கட்டாயம்! உணவகங்கள், 'லைசென்ஸ்' பெறுவது...
உணவின் தரத்தை உறுதிப்படுத்த நடவடிக்கை
புதுடில்லி: நாடு முழுவதும் செயல்படும் உணவகங்கள், உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும் நிறுவனங்கள், மூன்று மாதங்களுக்குள், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனப்படும், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம், 'லைசென்ஸ்' பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. 'லைசென்ஸ் பெற தவறும் நிறுவனங்கள், இழுத்து மூடப்படும்' என, எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
உணவகங்கள், லைசென்ஸ்,கட்டாயம்
நாட்டில் செயல்படும் உணவகங்களை வரன்முறைப்படுத்தவும், மக்களுக்கு தரமான உணவு கிடைப்பதை உறுதி செய்யும் வகையிலும், மத்திய அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, உணவகங்கள், உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும் நிறுவனங்கள் அனைத்தையும், தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர திட்டமிடப்பட்டு உள்ளது.
அந்த வகையில், அனைத்து உணவகங்களும், மூன்று மாதங்களுக்குள், லைசென்ஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.இது குறித்து, எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., தலைமை செயல் அதிகாரி, பவன் குமார் அகர்வால் கூறியதாவது:மற்ற எந்த பொருட்களை விடவும், உணவின் தரத்தை உறுதி செய்வது மிக முக்கியம். தரமற்ற உணவுகளால், மக்களின் உடல் நலம் பாதிக்கப்படுகிறது.
எனவே, மக்கள் நலன் கருதி, அனைத்து உணவுப் பொருட்களின் தரத்தையும் உறுதி செய்ய, பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளோம்.அதன் ஒரு பகுதியாக, அனைத்து உணவகங்களிலும் ஆய்வு மேற்கொண்டு, அங்கு தயாரித்து, விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் தரத்தை உறுதி செய்து லைசென்ஸ் வழங்கப்படும்.
உணவுப் பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், உணவகங்கள் அனைத்தையும் லைசென்ஸ் பெறுவதுகட்டாயம். இதற்காக, மூன்று மாதங்கள் அவகாசம் வழங்கப்படும். குறிப்பிட்ட காலத்திற்குள் லைசென்ஸ் பெறாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதைய நிலை யில், நாடு முழுவதும் செயல்படும்உணவகங்களில், 30 - 40 சதவீத உணவகங்கள், உரிய லைசென்ஸ் பெறாமல் இயங்குகின்றன. இவர்கள், உரிய காலத்திற்குள், லைசென்ஸ் பெறுவது கட்டாயம்.
இந்த விதிமுறையில், உணவுப் பொருள் சார்ந்த எவ்வகை நிறுவனத்திற்கும் விலக்களிக்க முடியாது. எனினும், சாலையோர உணவகங்கள், மிகச் சிறிய உணவு விற்பனையகங்களுக்கு விதிவிலக்கு அளிக்கப் படும்.இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் படுவர்.இவ்வாறு அவர் கூறினார்.
யாருக்கு லைசென்ஸ்?
உணவகங்கள், உணவுப் பொருள் தயாரிப்பு நிறுவனங்கள், உணவுப் பொருட்களை, 'பேக்கிங்' செய்யும் நிறுவனங்கள், அவற்றை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள், விற்பனைசெய்யும் நிறுவனங்கள், உணவு தயாரிக்க தேவையான மூலப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்கள் உள்ளிட்ட, உணவுப் பொருள் சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களும், எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ.,யிடமிருந்து லைசென்ஸ் பெறுவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
பிரசாதங்களுக்கும் பொருந்தும்
உணவகங்கள், உணவுப் பொருள் விற்பனை நிறுவனங்கள் மட்டுமின்றி, வழிபாட்டு தலங்களில் பிரசாதம் தயாரிக்கும் மையங்கள், அன்னதான கூடங்கள் ஆகியவையும், 'லைசென்ஸ்' பெறுவது கட்டாயம். இதில், விற்பனை செய் யப்படும் பிரசாதங்கள் மட்டுமின்றி, இலவசமாக வழங்கப்படும் பிரசாதங்கள் தயாரிக்கவும், லைசென்ஸ் பெற வேண்டும் என,தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 15.11.2017
குறிப்பு : Food Safety and Standards Authority of India என்பதையே சுருக்கி FSSAI என்று அழைக்கிறார்கள். லைசன்ஸ் எடுப்பது பற்றியும் மேலும் அதைப் பற்றிய தகவல் தெரிந்து கொள்ளவும் http://www.fssai.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லுமாறு தங்களை கேட்டுக் கொள்கிறேன்.
***************************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி
No comments:
Post a Comment