அழைக்கிறது காவல் துறை... (2)
காவலர் பணிக்கான மதிப் பெண்கள் ஒதுக்கீடு: எழுத்துத் தேர்வு(பொதுஅறிவு மற்றும் உளவியல்/மனோதத்துவம்) 80 மதிப்பெண்கள், உடல் திறன் தேர்வு 15 மதிப்பெண்கள், சிறப்பு மதிப்பெண்கள் (என்சிசி, என்.எஸ்.எஸ்., மற்றும் விளையாட்டுச்சான்றிதழ்) 5 மதிப்பெண்கள், ஆகமொத்தம் 100 மதிப்பெண்கள்
எழுத்துத் தேர்வு:
எழுத்துத் தேர்வை பொறுத்தவரை 10ம் வகுப்பு தரத்தில் இருக்கும். பொது அறிவு மற்றும் உளவியல் தேர்வு என இரண்டு பிரிவாக எழுத்துத் தேர்வு நடத்தப்படுகிறது. பொது அறிவு பிரிவில் 50 மதிப்பெண்களும், உளவியல் பிரிவில் 30 மதிப்பெண்களும் வழங்கப் படுகின்றன. இவற்றில் வெற்றி பெற குறைந்தபட்ச மதிப்பெண்களை தமிழ் நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் நிர்ணயிக்கும். எழுத்துத்தேர்வு அப்ஜெக்டிவ் தரத்தில் இருக்கும். ஒரு கேள்விக்கு 4 பதில்கள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் எது சரியோ அதை வட்டமிட வேண்டும்.
விடைத்தாள் தனியாக கொடுக்கப்பட்டிருக்கும். அதில்தான் விடையை குறிக்க வேண்டும். உளவியல் தேர்வை பொறுத்தவரை இயற்கையான ஆற்றலையும், மனோபாவத்தையும் சோதிப்பதாக இருக்கும். உதாரணமாக ஒரு சம்பவத்தை தெரிவித்து அந்த இடத்தில் நீங்கள் இருந்தால் என்ன முடிவு எடுப்பீர்கள் என்ற அமைப்பில் கேள்விகள் அமைந்திருக்கும்.
எழுத்து தேர்வு மற்றும் உளவியல் தேர்வு தொடர்பாக விரிவாக பின்னர் கூறுகிறேன்.
உடல்கூறு அளத்தல் தேர்வு:
எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களின் அசல் சான்றிதழ் சரிபார்க்கப்படும்.
இதன்பின், உடல்கூறு அளத்தல் தேர்வு நடத்தப்படும்.
இதில் உயரம், மார்பளவு (ஆண்களுக்கு மட்டும்) போன்றவை அளவெடுக்கப்படும்.
ஆண்களைப் பொறுத்தவரை உயரம் குறைந்த அளவு 168 செ.மீ, இருக்கவேண்டும்
(ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 165 செ.மீக்கு குறையாமல் இருக்கவேண்டும்).
பெண்களை பொறுத்தவரை உயரம் குறைந்தபட்சம் 157 செ.மீ. இருக்க வேண்டும், (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 155 செ.மீக்கு குறையாமல் இருக்கவேண்டும்).
ஆண்களைப் பொறுத்தவரை அனைத்து வகுப்பினர்களுக்கும் சாதாரண நிலையில் மார்பளவு 81 செ.மீ க்கு குறையாமல் இருக்கவேண்டும்.
மூச்சடக்கிய மார்பு விரிவாக்கம் (உதுணீச்ணண்டிணிண) குறைந்த அளவு 5 செ.மீ. குறையாமல் இருக்க வேண்டும்.
உடல்கூறு அளத்தலில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு உடல் தாங்கும் திறன் அறியும் தேர்வும் நடத்தப்படும்.
உடல் தாங்கும் திறன் அறியும் தேர்வு:
உடல் தாங்கும் திறன் அறியும் தேர்வு ஆண் விண்ணப்பதாரர்கள் 1500 மீட்டர் தூரத்தை 7 நிமிடங்களில் ஓடி கடக்க வேண்டும். பெண்கள் 400 மீட்டர் தூரத்தை 2 நிமிடங்களில் ஓடி கடக்க வேண்டும். இதற்கு மதிப்பெண்கள் ஏதும் கிடையாது. ஆனால், இதில் தேர்ச்சி பெற்றவர்களே அடுத்தகட்ட தேர்வான உடல் திறன் அறியும் தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.
உடல் தகுதித் தேர்வு:
இத்தேர்வில் உள்ள கயிறு ஏறுதல், நீளம் (அ) உயரம் தாண்டுதல் மற்றும் 100 மீ (அ) 400 மீ ஓட்டப் போட்டியில் ஏதேனும் ஒன்றில் ஒரு நட்சத்திரம் கூட எடுக்கத் தவறினால் அடுத்த கட்ட தேர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஆண்களைப் பொறுத்தவரை கயிறு ஏறுதல் கட்டாயமானது.
