அழைக்கிறது காவல் துறை... (1)
ஆர்வமும் திறமையும் உள்ள இளைஞர்களும், இளம் பெண்களும் போலீஸ் பணியில் சேரவேண்டும் என்பதே இத்தொடரை எழுதுவதன் நோக்கம்.
போட்டிக்கு தயார்படுத்திக் கொள்ளும் வழிமுறையை சொல்வதன் மூலம் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கை நிச்சயம் உங்களுக்கு ஏற்படும். உலகின் ‘நம்பர் -1’ போலீஸ் என்று பாராட்டப்படும் ஸ்காட்லாந்து போலீசுக்கு அடுத்த இடத்தில் தமிழக போலீஸ் இடம் பெற்றுள்ளது. உள்நாட்டின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கை பராமரிப்பதும் போலீஸ் துறை என்பதால் அரசு துறைகளிலேயே போலீஸ் துறைக்கு தனி முக்கியத்துவம் உண்டு.
இத்தொடரில், முதலாவதாக கான்ஸ்டபிள் பணி, இரண்டாவதாக சப் இன்ஸ்பெக்டர் பணி மற்றும் மூன்றாவதாக டி.எஸ்.பி., பணி விபரங்களை பார்ப்போம்.
இப்பணிகளுக்கு தேவைப்படும் வயதுவரம்பு, கல்வித்தகுதி, தேர்வு செய்யும் முறை, தேர்வு பற்றிய விவரங்கள், உடல்திறன் அறிய நடத்தப்படும் சோதனைகள் ஆகியவற்றையும், தேர்வில் வெற்றி பெறுவது பற்றியும் பார்ப்போம்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணைக்குழுமம் (TNUSRB) என்ற அமைப்புதான் காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு காவலர் மற்றும் உதவி ஆய்வாளர் ஆகிய பணி இடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்கிறது.
போலீஸ் கான்ஸ்டபிள்:
இப்போது காவலர் பணியில் சேருவது குறித்த வழிமுறைகளை முதலில் பார்ப்போம்.
தகுதி : காவலர் பணியில் சேருவதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10ம் வகுப்பு தேர்ச்சியாகும்.
தமிழில் பேச, எழுத, படிக்க கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும்.
தமிழை ஒரு மொழிப் பாடமாக எடுத்து படித்திருக்க வேண்டும்.
ஒரு வேளை தமிழில் தேர்ச்சி பெறாமல் இருந்து காவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தால், பணியில் சேர்ந்த இரண்டு ஆண்டுகளுக்குள் தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தால் நடத்தப்படும் தமிழ் மொழித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
பணிக்கு சேர விரும்புவோர், 18 வயது நிரம்பியவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்க வேண்டும்.
இதில், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்பினைச் சார்ந்தவர்களுக்கு 26 வயதுக்கு மேற்படாதவராகவும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பினைச் சார்ந்தவர்களுக்கு 29 வயதுக்கு மேற்படாதவராகவும், முன்னாள் ராணுவத்தினர் 45 வயதுக்கு மேற்படாதவராகவும், ஆதரவற்ற விதவைகளுக்கு அனைத்து பிரிவினருக்கும் 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருக்கவேண்டும்.
முன்னாள் ராணுவத்தினரில் வாகன ஓட்டுனர், ஆட்டோ மெக்கானிக், ஆட்டோ எலக்டிரிஷியன், ஆர்மரர்ஸ்க்கு எழுத்துத் தேர்வு மட்டுமே நடக்கும். உடல்திறன் போட்டிகள் கிடையாது.
மற்ற ராணுவ வீரர்களுக்கு உடல்திறன் போட்டியும் உண்டு.
முதலில், காவலர் பணிக்காக தேவைப்படும் நபர்களின் எண்ணிக்கை உட்பட எல்லா விவரங்களையும் குறிப்பிட்டு நாளிதழ்களில் அரசு அறிவிப்பு வெளியிடப்படும். காவலர் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண் மற்றும் பெண்கள் அரசு அறிவித்துள்ளபடி விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையத்திற்கு அனுப்பிய பிறகு, அவை பரிசீலிக்கப்பட்டு, அழைப்பு கடிதம் அனுப்பப்படும்.
இந்த பணிக்காக தேர்வு செய்யப்படுவது பல கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதலில் எழுத்துதேர்வு (Written test) நடத்தப்படுகிறது. அதன் பிறகு, உடல்கூறு அளத்தல் (Physical measurement), உடல்தாங்கும் திறனறித் தேர்வு (Endurance test), உடல்திறன் அறியும் தேர்வு (Physical efficiency test), மருத்துவ பரிசோதனை, போலீஸ் வெரிபிகேஷன் ஆகியவை நடத்தப்படும்.
இவை எல்லாவற்றிலும் தேர்வான பிறகு அவருக்கு பணிநியமன ஆணை வழங்கப்பட்டு பணியில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். அதன் பிறகு அவருக்கு பயிற்சி வழங்கப்படுகிறது. பின்னர், அவருக்கான பணி பிரித்துக் கொடுக்கப்பட்டு பணிக்கு அனுப்பப்படுகிறார்.
- சைலேந்திர பாபு ஐ.பி.எஸ்.,
(தொடரும்)
நன்றி : தினமலர் (கல்விமலர்) - 24.11.2017
No comments:
Post a Comment