உடனடி முத்தலாக் என்றால் என்ன?
முஸ்லீம் இனத்தைச் சேர்ந்த ஆண்கள் தங்கள் மனைவியிடம் "உடனடி முத்தலாக்" அல்லது "தலாக்-அல்-பித்தத்" என்றால் தொடர்ந்து மூன்று முறை 'தலாக்' என்ற வார்த்தையைச் சொல்லி விவாகரத்து செய்ய வழிவகை செய்யும் இஸ்லாமிய வழக்கமாகும்.
இதை நேரடியாகவும்
சொல்லலாம். குறுஞ்செய்தி
அல்லது மின்னஞ்சல் அனுப்பவது என எப்படியும் செய்யலாம்.
இது பற்றி திருக்குரான் என்ன சொல்கிறது ?
"தலாக்-அல்-அசான்" மூலம் ஒரு ஆண் தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதானால், ஒரு முறை தலாக் சொல்வதற்கும்
மறுமுறை சொல்வதற்கும்
மூன்று மாத கால இடைவெளி இருக்க வேண்டும். இது அந்தத் தம்பதிகளின் மன மாற்றத்திற்கு வழங்கப்படும்
கால அவகாசம் ஆகும்.
மிகவும் குறைவு
இந்தியாவில் ஒரு சதவிகிதத்துக்கும் குறைவான இஸ்லாமியர்களே இதனை தற்போது பின்பற்றுவதாக ஒரு இணையதள கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
முத்தலாக் வழக்கு
முஸ்லீம் மக்களிடையே வழக்கத்தில் இருக்கும் மேற்கண்ட முத்தலாக் விவாகரத்து மற்றும் பலதார மணம் ஆகியவை உள்ளிட்ட நடைமுறைகள் இந்திய சட்டப்படி செல்லுபடி ஆகுமா? என்ற கேள்வியினை கேட்டு பல்வேறு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் பலரால் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அவர்களுள் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த ஷாய்ரா பானு என்ற பெண்ணும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்றம்
மத்திய அரசிடம் விளக்கம் கேட்டது.
அதன்படி, மத்திய அரசின் சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் முத்தலாக் மற்றும் பலதார மணம் ஆகிய நடைமுறைகளை எதிர்ப்பதாகவும்,
அவற்றை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று ஒரு பிரமாணப் பத்திரத்தை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது.
மத்திய அரசின் நடவடிக்கைக்கு அகில இந்திய முஸ்லீம் தனிநபர் சட்ட வாரியம் முத்தலாக் விஷயத்தில் திருத்தம் செய்வது, புனித குரானில் திருத்தம் செய்வதற்கு சமம் என்று கடும் எதிர்ப்பை தெரிவித்தது. இந்த நிலையில் இதனை அரசியல் சாசன அமர்வு விசாரிப்பதே பொருத்தமானது என்றும், 2017 மே மாதம் 11ம் தேதியிலிருந்து
விசாரனை தொடங்கும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.
அதன்படி உச்சநீதிமன்ற
தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் அவர்களின் தலைமையிலான 5 பேர் கொண்ட அமர்வு மேற்கண்ட வழக்குகள் அனைத்தையும் விசாரித்து வந்தது.
மாறுபட்ட தீர்ப்பு
மேற்கண்ட அரசியல் சாசன அமர்வில் இருந்த ஐந்து நீதிபதிகளில் ஜே.எஸ்.கேஹார், அப்துல் நசீர் ஆகியோர் முத்தலாக் முறைக்கு 6 மாத காலம் தடை விதிக்க வேண்டும் என்றும் 6 மாதங்களுக்குள் மத்திய அரசு முத்தலாக் ஒழுங்குமுறை சட்டத்தை இயற்ற வேண்டும் என்றும் கூறினர்.
மீதமுள்ள நீதிபதிகள் குரியன் ஜோசப், நாரிமன், யு.யு.லலித் ஆகிய இருவரும் முத்தலாக் முறை இந்திய அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனக் கருத்து தெரிவித்ததால், தலைமை நீதிபதி ஜே.எஸ்.கேஹார், "அரசியல் சாசன அமர்வில் ஐந்து நீதிபதிகளில்
மூவர் முத்தலாக் முறையை சட்ட அங்கீகாரமற்றது
எனக் கூறியுள்ளதால்
பெரும்பான்மை அடிப்படையில்
இந்த நீதிமன்றம் முத்தலாக் முறையை சட்ட விரோதமானது" என அறிவிக்கிறது
என்றார். இந்த தீர்ப்பு 2017 ஆகஸ்ட் 22 அன்று காலை 10.30க்கு வழங்கப்பட்டது.
