பிறந்து 3 மாதங்களில் தலை நிற்காமல் இருப்பது, குப்புறிதல், தவழுதல், உட்காருதல் போன்ற வளர்ச்சி நிலைகள் முறையே
4,6,8 மாதங்களில் நடைபெறாமல் இருப்பது, ஒன்றரை வயதாகியும் உதவியில்லாமல் நிற்கவோ, நடக்கவோ இயலாமல் இருப்பது, இரண்டரை வயதாகியும் சிறுவாக்கியங்களையும் பேசாமல் இருப்பது, மலம், சிறுநீர் கழிப்பதில் கட்டுப்பாடற்ற நிலையில் இருப்பது, நாம் கூறும் விஷயங்களைப் புரிந்து கொள்ளாமல், மிக அமைதியாகவோ அல்லது மிகுந்த பரபரப்பும், தவிப்பும் உடையதாக இருப்பது போன்ற அறிகுறிகள் குழந்தையிடம் காணப்பட்டால் காலத்தைத் தள்ளிப்போடாமல் சரியான வழியில் பயிற்சிகளை அளிப்பது அவசியமானது ஆகும்.
இன்றைய நிலையில் 100 குழந்தைகள் பிறந்தால் 2 அல்லது 3 குழந்தைகள் இதுபோன்ற குறைபாடுகளுடன் பிறக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் என்ன, அதை எவ்வாறு சரி செய்வது என்பது தெரியாமல் பெற்றோர் பல இடங்களுக்கு அலையும் நிலையை பல இடங்களில் காணலாம்.
அப்படிப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக குழந்தைகளுக்கும் பல்வேறு வகையான பயிற்சிகளையும் அளிக்கிறது திருச்சி- புதுக்கோட்டை சாலையில் விமான நிலையம் அருகிலுள்ள மானஸமித்ரா வித்யா பீடம்.
இந்த மையத்தின் முதல்வரும், மனநலவியலாளருமான ஷீலா ஜோஸியுடன் உரையாடியபோது:
""மனிதர்களின் சராசரி அறிவுத்திறன் 90
முதல்
110 இருக்க வேண்டும். அறிவுத்திறன் 70 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும் போது அவர்களின் மூளை வளர்ச்சித் திறன் குறைவு என்று கருதலம். இதனால் அவர்களால் மற்றவர்கள் போல் இருக்க முடிவதில்லை.
பொதுவாக குழந்தைகள் 5 வயதை அடைவதற்குள் அவர்களின் பெருந்தசை மற்றும் நுண்தசை இயக்க வளர்ச்சி, மொழி வளர்ச்சி ஆகியவை 100-சதமும், அறிவு சார்ந்த வளர்ச்சி ஏறத்தாழ 80சதமும் முடிந்து விடுகின்றன. மீதமுள்ள 20 சதவீத வளர்ச்சி 6 முதல் 18 வயது வரையிலான காலத்தில் நிகழ்கிறது.
எனவே அந்த காலகட்டங்களிலேயே, பெற்றோர், தம் குழந்தைகளின் நிலையை கூர்ந்து கவனித்து, குறைகள் இருப்பின் சரியான மையங்களைத் தேர்வு செய்து பயிற்சி அளித்தல் அவசியமாகும்.
பார்ப்பதற்கு இயல்பான குழந்தைகள் போல இருந்தாலும், ஆட்டிச குறைபாடுடைய குழந்தைகள் தனக்கென்ற ஒரு தனி உலகில் சஞ்சரிப்பது போல, பிறருடன் கலந்து பழகாமலும், மற்றோரின் கேள்விகள் அல்லது தகவல்களுக்கு செவிமடுக்காதவராகவும் இருப்பர்.
இவ்வாறு, தகவல் பரிமாற்றத் திறன் இல்லாமல் இருப்பது, நண்பர்களுடன் சேர்ந்து பழகாமல் இருப்பது, சில பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளாமல் இருப்பது (உதாரணமாக கட்டுப்படுத்த இயலாத வண்ணம் கைகளை ஆட்டிக்கொண்டே இருப்பர்) போன்றவற்றை வைத்து ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை நாங்கள் கண்டறிகிறோம். அவர்களின் திறன் குறைபாடுகளை மேம்படுத்தும் விதமான பல பயிற்சிகளை அளித்தல், அவர்களுள் குறைந்த அளவு பிரச்சனைகளுடன் இருக்கும் சிறுவர்களின் திறனை மேம்படுத்தி, சராசரி அறிவுத்திறன் அளவீட்டில் உள்ள பிற மாணவர்களுடன் இணைந்து கல்வி கற்கும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கிறோம். ஆட்டிசம் மற்றும் மூளைவளர்ச்சித் திறன் குறைபாடு உடைய சிறப்புக் குழந்தைகளிடம் காணப்படும் பரபரப்புத் தன்மை, முரட்டுத்தனம், கவனக்குறைவு, நினைவில் நிறுத்தும் திறன், மற்றும் பிற இயல்பான நடத்தை மாறுபாடுகளை சீர்செய்யும் வகையில் பயிற்சிகள் பலவற்றையும், சிறப்புக் கல்வி, திறன் ஊக்குவிப்பு பயிற்சிகள் ஆகியவற்றுடன் சேர்த்து அளித்து வருகிறோம்.
