முருங்கைக்கீரை, ஆலம்பழம், எண்ணெய்க்குளியல்... இல்லறம் சிறக்க உதவும் எளிய வழிமுறைகள்!
ஆண்மைக்குறைவு...
இன்றைய இளைஞர்களில் பலரை பயமுறுத்திக்கொண்டிருக்கும் தீவிரமான பிரச்னை. ஆனால், பல போலி மருத்துவர்களுக்கு இது ஆயிரக்கணக்கில் பணம் ஈட்டித்தரும் அமுதசுரபி. ஆண்மைக்குறைவை சரிசெய்வதாகச் சொல்லிக்கொண்டு ஏமாற்றிப் பணம் பறிக்கும் கும்பல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேவருவது கவலைக்குரிய செய்தி. இதுபோன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடம் போய் பணத்தையும் இழந்து, சிகிச்சையில் எந்த முன்னேற்றமும் இல்லாமல், மனஅழுத்தத்துக்கு ஆளாகிவருகிறார்கள் நம் இளைஞர்கள்.
ஆண்மைக்குறைவு ஏற்படுவதற்கு பயம், ஆன்டிபயாடிக் மாத்திரைகள் மற்றும் புகைப்பழக்கம் உள்ளிட்ட போதைப்பழக்கங்கள் போன்றவை முக்கியக் காரணங்கள். அதேநேரத்தில் ஆண்மைக்குறைவு என்பது ஒரு நோயே அல்ல என்றும் சொல்லப்படுகிறது. நாம் உண்ணும் உணவில் போதிய அளவு புரதச்சத்து இல்லாததால், ஆண்களுக்குப் பலவீனம் ஏற்படுகிறது. புரதச்சத்துகளை உணவில் சேர்த்துக்கொண்டாலே வயதான காலத்திலும்கூட இனிய இல்லற வாழ்க்கையை வாழ முடியும்.
சில காரணங்களால் இல்லற வாழ்வில் முழுமையாக ஈடுபட முடியவில்லை என்பவர்கள் சில வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும், அந்தக் குறைகள் நீங்கிவிடும். அவற்றில் சில இங்கே...
▇ அதிகாலையில் கண்விழிப்பது, வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்துவது, காலைக்கடன் கழிப்பது, எளிய உடற்பயிற்சி செய்வது... என காலைப் பொழுதைத் தொடங்க வேண்டும். நீந்திக் குளிக்க வசதி இருந்தால் காலையில் நீச்சலடித்துக் குளிக்கலாம். முடிந்த வரை அருகில் உள்ள இடங்களுக்கு நடந்தே செல்வது அல்லது மிதிவண்டியில் (சைக்கிள்) செல்வது என பழக்கப்படுத்திக்கொள்வது நல்லது.
▇ வாரத்துக்கு ஒருநாள் எண்ணெய்க் குளியல் செய்வதை கட்டாயமாக்கிக்கொள்ள வேண்டும். நல்லெண்ணெயுடன் சிறிது மிளகு, ஒரு டீஸ்பூன் சீரகம், சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு பற்கள் மற்றும் காய்ந்த மிளகாய் தலா ஒன்று சேர்த்து லேசாகக் கொதிக்கவைத்துத் தலையில் தேய்த்துக் குளிக்க வேண்டும். அடிக்கடி வெந்நீரில் குளிக்கக் கூடாது.
▇ உணவில் புளி, காரம் குறைவாகச் சேர்த்துக்கொள்ள வேண்டும். மாமிச உணவுகளை அறவே ஒதுக்கிவிடுவது நல்லது.
▇ பகல் உறக்கத்தைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
▇ பாதாம் பருப்பு, வால்நட், அக்ரூட் பருப்பு போன்றவற்றைச் சாப்பிடுவது நல்லது.
▇ ஆலம் பழம், அரசம் பழம், அத்திப் பழம் போன்றவற்றை மரங்களில் இருந்து பறித்து, அதிலிருக்கும் பூச்சிகளை அகற்றிவிட்டு அப்படியே சாப்பிட வேண்டும். வெள்ளரி விதை, நீர்முள்ளி விதை, கசகசா, குங்குமப்பூ, மாதுளம்பழம், நெல்லிக்காய், கோதுமை, வெள்ளைப்பூண்டு, ஜாதிக்காய், வால்மிளகு, அரிசித் திப்பிலி, லவங்கம், கீரை வகைகள் போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது ஆண்மைக்குறைவைப் போக்கி, இல்லறம் இனிக்க உதவும்.
▇ காலை உணவுக்கு முன்னர் மாதுளம்பழம் சாப்பிட்டுவந்தால், ரத்தசோகை நீங்கும்; ஆண்மை பலம் தரும். மதிய உணவின்போது முதல் கவள உணவுடன் கால் டீஸ்பூன் சுக்குப்பொடி சேர்த்து நெய் அல்லது நல்லெண்ணெய் கலந்து சாப்பிட்டுவருவது நரம்புகளுக்கு பலம் தரும். மதிய உணவின்போது முருங்கைக்கீரை மற்றும் முருங்கைப்பூக்களை நெய் சேர்த்து பொரியல் செய்து சாப்பிடுவது உடல் பலம் பெற உதவும். மாலை நேரங்களில் முற்றிய முருங்கைக்காய்களில் சூப் செய்தும் குடிக்கலாம்.
▇ இரவு நேரங்களில் பிஞ்சு முருங்கைக்காய்களை பாலில் வேகவைத்துச் சாப்பிடுவது, முருங்கைப்பூக்களை பாலில் வேகவைத்து சாப்பிடுவது, முருங்கை விதைகளைப் பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிடுவது நல்லது.
▇ இரவில் ஒரு கைப்பிடி வெறும் எள்ளை வாயில் போட்டு நன்றாக மென்று சாப்பிட்டு பால் அல்லது தண்ணீர் குடிக்கலாம். வாரத்தில் இரண்டு நாள்கள், அரிசி கலந்து கஞ்சிபோல் செய்து குடித்துவரலாம்.
▇ இவை தவிர முட்டைக்கோஸ், வெள்ளைப்பூசணி, சுரைக்காய், வெண்டைக்காய், செவ்வாழைப்பழம், அரைக்கீரை, புளிச்சக்கீரை, சோயா பீன்ஸ் மற்றும் கோதுமைக்கஞ்சி, பாதாம் பால், கறிவேப்பிலைச் சட்னி, கொத்தமல்லி துவையல், உளுந்து வடை போன்றவற்றை சேர்த்துக்கொள்ளலாம்.
▇ புகைபிடித்தல், மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருள்கள் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்.
இவற்றையெல்லாம் முறையாகப் பின்பற்றினால் ஆண்மைக்குறைவு பிரச்னை நெருங்கவே நெருங்காது.
எம்.மரிய பெல்சின்
நன்றி : விகடன் செய்திகள் - 12.11.2017
No comments:
Post a Comment