கயிற்றில் கால் படாமல் கைகளின் உதவியால் மட்டுமே கயிற்றை பிடித்து ஏற வேண்டும்.
தொங்கிக் கொண்டிருக்கும் கயிற்றில் குறைந்தபட்சம் 6 மீட்டர் ஏறினால் 2 நட்சத்திரங்கள் (5 மதிப் பெண்கள்), குறைந்தபட்சம் 5 மீட்டர் ஏறினால் 1நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) வழங்கப்படும்.
அடுத்ததாக, நீளம் தாண்டுதல் அல்லது உயரம் தாண்டுதல் ஆகிய இரண்டில் எதை சுலபமாக கருதுகிறோமோ அதில் கலந்து கொள்ளலாம்.
நீளம் தாண்டுதலில் குறைந்தபட்சம் 4.5 மீட்டர் தாண்டினால் 2 நட்சத்திரங்கள்
(5 மதிப்பெண்கள்), குறைந்தபட்சம் 3.80 மீட்டர் தாண்டினால் 1 நட்சத்திரம்
(2 மதிப்பெண்கள்)வழங்கப்படும்.
உயரம் தாண்டுதலில் குறைந்தபட்சம் 1.4 மீட்டர் தாண்டினால் 2 நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்), குறைந்தபட்சம் 1.2 மீட்டர் தாண்டினால் 1 நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்)வழங்கப்படும்.
மூன்றாவது, 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் ஓட்டம், இதில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து அதில் கலந்து கொள்ளலாம்.
100 மீட்டர் தூரத்தை குறைந்தபட்சம் 13.5 விநாடிகளில் கடந்தால் 2 நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்) 15 விநாடிகளுக்குள் கடந்தால் 1 நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) வழங்கப்படும். அல்லது 400 மீட்டர் தூரத்தை குறைந்தபட்சம் 70 வினாடிகளில் கடந்தால் 2 நட்சத்திரங்கள்(5 மதிப்பெண்கள்), குறைந்தபட்சம் 80 விநாடிகளில் கடந்தால் 1 நட்சத்திரம் (2 மதிப் பெண்கள்) வழங்கப்படும்.
பெண் விண்ணப்பதாரர்களை பொருத்தவரை, நீளம் தாண்டுதலில் குறைந்தபட்சம் 3.75 மீட்டர் தாண்டினால் 2 நட்சத்திரங்கள்(5 மதிப்பெண்கள்), குறைந்தபட்சம் 3.25 மீட்டர் தாண்டினால் 1 நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) வழங்கப்படும்.
அடுத்தது இரும்பு குண்டு எறிதல் அல்லது கிரிக்கெட் பந்து எறிதல் ஆகிய இரண்டில் ஏதாவது ஒன்றில் கலந்து கொள்ளலாம்.
குண்டு எறிதலில், குறைந்தபட்சம் 5.5 மீட்டர் எறிந்தால் 2 நட்சத்திரங்கள்
(5 மதிப்பெண்கள்), குறைந்தபட்சம் 4.5 மீட்டர் எறிந்தால் 1 நட்சத்திரம்
(2 மதிப்பெண்கள்) வழங்கப்படும்.
கிரிக்கெட் பந்து எறிதலில், குறைந்தபட்சம் 21 மீட்டர் தூரம் எறிந்தால் 2 நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்), குறைந்தபட்சம் 17 மீட்டர் எறிந்தால் 1 நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்) வழங்கப்படும்.
மூன்றாவது, 100 மீட்டர் தூரத்தை குறைந்தபட்சம் 15.5 செகண்டில் ஓடினால் 2 நட்சத்திரங்கள் (5 மதிப்பெண்கள்), குறைந்தபட்சம் 16.5 செகன்டில் ஓடினால் 1 நட்சத்திரம் (2 மதிப்பெண்கள்)வழங்கப்படும்.
அல்லது 200 மீட்டர் தூரத்தை குறைந்தபட்சம் 33 செகண்டில் ஓடினால் 2 நட்சத்திரங்கள்
(5 மதிப்பெண்கள்), குறைந்தபட்சம் 36 செகண்டில் ஓடினால் 1 நட்சத்திரம்
(2 மதிப்பெண்கள்) வழங்கப்படும். இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் விண்ணப்பதாரர் கலந்து கொள்ளலாம்.
உடல் திறன் அறியும் தேர்வில் பெண்களை பொறுத்தவரை போட்டியில் கலந்துகொண்டு நட்சத்திரம் பெறவில்லை என்றாலும் போட்டியிலிருந்து வெளியேற்றப்படமாட்டார்கள்...
- சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,
நன்றி : தினமலர் (கல்விமலர்) - 25.11.2017
No comments:
Post a Comment