இயற்கையின் படைப்புகளில் பூக்கள் மிகவும் அற்புதமானது. ஒவ்வொரு பூக்களும் தனித்தனி அழகும், மருத்துவக் குணமும் கொண்டுள்ளன. பூக்களில் அதிகளவில் மருத்துவ குணங்களை வாழைப்பூ பெற்றுள்ளது. வாழைப்பூவினை தினசரி உணவில் ஏதோ ஒரு விதத்தில் சேர்த்து வந்தால் உடலுக்கு எந்தவித நோயும் வராமல் இருக்கும். இதில் என்னென்ன மருத்துவ பொக்கிஷங்கள் ஒளிந்துள்ளன என்பதை அறிந்து கொண்டு பயன்படுத்துவது நல்லது.
முன்னோர்கள் வாழையை பெண் தெய்வமாக வழிபட்டனர். மணவிழா, மங்கள விழாக்களில் வாழை மரத்துக்கு முக்கிய இடமுண்டு. குலை வாழையை தலைமகனோடு ஒப்பிடுகின்றனர். இது ஒன்றே நம்முடைய வாழ்வியலில் கலந்ததற்கு மிகப்பெரிய சான்று.
வாழையில் உள்ள ஒவ்வொரு அங்கங்களும் மருத்துவ குணங்களும், பயன்பாடும் மிகுந்துள்ளன.
சர்க்கரை நோய்க்கு
வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது. சர்க்கரை நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று, உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும். இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.
மூல நோய்க்கு
மூல நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மலம் வெளியேறும்போது இரத்தமும் சேர்ந்து வெளியேறும். வாரமிருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து வந்தால் வெகுவிரைவில் குணமாகும். உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து, சிறிது நெய் விட்டு வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.
ஒரு சிலருக்கு அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வயிற்றுக்கடுப்பு உண்டாகும். இதனால் சீதக்கழிச்சல் ஏற்படும். இதற்கு வாழைப்பூவை நீரில் கலந்து அதனுடன் சீரகம், மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, அந்த நீரை இளஞ்சூடாக அருந்தி வந்தால் வயிற்றுக்கடுப்பு நீங்கும்.
பெண்களுக்கு
பெண்களுக்கு வாழைப்பூவை வரப்பிரசாதம் என்று சொல்லலாம். மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அந்நேரத்தில் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து, சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும்.
உடல் அசதி, வயிற்று வலி, சூதக வலி குறையும்.
வெள்ளைப்படுதலால் பெண்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடுகிறது. வாழைப்பூவை ரசம் செய்து அருந்தி வந்தால் வெள்ளைப்படுதல் கட்டுப்படும். கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து, அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி, கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும். வறட்டு இருமல் உள்ளவர்கள் வாழைப்பூ ரசம் செய்து அருந்தி வந்தால் இருமல் நீங்கும்.
குழந்தைப்பேறு
வாரம் இருமுறை வாழைப்பூவை உணவில் சேர்த்து உண்டு வந்தால் தாது விருத்தியடையும். சிலர் குழந்தையின்மையால் பல மன வேதனைக்கு ஆளாகுவர். இவர்களுக்கு வாழைப்பூ ஒரு வரப்பிரசாதமாக விளங்குகிறது. வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர். இதுபோன்ற எண்ணற்ற நன்மைகளை மனித குலத்துக்கு வாழை மரத்தின் ஒவ்வொரு அங்கங்களும் செய்து வருகின்றன.
நன்றி : தினமலர் நாளிதழ் –
13.11.2016
No comments:
Post a Comment