என்ன செய்ய வேண்டும்?
நாட்டில், ஆயிரக்கணக்கான கோர்ட்டுகள் உள்ளன. மாஜிஸ்திரேட் கோர்ட்டுகள் முதல், உச்ச நீதிமன்றம் வரை, அவற்றிற்கு பெயர்களும் உண்டு. இவற்றில், எந்த கோர்ட்டுக்கும் இல்லாத சிறப்பு, மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளுக்கு உண்டு. மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளில், மாஜிஸ்திரேட் ஸ்தானத்தில் அமர்ந்திருப்பவர் தீர்ப்பு வழங்கி விட்டால், அந்த தீர்ப்புக்கு, அப்பீலே கிடையாது. ஆனால், மாஜிஸ்திரேட்டுகள் பெரும்பாலும் வழங்கும் தீர்ப்பு, அபராதமாக தான் இருக்கும். அத்தி பூத்தாற் போல, எப்பவாவது சில வழக்குகளுக்கு, சிறை தண்டனை வழங்கி உத்தரவிடுவர்.அடிதடி வழக்கு, சூதாட்ட வழக்கு, மாடுகளை ரோட்டில் திரிய விட்ட வழக்கு போன்றவை தான், பெரும்பாலும், மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளில் விசாரணைக்கு வரும்.
இந்த மாஜிஸ்திரேட்டுகளால், வேறு ஒரு மாதிரியான இன்னலும் உண்டு. காவல் துறையினர் ஒரு நபரை அழைத்து வந்து, மாஜிஸ்திரேட் முன் நிறுத்தினால்,
என்ன, ஏது என விசாரிக்காமல், நின்று கொண்டிருப்பவரின் முகத்தை கூடப் பார்க்காமல், '15 நாட்கள் ரிமாண்ட்' என எழுதி, கையொப்பமிட்டு
விடுவது வழக்கம். மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளை தவிர, நாட்டில் இருக்கும் அத்தனை கோர்ட்டுகள் வழங்கும் தீர்ப்புகளை எதிர்த்து, மேல் முறையீடு செய்ய முடியும். உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை கூட மறு ஆய்வு செய்ய, மனு போட முடியும். மாவட்ட முன்சீப் கோர்ட்டுகள் முதல், உச்ச நீதிமன்றம் வரை, கோடிக்கணக்கில்
வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன; தீர்ப்புக்காக காத்துக் கிடக்கின்றன.வழக்குகள் தேங்கிக் கிடக்கும் அதே சமயம், நீதிபதிகளுக்கான காலி பணியிடங்களும்,
ஆண்டு கணக்கில் நிரப்பப்படாமல் காலியாகவே உள்ளன.
சாதாரண வழக்குகளும், சாமானியர்களின் வழக்குகளும், விசாரணைக்கு வருவதற்கே மாத கணக்கிலும், ஆண்டு கணக்கிலும் ஆகிறது. ஆனால், பிரபலமானவர்களும், அரசியல்வாதிகளும்
தொடுக்கும் மனுக்கள் மட்டும், மனு கொடுத்த மறு நாளே விசாரணைக்கு வருகின்றன என்பது, புரியாத புதிர்.
இன்றைக்கு, நீர்நிலைகள் அரசியல்வாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டு, கட்சிக்காரர்களுக்கு பட்டா போட்டுக் கொடுக்கப்பட்டு, மழைக் காலங்களில் தண்ணீர் வழிந்தோட வழியின்றி நகரில் புகுந்து, குடியிருப்புகளில் தேங்கி நிற்பதற்கு, முக்கிய காரணமே, நீதிமன்றங்கள் தான் என்றால் மிகையில்லை.உயர் நீதிமன்ற மதுரை கிளை கூட, நீர்நிலையை துார்த்து கட்டப்பட்டது
தான்!
எப்படி, மாஜிஸ்திரேட் கோர்ட்டுகளில், காவல் துறையினர் கொண்டு வந்து நீட்டும், ரிமாண்ட் பேப்பர்களில்,
மாஜிஸ்திரேட்டுகள் கண்ணை மூடிக் கொண்டு, 'கம்பி எண்ண' அனுப்பி வைக்கின்றனரோ,
அது போல, கோர்ட்டுகளில் தடை கோரி சமர்ப்பிக்கப்படும் எல்லா மனுக்கள் மீதும், உடனடியாக, ஓர் இடைக்கால தடையை பிறப்பிப்பதே, பல கோளாறுகளுக்கு
ஏதுவாக அமைந்து விடுகிறது.
