disalbe Right click

Friday, December 29, 2017

ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம்

ஒவ்வொரு நாடுகளுக்கும் இடையே இருக்கின்ற  ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் அந்தந்த நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாடுகளுக்கு அந்நிய செலாவணி ஈட்டித் தருவதில் முக்கிய பங்கு ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்துக்கு உண்டு. அதனால்தான் அரசாங்கத்தால் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் ஊக்குவிக்கப்படுகிறது.
உலகச் சந்தையில் நமது நாட்டின் ஏற்றுமதி அளவு 1.7% ஆகும். இது அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5 சதவீதமாக உயரலாம் என்று சொல்கிறது ஒரு புள்ளிவிவரம். அப்படிப்பட்ட ஏற்றுமதி தொழில் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கான நடைமுறைகள் என்ன என்பதை நாம் முதலில் பார்க்கலாம்.
எந்த நாட்டுக்கு. என்ன பொருள் அனுப்பலாம்?
நாம் முதலில் கவனிக்க வேண்டியது எந்த நாட்டுக்கு எந்த பொருள் தேவையாக இருக்கிறது என்பதுதான். எடுத்த ஆர்டர்களுக்கு பொருட்களை அனுப்பிவைக்க திட்டமிட்டாலும், இந்த விபரமும் கண்டிப்பாக  நம்மிடம் இருக்க வேண்டும்முதலில் சிறிய அளவில் ஆர்டர்கள் எடுத்து அதனை சரியாக அனுப்பி வைத்து கொஞ்சம் அனுபவம் பெற்ற பிறகு. பெரிய ஆர்டர்களை எடுக்கலாம்.
தரம், நிரந்தரம்!
நாம் செய்கின்ற ஏற்றுமதி பொருட்களுக்கு தரம்தான் மிகவும் முக்கியம். இதற்கு ஏற்ப தர அளவுகோல்களை கடைபிடிக்க வேண்டும். இதில் நாம் கவனக்குறைவாக இருந்தால் பொருட்கள் திருப்பி அனுப்பிவிடுவார்கள். அனுப்பிய போக்குவரத்துச் செலவு, திரும்பி வந்த செலவு, டேமேஜ் என்று இது மிகுந்த நஷ்டத்தை ஏற்படுத்தும். தரமாகவும், பாதுகாப்பாகவும் அனுப்பி வைப்பது இந்த தொழிலுக்கு முக்கியம்.
எந்த நாட்டுக்கு எந்த எந்த பொருள் தேவை என்பதை ஏற்றுமதி முகவர் அமைப்புகளே நமக்கு  கொடுத்து உதவுகின்றன. அடுத்து ஏற்றுமதி இறக்குமதியாளர் லைசென்ஸ் வாங்கிவிட்டால் இந்த தொழிலில் நாம் இறங்கிவிடலாம். ஏற்றுமதி செய்ய உள்ள பொருளை நாம் முடிவு செய்த பிறகு அதற்கான மேம்பாட்டுக் குழுவில் சேர்ந்து கொள்ள வேண்டும். ஏற்றுமதி சலுகைகள் மற்றும் பிற உதவிகளையும் இந்தக் குழுவின்  மூலமாகக் பெற்றுக் கொள்ளலாம்.
எந்த பொருட்களை ஏற்றுமதி செய்யலாம்?
மத்திய, மாநில அரசுகள் தடை செய்துள்ள பொருட்களைத் தவிர வேறு எந்த பொருட்களையும் நாம் ஏற்றுமதி செய்யலாம். மேலும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற  உணவுப்பொருட்களுக்கு வெளி நாடுகளில் விற்பனை வாய்ப்பு நன்றாக உள்ளது. காய்கறிகள், பழங்கள், மூலிகைகள், கைவினைப் பொருட்கள் என அனைத்தையும் நாம் ஏற்றுமதி செய்யலாம். வீடுகளில் தோட்டம் அமைப்பதற்காக தேங்காய் மட்டை நார்கூட வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றது.
நிறுவனத்தை தொடங்குவது எப்படி?
தனிநபராக நாம் ஏற்றுமதி செய்ய முடியாது. ஒரு நிறுவனமாக பதிவு கொண்டால்தான் ஏற்றுமதியாளருக்கான லைசென்ஸ் நமக்குக் கிடைக்கும்எனவே முதல் வேலையாக நமது நிறுவனத்தை பதிவு செய்ய வேண்டும். அதன்பிறகு நாம் என்ன தொழிலில் இறங்கப்போகிறோம்? என்பதை முடிவு செய்ய வேண்டும். அதாவது பொருட்களை பிறரிடமிருந்து வாங்கி ஏற்றுமதி செய்யப் போகிறோமா? பொருட்களை நாமே உற்பத்தி செய்யப் போகிறோமா? பிறரிடமிருந்து வாங்கி மதிப்பு கூட்டி ஏற்றுமதி செய்யப் போகிறோமா?  இதில் எந்த வகையில் நாம் இறங்கப்போகிறோம் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதை முடிவு செய்து கொண்டு நிறுவனத்திற்கு பொருத்தமான பெயரை  தேர்வு செய்ய வேண்டும்.
நிறுவனப் பெயர்
நமது விருப்பதிற்கு ஏற்ப பெயரை நாம் வைத்துக் கொள்ளலாம் என்றாலும், இறக்குமதியாளர்கள் அதனைப் பார்த்தவுடன் புரிந்து கொள்ளும்படி எளிமையாகவும், சர்வதேச தொழில் என்பதை உணர்த்தும் வகையிலும் அந்தப் பெயர் இருக்க வேண்டும். குறிப்பாக நிறுவனத்தின் பெயர் Exports, International , Overseas என்ற வார்த்தையுடன்  முடியுமாறு இருந்தால் நல்லது.
லைசென்ஸ்( IE CODE)
கம்பெனிக்கு பெயரை முடிவு செய்த பிறகு இமெயில் ஐடி, விசிட்டிங் கார்டு, லேட்டர் பேட், ரப்பர் ஸ்டாம்புகள், போன்றவை தயார் செய்ய வேண்டும். நிறுவனத்தை பதிவு செய்வதற்கு இது மிகவும்  அவசியம். மேலும் வங்கிக் கணக்கு நிறுவனத்தின் பெயரில் தொடங்க லைசென்ஸ் (IE Code) அவசியம். இவை எல்லாம் தயாரான பிறகு மத்திய அரசின் தொழில் வணிகத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வெளிநாட்டு வாணிகத்திற்கான இயக்குநரகத்தில் நமது நிறுவனத்தின் பெயரை பதிவு செய்து நாம்  லைசன்ஸ் வாங்க வேண்டும்.
வெளிநாட்டு வாணிகத்திற்கான இயக்குனரகம்
சென்னை முகவரி:
Chennai Director General Of Foreign Trade 
Shastri Bhawan Annex, 