உடனடி முத்தலாக் தடை மசோதாவுக்கு இவ்வளவு எதிர்ப்பு ஏன்?
முஸ்லீம் பெண்கள் (திருமணப் பாதுகாப்பு) சட்டம், போதுமான கால இடைவெளி இன்றி ஒரு இஸ்லாமிய கணவர் உடனடியாக முத்தலாக் சொன்னால், அவரை மூன்று ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்பட வேண்டும் என்று இதில் கூறப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் விவாகரத்து செய்வதற்குக் கடைபிடிக்கும் முத்தலாக் நடைமுறை, இந்திய அரசியல் சட்டவிரோதமானது என்று அறிவித்து இந்திய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள தீர்ப்பின் 8 முக்கிய விஷயங்கள் இவை.
➽ புனித குரானின் அடிப்படை நோக்கத்துக்கு எதிராக முத்தலாக் இருப்பதால் அது ஷரியத்தை மீறும் வகையில் உள்ளது.
➽ ஆதாரப்பூர்வமான திருமண ஒப்பந்தத்தை முத்தலாக் எனக் கூறி தன்னிச்சையான முறையில் வெளிப்படையாக முஸ்லிம் நபர் முறித்துக் கொள்ள உதவுகிறது இந்த வழக்கம்.
➽ முத்தலாக்கை மத ஒழுக்கத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருத வேண்டும். அந்த வழக்கத்தை முஸ்லிம் மத சட்டத்தின் அங்கமாகக் கொள்ள வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் கருத்தை ஏற்றுக் கொள்வது முற்றிலும் கடினமானது என்று அரசியல் சாசன அமர்வில் உள்ள நீதிபதி குரியன் ஜோசஃப் கருத்து. இதே கருத்தை நீதிபதிகள் ஆர்.எஃப். நாரிமன், யு.யு.லலித் ஆகியோரும் ஏற்றுக் கொண்டு தங்களின் தீர்ப்பில் ஆமோதித்துள்ளனர்.
➽ முத்தலாக் என்பது உடனடியாகவும் மாற்றிக் கொள்ள முடியாததுமாக இருப்பதால், பிரிந்த கணவனுக்கும் மனைவிக்கும் இடையே மத்தியஸ்தம் செய்யும் வாய்ப்பே எழாமல் போகிறது.
➽ அனைவருக்கும் சமமான அடிப்படை உரிமை வழங்கும் அரசியலமைப்பின் 14-ஆவது விதியை மீறும் வகையில் முத்தலாக் உள்ளது.
➽ முஸ்லிம் மதத்தின் முதலாவது சட்ட ஆதாரமாக புனித குரான் கருதப்படுவதால்
அதற்கு மட்டுமே மதிப்பு அளிக்க வேண்டும் - நீதிபதி ஜோசஃப் குரியன்.
➽ சட்டம் அனுமதிக்கும்
தலாக் முறையின் ஒரு வடிவமே முத்தலாக். அதேவளை, அதை சகித்துக் கொள்ளும் ஹனாஃபி பள்ளி கூட முத்தலாக்கை பாவத்துக்குரிய
செயலாகக் குறிப்பிட்டுள்ளது
- நீதிபதி ஆர்.எஃப். நாரிமன்.
➽ நீண்ட காலமாக ஒரு வழக்கம் சுயமாகவே கடைப்பிடிக்கப்படுகிறது என்பதற்காக அதை வெளிப்படையாக அனுமதிக்கக்கூடிய
நடவடிக்கையாக அறிவித்து செல்லத்தக்கதாக ஆக்க முடியாது - நீதிபதி ஜோசஃப் குரியன்.
முஸ்லீம் பெண்களின் கருத்து என்ன?
வழக்குத் தொடுக்கும் மனைவிக்கு, சிறையில் இருக்கும் காலகட்டத்தில் பராமரிப்பும் வழங்க வேண்டும் என்றும் இந்தச் சட்டம் சொல்கிறது.
ஆனால், இந்தப்பிரிவு
தங்களுக்கு உதவாது என்றும், தங்கள் திருமண வாழ்வு நீடிப்பதற்கு ஏதாவது வழிவகை செய்ய வேண்டும் என்றும் சில இஸ்லாமிய பெண்கள் உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
ஒரு கணவனை சிறையில் அடைத்தால், அந்த மனைவியின் திருமண வாழ்வு நீடிக்காது என்றும், சிறையில் இருக்கும்போது அந்தக் கணவரால் பராமரிப்பு செலவுக்கு பணம் தர முடியாது என்பதால் மனைவியும் குழந்தைகளும் இன்னலுக்கு ஆளாகவே நேரிடும் என்பதால் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்படுகிறது.
**********************************************அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 29.12.2017
No comments:
Post a Comment