பல இடங்களில், பிளாட்பார கடைகள் கூட, நீதிமன்ற தடை உத்தரவு பெற்று இயங்கி கொண்டிருப்பதாக,
ஒரு போர்டை வைத்த படி இயங்குவதை, சர்வ சாதாரணமாக காண முடியும்.பல பொதுநல வழக்குகளில், 'விளம்பரம் தேடுவதற்காக போடப்பட்ட வழக்கு' எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து, மனுதாரருக்கு அபராதமும் விதித்து, நீதிமன்றங்கள் தீர்ப்பளிக்கின்றன.தவிர, கோர்ட்டுகள், சாமானியர்களுக்கு
எதிராகவும், அரசியல்வாதிகளுக்கு சாதகமாகவும் இயங்குவதாக, பொதுமக்களிடையே ஓர் அபிப்ராயம் உண்டு. அந்த அபிப்ராயத்தை
களைய, இதுகாறும் நீதிமன்றங்கள் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா?நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்ந்தாலும், அதிக எண்ணிக்கையில்
காலி பணியிடங்கள் இருப்பதால் தான், வழக்குகள் அதிகளவில் தேக்கமடைந்து உள்ளன; நீதிபதிகளுக்கான பணிச்சுமையும் அதிகரிக்கிறது.
இந்த பிரச்னைக்கு தற்காலிக தீர்வாக, ஓய்வு பெற்ற நீதிபதிகளையும், சட்ட வல்லுனர்களையும் பயன்படுத்த முடியுமா என்பது, மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
நீதிபதி, மைக்கேல் டி.குன்ஹா வழங்கிய தீர்ப்பை திருத்தி, நீதிபதி, குமாரசாமி வழங்கிய தீர்ப்பால், தமிழகம் அனுபவிக்கும் அவஸ்தையை, வேறு எந்த நீதிபதியாலும்
சரி செய்ய இயலவில்லையே... மேல்முறையீடு என்ற அப்பீலால் வந்த அவஸ்தை தானே இது!
இது தவிர, நீதித்துறையில்
இன்னொரு கோளாறும் உள்ளது.
கால்நடை தீவன ஊழல் வழக்கில், ஐந்தாண்டுகள்
சிறை தண்டனை பெற்றுள்ள, பீஹார் முன்னாள் முதல்வரும், ஆர்.ஜே.டி., கட்சி தலைவருமான, லாலு பிரசாத் யாதவுக்கு, சிறப்பு அனுமதி அளித்து, சிறைக்கு செல்லாமல் பாதுகாத்துக்
கொண்டிருக்கிறது, ஒரு நீதிமன்றம்.லாலு சிறைக்குச் சென்று, ஐந்தாண்டு தண்டனையை இந்த பிறவியில் அனுபவிப்பார்
என, தோன்றவில்லை. இதே கருணையை, அந்த கோர்ட், ஒரு சாமானியனுக்கு
வழங்குமா?பீஹாரில், லாலு; தமிழகத்தில், தினகரன், நடராஜன் போன்றோர், கோர்ட்டுகளின்
அனுக்கிரஹத்தால், சுதந்திரமாக உலாவுகின்றனர்.அன்னிய செலாவணி வழக்கில், இரண்டாண்டு சிறை தண்டனை பெற்றுள்ள, நடராஜன், இன்னும் சிறை வாசலை கூட எட்டிப் பார்க்கவில்லை.
'பெரா' வழக்கில், 30 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ள தினகரனிடமிருந்து,
30 ரூபாயை கூட, அரசுகளால் வசூல் செய்ய இயலவில்லை. வெட்கக் கேடு.இது போன்ற சலுகைகளை, கோர்ட்டுகள், சாமானியர்களுக்கும் வழங்க முன்வந்தால், கோர்ட்டுகள் மற்றும் நீதிபதிகளின் மீது, மக்களுக்கு சந்தேகம் ஏற்பட வழி இருக்காது.இந்த கோளாறுகளை சரி செய்து, நீதியை நிலை நாட்ட ஏதாவது உபாயம் உள்ளதா... உள்ளது. ஆனால், நடைமுறைப்படுத்த அரசு முன்வர வேண்டுமே!
மாஜிஸ்திரேட் பதவியிலிருந்து,
செஷன்ஸ் கோர்ட், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை, வக்கீல்களாக பணியாற்றியவர்களை நீதிபதிகளாக, நியமனம் செய்யக் கூடாது.வக்கீல்களை நீதிபதிகளாக நியமிக்கக் கூடாதென்றால்,
நீதிபதிகளை எப்படி நியமனம் செய்வது?ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., - ஐ.எப்.எஸ்., பதவிகளுக்கு, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம், எப்படி நியமனம் செய்கிறதோ, அது போல, நீதிபதிகள் பதவிகளுக்கும்
தேர்வு வைத்து, தேர்வு பெறுபவர்களை, நேரடியாக, நீதிபதிகளாக நியமனம் செய்யலாம்.நிரந்தர தடை, இடைக்காலத் தடை போன்றவற்றை, குருட்டாம் போக்கில், மனு செய்த மறு நாளே வழங்கக் கூடாது.
உரிய விசாரணை மேற்கொண்டு, தடை உத்தரவு வழங்குவதால், மத்திய, மாநில அரசுகளுக்கோ, பொதுமக்களுக்கோ எந்த பாதிப்பும் ஏற்படாது என்ற பட்சத்தில் மட்டுமே, தடை உத்தரவு வழங்க வேண்டும்.
