காவல்துறை - பொது நாட்குறிப்பு
இது காவல் நிலையத்தில் அன்றாடம் நடைபெறும் நடைமுறைகள் குறித்த விவரங்களை பதிவு செய்யும் பதிவேடு ஆகும். இதனை காவல் உதவி ஆய்வாளர் முதலில் எழுதி ஆரம்பித்து வைக்க வேண்டும்.
⧭ தினமும் காலை 7 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மறுநாள் காலை 7 மணிக்கு முடிக்கப்பட வேண்டும்.
⧭ மலைப்பகுதி காவல் நிலையங்களில் காலை 8 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மறுநாள் காலை 8 மணிக்கு முடிக்கப்பட வேண்டும்.
⧭ ஒவ்வொரு நாளும் காலை பொது நாட்குறிப்பை ஆரம்பிக்கும்போது கையிருப்பு ஆயுதங்கள் மற்றும் தோட்டாக்கள், புகைவண்டி மற்றும் பேருந்து பயணச்சீட்டுகள் மற்றும் கையிருப்பு பணம் பற்றிய விவரங்களை தணிக்கை செய்து குறிப்பிடப்பட வேண்டும்.
⧭ அன்று வரிசை அழைப்பில் எடுக்கப்பட்ட வகுப்பு மற்றும் முக்கிய அறிவுரைகள் குறித்து குறிப்பெழுத வேண்டும்.
⧭ வரிசை அழைப்பு நடத்தப்பட்ட விவரங்களை குறிப்பிட வேண்டும்.
⧭ காலை 8 மணிக்கு காவலர்களுக்கு அளிக்கப்பட்ட அலுவல் விவரங்களை குறிப்பிட வேண்டும்.
⧭ மனுக்கள் பெறப்பட்ட விவரங்களை பெற்ற நேரம் மற்றும் தேதியுடன் பதிவு செய்ய வேண்டும்.
⧭ வழக்கு பதிவு செய்த விவரங்களை தேதி, நேரம், எதிரிகள் கைது, பிணை மற்றும் நீதிமன்ற காவலுக்கு அனுப்பிய விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
⧭ பதிவு ஏதும் இல்லாவிட்டால் இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை விசேஷம் ஏதும் இல்லை என குறிப்பு எழுத வேண்டும்.
⧭ ஒவ்வொரு பதிவின் முடிவிலும் பதிவு செய்தவர் முழு கையொப்பம் செய்து தனது பதவி நிலையை குறிப்பிட வேண்டும்.
⧭ பொது நாட்குறிப்பை துவக்கி விவரங்கள் எழுதி பொறுப்பில் வைத்துள்ளவர், காவல் நிலையத்தை விட்டு வெளி அலுவல்களுக்கு செல்லும் போது அந்த விவரத்தை எழுதி பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்படுகிறதோ அவரிடம் கையெழுத்து பெற வேண்டும்.
⧭ வெளி அலுவல் முடிந்து காவல் நிலையம் திரும்புகையில், காவல் நிலையத்தில் இடைப்பட்ட நேரத்தில் பதிவு செய்யப்பட்ட நிகழ்வுகளை படித்து பார்த்து, உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
⧭ காவல் நிலையத்திலிருந்து புறப்பட்டது முதல் காவல் நிலையம் திரும்பும் வரை செய்த அலுவல் விவரங்களை முழுமையாக பதிவு செய்ய வேண்டும்.
⧭ இரவு மற்றும் பகல் ரோந்து அனுப்புகையில் அலுவல் செய்ய வேண்டிய விவரம், தணிக்கை செய்யப்பட வேண்டிய நபர்கள் பற்றிய விவரங்களை ஆகியவை குறித்து குறிப்பெழுத வேண்டும்.
⧭ வழக்கு விசாரணை அல்லது மனு அளிக்க யாரேனும் காவல் நிலையம் வந்தால், அவர்களை விசாரணை செய்த விபரம் / திருப்பி அனுப்பிய விவரம் போன்றவற்றை இதில் பதிவு செய்ய வேண்டும்.
⧭ வழிக்காவலில் கைதி உணவிற்கோ அல்லது கழிப்பிட வசதிக்காகவோ காவல் நிலையம் அழைத்து வரப்பட்டது மற்றும் திரும்ப சென்ற விவரம் குறித்து பதிவு செய்ய வேண்டும்.
⧭ அதேபோல் ரோந்துப்பணி முடித்து வருகையில் அலுவல் புரிந்த விவரங்களை தெளிவாக எழுத வேண்டும்.
⧭ பொது நாட்குறிப்பு முடிக்கப்பட்டவுடன் நிலைய அறிக்கையுடன் (SHR) இணைத்து வட்ட ஆய்வாளர் / துணை காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.
⧭ பொது நிறுவனங்கள் புத்தகம் முடிந்ததும் தொகுதி (Volume) எண் மற்றும் எந்த தேதி முதல் எந்த தேதி வரை என்று குறிப்பிட்டு நிலைய ஆவண பதிவேட்டு அறையில் பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
⧭ பொது நாட்குறிப்பை அடித்தல் மற்றும் திருத்தலுடன் எழுதக்கூடாது.
⧭ புரியாத வண்ணமும் எழுதக்கூடாது.
⧭ பக்க எண்கள் குறிப்பிடாமல் எழுதக்கூடாது.
⧭ உடனுக்குடன் எழுதாமலும் இருக்கக்கூடாது.
(தமிழ்நாடு காவல்துறை, காவல் உதவி ஆய்வாளர் கையேடு என்ற புத்தகத்திலிருந்து)
நன்றி : முகநூல் நண்பர் திரு Dhanesh Balamurugan அவர்கள் (வழக்குரைஞர்)
No comments:
Post a Comment