26, Haddows Road, Nungambakkam, 
Chennai 600006 
E-Mail: zjdgft@tn.nic.in 
Tel: 044-28283404/08 Fax: 044-28283403

அனுமதி கோரும் இந்த விண்ணப்பத்தில் நமது நிறுவனத்தைப் பற்றிய சிறு விவரம் இணைக்க வேண்டும். மேலும் இதற்கான கட்டண வரைவோலை (DD) , வங்கியின் அத்தாட்சி கடிதம் இணைக்க வேண்டும். தவிர, ஏற்றுமதி செய்பவர்களின் இரண்டு புகைப்படங்கள், ஆதார் கார்டு, பான் கார்டு ஜெராக்ஸ் போன்றவை இணைக்க வேண்டும்.
இந்த அனுமதி கிடைத்து, ஏற்றுமதிக்கான ஒப்பந்தங்களும் நமக்கு கிடைத்துவிட்டால் உடனே தொழிலை தொடங்கி விட வேண்டியதுதான். ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள விதிமுறைகளை மீறாமல் இருந்து, தரமான பொருட்களை குறிப்பிட்ட நேரத்தில் அனுப்பி வைத்தால் ஏற்றுமதி தொழில் எப்போதும் லாபம் தரும்.
மேலும் உதவிக்கு..
இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் சம்மேளனம்
Federation of Indian Export Organisations 
Unit No.706, Spencer Plaza, 
7th Floor, 769, Anna Salai, 
Chennai-600 002. 
Ph:+91-44-28497766/ 28497755/28493333, 
Fax: +91-44-28496666 
Email: fieosr@fieo.org
************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி-30.12.2017 

No comments:

Post a Comment