disalbe Right click

Monday, December 11, 2017

நீதிமன்றங்களை, தவறாக வழி நடத்தும் வழக்கறிஞர்கள்

 
சென்னை:நீதிமன்றங்களை, தவறாக வழி நடத்தும் வழக்கறிஞர்கள் மீது நீதிமன்ற குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தலைமை வழக்கறிஞருக்கு, சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த, ஆனந்த் குமார் ஜவஹர் என்பவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:
தி.நகர், ரங்கநாதன் தெருவில், நானும், வி.எஸ். ஜெயராஜன் என்பவரும் பங்குதாரர்களாக, வாடகை கட்டடத்தில் துணிக்கடை நடத்தினோம். அந்த கட்டடம், சாந்தி மீனாட்சி என்பவருக்குச் சொந்தமானது. இடையில், எனக்கும், ஜெயராஜனுக்கும் பிரச்னை ஏற்பட்டது.
இந்நிலையில், கடை ஆறு மாதங்களாக மூடி கிடப்பது போல சித்தரித்து, சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் மற்றும் லோக் அதாலத் நீதிமன்றங்களை, வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்களும் திட்டமிட்டு ஏமாற்றி, என்னை கடையில் இருந்து வெளியேற்றினர்.
அந்த சம்பவங்கள் அனைத்தும், கடை கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, கடையை ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த, நீதிபதி பி.என்.பிரகாஷ் பிறப்பித்த உத்தரவு:
வழக்கறிஞர்கள், நீதிமன்றங்களை தவறாக வழி நடத்துகின்றனர் என்பதற்கு, இந்த வழக்கு ஒரு உதாரணம். பணத்துக்கு ஆசைப்பட்டு, நீதிமன்ற ஊழியர்களும், தவறான வழியில் சென்றுள்ளனர். அதனால், மாம்பலம் போலீஸ் துணை கமிஷனர், உடனடியாக அந்த கடையை மீட்டு, ஆனந்த் குமார் ஜவஹரிடம் ஒப்படைக்க வேண்டும்.
அதேபோல், ஜெயராஜன், சாந்தி மீனாட்சி ஆகியோர் மீது, குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். பதிவுத்துறை சம்பந்தப்பட்ட நீதிமன்ற ஊழியர்கள் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதி மன்றங்களை தவறாக வழிநடத்தி, பெறப்பட்ட அனைத்து உத்தரவுகளும் ரத்து செய்யப்படுகின்றன. இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை, கீழ் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும்.
நீதிமன்றங்களை தவறாக பயன்படுத்தும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஓய்வு பெற்ற நீதிபதி கே.சந்துரு, ஏற்கனவே, தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளார்.
நீதிமன்றத்தை ஏமாற்றியவர்கள் மீது, நீதிமன்ற குற்றவியல் அவமதிப்பு நடவடிக்கை எடுக்க, தலைமை வழக்கறிஞருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நன்றி : தினமலர் நாளிதழ் - 10.12.2016   

No comments:

Post a Comment