இன்ஸ்பெக்டருக்கு ஓராண்டு சிறை
திருப்பூர்: நிலப் பிரச்னையில், அத்துமீறி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாக, போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு, ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம், ஊத்துப்பாளையத்தைச் சேர்ந்தவர் தங்கமுத்து, 68; விவசாயி. இவரது விவசாய நிலம் குறித்த வழக்கு, தாராபுரம் மாஜிஸ்திரேட்
கோர்ட்டில் உள்ளது.
இவரது உறவினர் சின்னசாமி, அவரது மகன்களுக்கு
எதிராக, அவ்வழக்கு உள்ளது.
வழக்கு விசாரணை தாமதத்தை பயன்படுத்தி, வருவாய், போலீஸ் துறை உதவியுடன், நிலத்தை தன் அனுபவத்துக்கு
கொண்டு வர, சின்னசாமி தரப்பு முயன்றது.
கடந்த, 2013ல், அத்துமீறி நிலத்துக்குள் நுழைந்த சின்னசாமி தரப்புடன், அப்போதைய தாராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர்
சிவகுமார், சிறப்பு, எஸ்.ஐ., சுந்தரராஜ், ஏட்டு நாச்சிமுத்து, வி.ஏ.ஓ., ஜெயப்பிரகாஷ்,
உதவியாளர் சங்கரன் உட்பட, 11 பேர், தங்கமுத்து மற்றும் அவர் குடும்பத்தினரை
அடித்து, உதைத்து மிரட்டினர். தங்கமுத்து, அவரது இரு மகன்களையும், போலீஸ் ஜீப்பில் ஏற்றிச் சென்றனர்.அந்த நிலத்தில் இருந்த மரங்களையும், பயிர்களையும் நாசம் செய்தனர். இது குறித்து தங்கமுத்து அளித்த புகார் மீது, போலீஸ் நடவடிக்கை எடுக்கவில்லை; மாறாக, சின்னசாமியுடன்
தகராறு செய்ததாக, தங்கமுத்துவை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
தங்கமுத்துவின் மருமகள்கள், திருப்பூர் கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும்
இல்லை. தங்கமுத்து, நடந்த சம்பவங்களை குறிப்பிட்டு,
தாராபுரம், ஜே.எம். கோர்ட்டில் வழக்கு தொடுத்தார். மாஜிஸ்திரேட் சசிகுமார் முன்னிலையில் நடந்த விசாரணையில்,
நேற்று முன்தினம் தீர்ப்பு அளிக்கப்பட்டது.குற்றம் சாட்டப்பட்ட சின்னசாமி இறந்து விட்டார். மீதமுள்ள, 10 பேரில், ஒன்பது பேரை எச்சரிக்கையுடன் விடுவித்த மாஜிஸ்திரேட்,
அதிகார துஷ்பிரயோகம்
செய்ததாக, போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவகுமாருக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.சிவகுமார், தற்போது, உடுமலை குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டராக உள்ளார்.
நன்றி : தினமலர் நாளிதழ் - 24.11.2017
No comments:
Post a Comment