மேகமலையில் வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள் :
மதுரை: தேனி மாவட்டம் மேகமலை சரணாலயத்தில் மரங்கள் வெட்டுதல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கத்தவறிய வனத்துறை அலுவலர்கள் மீது நடவடிக்கைகோரி தாக்கலான வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ்அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
பெரியகுளம் அருகே தாமரைக்குளம் பாண்டி தாக்கல் செய்த பொதுநல மனு:
தேனி மாவட்டம் மேகமலை வன உயிரின சரணாலயப் பகுதி வைகை ஆறு உற்பத்தியாகும் இடமாகும். இதன் மூலம் மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் பயனடைகின்றன. மேகமலையில் குத்தகைக்கு அனுமதிக்கப்பட்ட பகுதிகளில் சில நிறுவனங்களின் தேயிலை, காபி எஸ்டேட்கள் உள்ளன. ஆக்கிரமிப்புகளால் மலையில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேகமலையில் வன சம்பந்தமில்லாத நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசரடி, பொம்மராஜபுரம், மஞ்சனுாத்து, நொச்சி ஓடை, அஞ்சரப்புலி, காந்திகிராமம், வெள்ளிமலை பகுதிகளில் சட்டவிரோதமாக வன நிலத்தை அழித்து, விவசாய நிலமாக மாற்றுகின்றனர். பொம்மராஜபுரம் பகுதியில் பலாப்பழத்தில் விஷம் வைத்து ஏழு சிங்கவால் குரங்குகளை கொன்றுள்ளனர்.
பொம்மராஜபுரம் சிற்றாறு மற்றும் கேரளாவின் பெரியாறு புலிகள் காப்பகத்தை ஒட்டியுள்ள பகுதியில், 100ஆண்டுகள் பழமையான 300 மரங்களை அனுமதியின்றி வெட்டியுள்ளனர். அப்பகுதியில் மூன்று முதல் 4 கி.மீ.,துாரத்திற்கு ரோடு அமைக்கின்றனர். சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்படுவதை தடுக்க, சிறப்புக்குழுவை தேனி கலெக்டர் அமைத்தார். அக்குழு,'நவீன இயந்திரங்கள் மூலம் சட்டவிரோதமாக 300 மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவற்றில் சில மரங்களை தீ வைத்து எரித்துள்ளனர்,' என அறிக்கை சமர்ப்பித்தது. வனத்துறையினருக்கு தெரியாமல் இவ்வாறு நடக்க வாய்ப்பில்லை.
மேகமலையில் 100 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் வனத்தைவிட்டு வெளியேற விருப்பம் தெரிவித்து அரசிடம் மனு அளித்தனர். அவர்களுக்கு தலா 3 சென்ட் நிலம் வழங்கப்படும். வாழ்வாதாரத்தை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. ஆனால், தனியார் எஸ்டேட் நிறுவனங்களுக்கு வேலையாட்கள் தடையின்றி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில், வனத்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேகமலையின் உயிர்ச்சூழலை ஏற்கனவே இருந்த பழைய நிலைக்கு கொண்டுவர வேண்டும். மரங்கள்வெட்டுதல் உட்பட சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கத் தவறிய மேகமலை சரணாலய வன உயிரின காப்பாளர், உதவி வனப்பாதுகாவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பாண்டி மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் எம்.வேணுகோபால், ஆர்.தாரணி அமர்வு மத்திய, மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகசெயலாளர்கள், மாநில முதன்மை தலைமை வனப் பாதுகாவலர், தேனி கலெக்டருக்கு நோட்டீஸ் அனுப்பி ஜன.,10 க்கு ஒத்திவைத்தது.
நன்றி : தினமலர் நாளிதழ் - 05.12.2017
No comments:
Post a Comment