disalbe Right click

Monday, November 6, 2017

கார்டூனிஸ்ட் பாலா கைது - சரியா?

பாலா கைதுக்கு சமூக ஆர்வலர்கள் கண்டனம்
கருத்துரிமைகார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
மக்கள் சிவில் உரிமை கழகத்தின் தேசிய குழு உறுப்பினர் .பாலமுருகன் இதுபற்றி கூறும்போது, “கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டது கருத்துரிமைக்கு எதிரானது. இதேபோல கார்டூனிஸ்ட் ஆசிம் திரிவேதி வரைந்த கேலிச் சித்திரம் தொடர்பாக அவரை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம், ‘கார்டூனிஸ்ட்களை கைது செய்வது கருத்துரிமைக்கு எதிரானது. இதுபோன்ற கைது கூடாது என 2015-ம் ஆண்டு விரிவான தீர்ப்பு வழங்கியது. அதேபோல, பெருமாள் முருகன் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ‘படைப்பாளர்கள் தங்கள் படைப்புகளை வெளிப்படுத்துகிறார்கள் என்றால், அது குறித்து புகார் பெறப்பட்டால் உடனடியாக வழக்கு பதிவு செய்யக்கூடாதுஎன்று தீர்ப்பளித்தது. எனவே, உயர் நீதிமன்ற தீர்ப்புகளுக்கு முரணாக பாலா கைது செய்யப்பட்டுள்ளார்என்றார்.
நெருக்கடி காலத்தில்..
ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி கே.சந்துரு கூறும்போது, 


இந்தியாவில் நெருக்கடி நிலை அமலில் இருந்தபோது, அப்போதைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது குறித்து அபு அப்ரஹாம் என்ற கார்ட்டூனிஸ்ட் ஒரு கார்ட்டூன் வரைந்தார். அந்த கார்ட்டூனில் பக்ருதீன் குளியலறையில் இருந்தவாறே ஆவணங்களில் கையெழுத்திடுவது போல் சித்தரித்து இருந்தார். பத்திரிக்கை தணிக்கை அமலில் இருந்த நெருக்கடி நிலையில்கூட அந்த கார்ட்டூனிஸ்ட் கைது செய்யப்படவில்லை. ஆனால், தற்போது கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டுள்ளது ஏற்கக் கூடியது அல்லஎன்றார்.
கைது செய்தது தவறு
சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்.ரமேஷ் கூறும்போது,


 “இந்தியாவில் சுதந்திரமாக கருத்துகளை தெரிவிக்கவும், வெளியிடவுமான உரிமையை அரசமைப்பு சட்டம் பிரிவு 19 வழங்குகிறது. 19(2) பிரிவில், அதற்கு நெறிமுறையும் உள்ளது. அவதூறாக எழுதினாலோ, பேசினாலோ இந்திய தண்டனை சட்டம் பிரிவு 500, 501, 502 ஆகியவை பயன்படுத்தப்பட்டு வந்தது. கணினி உலகம் உருவான பிறகு, தகவல் தொழில் நுட்ப சட்டம் 2000 வந்தது. அந்த சட்டத்தின் அடிப்படையில், சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றில் தெரிவிக்கப்படும் கருத்துக்களை கட்டுப்படுத்தி நடவடிக்கை எடுக்க தகவல் தொழில் நுட்ப சட்ட பிரிவுகள் பயன்படுத்தபடுகின்றன.
கடந்த 2000-வது ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்டம் பிரிவு 66 மற்றும் அதில் 2009-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின்படி, சமூக வலைதளங்களான ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் கருத்துகள், விமர்சனங்கள் வெளியிடுவோரை கைது செய்து சிறையில் அடைக்க, சட்டப்பிரிவு 66 வழி வகுத்தது. சிவசேனா கட்சியின் நிறுவனர் தலைவர் பால்தாக்கரே மறைந்தபோது நடத்தப்பட்ட வேலை நிறுத்தத்தை விமர்சனம் செய்து வலைதளங்களில் கருத்து தெரிவித்ததற்காக இப்பிரிவின்படி, புனேயைச் சேர்ந்த இளம்பெண்கள் ஷாஹீன் தாதா, ரினு சீனிவாசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று ஏர் இந்தியா விமான ஊழியர்கள் போராட்டத்தின்போது, பிரதமர் அலுவலகத்தை விமர்சித்து கருத்து வெளியிட்ட ஊழியர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ரத்து செய்த உச்சநீதிமன்றம்
இதையடுத்து சட்ட மாணவி ஷ்ரேயா சிங்கால் என்பவர் சட்டப்பிரிவு 66-வை ரத்து செய்யக் கோரி கடந்த 2012-ல் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். சட்டப்பிரிவு 66 ஜனநாயகத்தின் அடிப்படை தூண்களான தனிமனித சுதந்திரம் மற்றும் பேச்சுரிமை ஆகியவற்றுக்கு எதிராக அமைந்துள்ளதாகவும் இச்சட்டப்பிரிவில் கூறப்பட்டுள்ள வார்த்தைகள் தெளிவற்றதாக உள்ளதாகவும் சட்ட விரோதமானது என்றும் அதை உச்ச நீதிமன்றம் 2015-ல் ரத்து செய்தது.
பிரிவு 66 போனாலும் கருத்து தெரிவிப்பவர் மீதான கைது மற்றும் தண்டனை நடவடிக்கைக்கு பிரிவு 67 தற்போது பயன்படுத்தபடுகிறது. சமீபத்தில் சமூக வலைதளத்தில் பிரதமரை விமர்சித்ததாக இதே 67 பிரிவின் கீழ் தூத்துக்குடியில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அரசை, அதன் கொள்கைகளை விமர்சனம் செய்பவர் மீது பிரிவு 67-ன் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா?
பிரிவு 67-ன் நோக்கம் வேறு. அந்தப் பிரிவை படித்தால், பின்வருமாறு அது கூறுகிறது.
பிரிவு 67: ஒருவரின் அந்தரங்க நிலையை கணினி வெளியில் காமம் மிகுந்த (lascivious), பாலுறவு தூண்டுகிற, பார்ப்பவரின் மனதை ஆபாசபடுத்தி கறைப்படுத்தி கெடுக்கக்கூடிய செய்தி, காட்சி அல்லது படங்களை வெளியிடுவதோ, பரிமாறிக்கொள்வதோ குற்றமாகும். முதன்முறையாக செய்யப்படும் இத்தகைய குற்றத்துக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய் 5 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். அடுத்தடுத்து செய்யப்படும் குற்றத்துக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், ரூபாய் 10 லட்சம் அபராதமும் விதிக்கப்படும். முதல் முறை குற்றம் பிணையில் விடத்தக்கதாகும்.
இந்த பிரிவை படிக்கும்போதே இந்த பிரிவு எதற்காக உருவாக்கப்பட்டது என்பது தெரியும் அதாவது, பெண்கள், குழந்தைகளுக்கு பாதுகாப்பு தர, அவர்களை ஆபாசமாக சித்தரிப்பதை தடுக்கும் விதமாக, பெண்களை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டுபவர்களுக்கு எதிராக இந்த பிரிவு இதுவரை பயன்படுத்தபட்டுள்ளதுஎன்றார்.
பாலாவின் கைதுக்கு பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் மற்றும் பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
நன்றி : தி இந்து தமிழ் நாளிதழ் - 06.11.2017

No comments:

Post a Comment