அந்த தடை உத்தரவும், ஆறு மாதங்களுக்கு மேல் நீட்டிக்கப்படக் கூடாது. அதற்குள் ஓர் உறுதியான தீர்ப்பை, நீதிமன்றம் வழங்க வேண்டும். 181வது நாள், கோர்ட் பிறப்பித்த தடை உத்தரவு, தானாகவே காலாவதி ஆகி விட வேண்டும். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள வழக்குகளை, மாவட்ட நீதிமன்றங்களும்,
ஒரு கோடி ரூபாயிலிருந்து, 10 கோடி ரூபாய் வரையுள்ள வழக்குகளை, உயர் நீதிமன்றங்களும், 10 கோடி ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள வழக்குகளை, உச்ச நீதிமன்றமும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.மாவட்ட நீதிமன்றங்கள், தீர்ப்பை மூன்று மாதங்களுக்குள்ளும், உயர் நீதிமன்றங்கள், ஆறு மாதங்களுக்குள்ளும், உச்ச நீதிமன்றம், ஓராண்டுக்குள்ளும் தீர்ப்புகளை வழங்கி விட வேண்டும். மேற்குறிப்பிட்டுள்ள காலக்கெடு என்பது, கேள்விக்கு உள்ளாக்கப்படலாம்.
எப்படி முடியும் என, வினவலாம். முயன்றால் முடியாதது எதுவுமே கிடையாது.
மன்னர்கள் காலத்தில், மன்னர்கள் ஒரே, 'சிட்டிங்'கில், நீதி தவறாது, நேர்மையாக நீதி வழங்கினர் என்பதை, கவனத்தில் கொள்ள வேண்டும்.'வாய்தா' என்ற பேச்சுக்கே இடமிருக்கக் கூடாது. வாய்தா கேட்டு, வக்கீல்களும்,
கட்சிக்காரர்களும் இழுத்தடிப்பதே,
வழக்குகள் ஆண்டு கணக்கில், நீண்டு கொண்டிருப்பதற்கு
முக்கிய காரணம்.இருபது ஆண்டுகள், ஜெயலலிதா அண்ட் கோவின் சொத்து குவிப்பு வழக்கு நீண்டு கொண்டிருந்ததற்கு, வாய்தாவும், மனுவுக்கு மேல் மனு போட்டுக் கொண்டிருந்ததும் தானே காரணம்!
மாவட்ட கோர்ட்டோ, உயர் நீதிமன்றமோ, உச்ச நீதிமன்றமோ, ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கி விட்டால், அது தான் இறுதித் தீர்ப்பு. அதற்கு மேல் அந்த தீர்ப்புக்கு மேல் முறையீடு, மறு சீராய்வு இருக்கக் கூடாது;
'அப்பீல்' என்ற பேச்சுக்கே இடம் கூடாது.ஒரு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டதென்றால், வழங்கப்பட்டது
தான். அதன்பின் கருணை, தயவு, தாட்சண்யம் என்ற பேச்சுக்களுக்கே இடம் இருக்கக் கூடாது.தண்டனை குறைப்பு, விதிவிலக்கு போன்ற சாக்கு போக்குகளுக்கு அனுமதி கிடையாது.குற்றவாளி, எப்பேர்பட்ட கோடீஸ்வரனாக இருந்தாலும், சிறை சாலையில், சிறை விதிகளின் படி தான் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். பிரைவேட் மருத்துவமனைகளில்
சிகிச்சை பெறுவதற்கோ, சிறப்பு உணவு வரவழைத்து உண்பதற்கோ அனுமதி கூடாது.சிறை சாலையில் என்ன உணவு வழங்கப்படுகிறதோ, அந்த உணவை தான் கைதிகள் உண்ண வேண்டும்.அரசியல் கைதியாக இருந்தாலும் சரி; வருமான வரி கட்டுபவராக இருந்தாலும் சரி. தனி அறை, பேன், மேஜை, டேபிள் போன்ற எந்த சலுகைகளுக்கும் அனுமதி கிடையாது.
கைதி, கைதியாகத் தான் நடத்தப்பட வேண்டும். சொகுசு வாழ்க்கை வாழ அனுமதி கிடையாது. காந்தி, நேரு, பட்டேல், திலகர், ராஜாஜி, காமராஜர் போன்றோர், சிறையில் சிறப்பு வசதிகளையா பெற்றனர்... வ.உ.சி., சிறையில் செக்கிழுக்கவில்லையா?
இந்த நடைமுறைகளை அரசு அமல்படுத்த முயன்றாலே, நாட்டில் நீதி, நிலை நாட்டப்படும். கீழ் கோர்ட்டுகளிலிருந்து உச்ச நீதிமன்றம் வரை, கோடிக்கணக்கில் வழக்குகள் முடங்கி கிடக்காது. அரசு ஆலோசிக்குமா?
எஸ். ராமசுப்ரமணியன்
-எழுத்தாளர்
இ - மெயில்: essorres@gmail.com
நன்றி : தினமலர் நாளிதழ் - 16.12.32017
No comments:
Post a Comment