சிறப்புப்பயிற்சி மற்றும் சராசரிக் கல்வியை கற்கக்கூடிய சம அளவிலான திறன் கொண்ட மாணவர்களை, அருகாமையிலுள்ள அரசு, உதவி பெறும், தனியார் பள்ளிகளில் பிற்பகல் வரை மற்ற மாணவர்களுடன் பழகச் செய்து, படிக்க வைத்து, பிற்பகலுக்குப் பிறகு எங்கள் மையத்தில் மற்ற பயிற்சிகளை அளித்து வருகிறோம்.சராசரி அறிவுத் திறன் இருந்தாலும், கற்றலில் குறைபாடு இருக்கும் மாணவர்களுக்குத் தேவையான மேம்படுத்தும் பயிற்சிகளையும் அளிக்கிறோம்.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்டு இங்கு பயின்ற மாணவி ஒருவர், பல்வேறு பயிற்சிகளுக்குப் பின்னர், சராசரியான பள்ளியில் சேர்க்கப்பட்டு, தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வில் 1058 மதிப்பெண்கள் பெற்ற தகவல் எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.
எங்களுடைய மையத்தில் குழந்தைகள் பேசுவதற்கான பயிற்சி, அவர்களின் உணர்வுகளை கட்டுப்பாட்டுடன், முறையாக வெளிப்படுத்துவதற்கான பயிற்சி, அன்றாட மற்றும் வாழ்வியல் பழக்கவழக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பயிற்சி, குழந்தைகளின் மன ஆற்றலை சீர் செய்ய பெருமளவில் உதவும் மைண்ட் எலிவேஷன் தெரபி அளிக்கப்படுகிறது.
உடலின் வெப்பமாறுபாடுகள் காய்ச்சலாகத் தான் வெளிப்பட வேண்டும் என்பது இல்லை. குழந்தைகள் மிகுந்த பரபரப்புடன் இருப்பதற்கு உடலின் உஷ்ணம் சீரற்று இருத்தலும் ஒரு முக்கிய காரணம் ஆகும். அப்படியான உஷ்ணத்தைக் குறைத்து அவர்களில் சிந்தனைத் திறனை சீரமைக்கும் உஷ்ண ஸமனி பயிற்சி,
நாம் அன்றாடம் உபயோகிக்கும் பலவிதமான மின்னணுப்பொருட்கள் வெளிப்படுத்தும் மின்காந்த அலைகள் கவனத்திறன் குறைபாடு மற்றும் பரபரப்பும் எரிச்சலும் மிகுந்த குணப்பாங்கு ஆகியவற்றுக்குக் காரணம் அமைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அதனை சீர் செய்ய உதவும் கிரவுண்டிங் அண்ட் ஹார்டிகல்சர் தெரபி, யோகா போன்ற பல்வேறு பயிற்சிகளை நாங்கள் அளித்து வருகிறோம்.
எங்கள் மையத்தில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு தினமும் அரை மணி நேரம் கட்டாயமாக ஓவியப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
படங்களை வரையக் கற்றுக் கொள்வதன் மூலம் வண்ணங்களைப் பற்றியும் வடிவத்தைப் பற்றியும் தெரிந்து கொள்கின்றனர். அவர்களின் மனஉணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அவர்கள் வரையும் ஓவியங்கள் அமைவதன் காரணத்தால், அதன் அடிப்படையில் அவர்களுக்கும், அவர்களின் பெற்றோருக்கும் உதவும் வாய்ப்புகள் அதிகரிக்கின்றன. ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொரு விதத்தில் திறன் பெற்றிருப்பார்கள். அவ்வாறு உள்ளவர்களைக் கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் பயிற்சியையும் அளிக்கிறோம்.
குழந்தைகள் குறைபாட்டுடன் பிறக்க பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் உடல் ரீதியானவை, மரபணு ரீதியானவை, கருக்கால பிரச்சனைகள், பேறுகால நேரம் மற்றும் பிறந்த சில மணிக்கூறுகள் முதல் சில நாட்கள் அல்லது ஒரு சில வருடங்களுக்குள் குழந்தைக்கு ஏற்படும் வலிப்பு போன்ற பிரச்னைகள்,
பிரசவநேரத்தில் ஏற்படும் பல்வேறு மருத்துவ காரணங்கள் ஆகியவற்றுடன் கர்ப்ப கால மன உணர்வுகளுக்கும் முக்கிய பங்கு உள்ளது.
கர்ப்பகாலத்தில் பெற்றோரின் சிந்தனை, எண்ணம் தூய்மையானதாக இருக்க வேண்டும். இதைவிட முக்கியமானது, மகப்பேறு காலத்தில் முறையான உடல் உழைப்பு இருப்பது மிக மிக அவசியமானதாகும்.
கர்ப்ப காலத்தில் நச்சுத்தன்மை உள்ள உணவை தாய் சாப்பிடும் போது அதன் பாதிப்பு அவரது வயிற்றில் வளரும் குழந்தையையும் நேரடியாக பாதிக்கச்செய்கிறது'' என்கிறார் ஷீலா ஜோஸி.
தினமணி நாளிதழ் - 21.10.2015
No comments:
Post a Comment