ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தால், முதலில் அவருக்கு புகார் ஏற்புச் சான்றிதழ் அளிக்க வேண்டும். பின்பு அந்தப் புகார் குறித்து விசாரிக்க வேண்டும். புகாரில் உண்மை இருக்கும் பட்சத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! என்று உயர்நீதிமன்றம் தொடங்கி, உச்சநீதிமன்றம் வரை எத்தனையோ தீர்ப்புகள் அளிக்கப்பட்டாலும் காவல்துறையினர் அதனை மதிப்பதே இல்லை. காவல்துறையினர் தங்களுக்கென்று ஒரு தனிக் கொள்கை வைத்துள்ளனர். அதன்படியே நடந்து வருகின்றனர். அப்படி ஒரு வழக்கு திருப்பூரில் சமீபத்தில் நடந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகேயுள்ள ரங்கா நகர் - வைஷ்ணவி கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. வய்து 45. ஆடிட்டராக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவர் சதானந்தம் (வயது 23) என்பவருக்கும் அவருக்கும் சாக்கடை கால்வாய் பிரச்சனையில் முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
இந்தநிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு நாள் தனது நாயுடன் ரவி வாக்கிங் சென்றுள்ளார். அப்போது சதானந்தம் வளர்த்து வருகின்ற நாய் அவரை கடித்துள்ளது. அதனால் காய்ம் அடைந்த ரவி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். சதானந்தம் வேண்டுமென்றே தன்னுடைய நாயை ஏவிவிட்டு என்னை கடிக்க வைத்தார்! என்று அவினாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்குப் பதிய காவல்நிலையத்தில் மறுத்ததால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். நீங்கள் அளித்தது பொய்புகார். ஆகையால் வழக்கு முடித்து வைக்கப்பட்டது என்று ரவிக்கு காவல்துறையில் இருந்து கடிதம் வந்துள்ளது.
அதிர்ச்சி அடைந்த ரவி காவல்துறை ஐ.ஜி அவர்களுக்கு புகாரை அனுப்பியுள்ளார். அங்கும் எந்த நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால், சென்னை ஹைகோர்ர்டில் வழக்கு பதிவு செய்துள்ளார் ரவி.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு
மனுவை விசாரித்த நீதிபதி ரமேஷ், பிறப்பித்த உத்தரவில், 'புகார் அளித்தால் அதன் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடவடிக்கை மற்றும் முடிவுகளை உரிய முறையில் பதிவு செய்து, புகார்தாரருக்கு அதன் விவரங்களை தர வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
மறுபடியும் முதலில் இருந்து
இதன் நகலை பெற்ற , காவல்துறையினர் வழக்கு பதிவு ஏதும் செய்யாமல், மீண்டும் ரவியின் வீட்டில் ஒரு அறிவிப்பை ஒட்டி சென்றுள்ளனர். அதில், 'உங்கள் புகார் மீது நடத்திய விசாரணையில், புகார் உண்மையல்ல எனத் தெரிய வந்து, விசாரணை முடிக்கப்பட்டது. இந்த தகவலை பெற்றுக் கொண்டதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளதாக 29.12.2017 தினமலர் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய தண்டணைச் சட்டம் - பிரிவு : 211
பொய்யான புகார் அளிப்பவர் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தண்டணைச் சட்டம்-பிரிவு 211ல் காவல்துறையினருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்படி பொய்புகார் அளித்தவருக்கு இரண்டு வருடங்கள் வரை தண்டணை வழங்கலாம். இது வரையில் காவல்துறையினர் இந்தப் பிரிவை பயன்படுத்தியதற்கு ஆதாரம் ஏதேனும் உள்ளதா? தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
**************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 30.12.2017
No comments:
Post a Comment