் வளைக்குள் முன்அனுமதியில் லாமல் போகக் கூடாது. மீறிப் போவது குற்றம். அப்படி போகிற பாம்பு தண்டிக்கப்படும்’ என அறிவிக்கிறார்கள்.
எலிகளின் நலனுக்காக தாங்கள் கொண்டுவந்துள்ள இந்தச் சட்டத்தைப் பற்றி எடுத்துச் சொல்ல எலிகளைத் தேடி ஒரு பாம்புச் சென்றது.
பாம்பை கண்டதும் ஒரு எலிகூட வெளியே வரவில்லை. ஒரு எலி வளையின் முன்பாக பாம்பு நின்றுகொண்டு ‘‘நண்பனே… என்னைக் கண்டு பயப்படாதே! உன் அனுமதியின்றி உன் வீட்டுக்குள் நான் வர மாட்டேன். அப்படி வருவது குற்றம் என ஒரு புதிய சட்டம் இயற்றியிருக்கிறோம். அதை உன்னிடம் தெரிவிக்கவே வந்தேன்’’ என்றது.
எலிக்கு ஒன்றுமே புரியவில்லை. அது பதுங்கிக் கொண்டு வெளியே வரவே இல்லை.
‘தான் சொன்ன சட்டம் எலிக்குப் புரியவில்லையோ…’ என நினைத்த பாம்பு, எலி வளைக்குள் போய் அங்கிருந்த எலியைப் பிடித்து தின்றுவிட்டுச் சொன்னது:
‘‘இப்படிச் செய்வது தவறு என சட்டம் இயற்றியிருக்கிறோம். புரிகிறதா?’’
பாம்பின் செயலைக் கண்ட எலிக் குஞ்சுகள் பயந்து ஒடுங்கியிருந்தன.
பாம்பு சொன்னது: ‘‘என் மீது இப்போது நீங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம். நீதி மன்றத்துக்குச் செல்லுங்கள்!’’
இதைக் கேட்ட எலிக் குஞ்சுகளில் ஒன்று கூட வாயைத் திறக்கவில்லை.
‘‘முட்டாள் எலிக்குஞ்சுகளே! உங்களுக்கு எப்படித்தான் சட்டத்தைப் புரிய வைப்பது…’’ என்று சொல்லியபடியே ஒவ்வொரு எலியாகப் பிடித்துத் தின்னத் தொடங்கியது.
கடைசி எலிக் குஞ்சு சொன்னது: ‘‘மன்னிக்கவும்! இந்தச் சட்டம் எதற்காக? இதனால் ஒரு பயனும் இல்லை. சட்டத்தை உண்டாக்கியது நீங்கள். நீதி விசாரணை செய்யப்போவதும் நீங்கள். உங்களை எதிர்த்து நாங்கள் எப்படி வழக்காட முடியும்? எங்களுக்கு எப்படி நீதி கிடைக்கும்?
‘‘அடேய் முட்டாள் எலிக்குஞ்சே! சட்டத்தைதானே உங்களுக்கு அறிமுகம் செய்து காட்டுகிறேன். இது கூடவா புரியவில்லை. இப்படி சட்டத்தை மதிக்காமல் இருந்தால் உன்னை தண்டிக்கத்தானே வேண்டும்?’’ என்று சொல்லியபடி அந்த எலிக் குஞ்சையும் பிடித்துத் தின்றுவிட்டது.
பாம்புகள் எலியின் நலனுக்காக சட்டம் போட்டால் இப்படித்தான் இருக்கும்!
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 18.10.2016
No comments:
Post a Comment