disalbe Right click

Thursday, December 21, 2017

காவல்துறை - குறைகள்

என்ன செய்ய வேண்டும்?
'பொது இடங்களில் புகை பிடிப்போர் மீது நடவடிக்கை எடுப்பதில் திருப்தியில்லை; அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' என கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில், சமீபத்தில் வழக்கு தொடரப்பட்டது.வழக்கு விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை பார்த்து அதிர்ச்சி அடைந்த நீதிபதி, 'புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தவுடன், குற்றம் செய்தோர் மீது ஜாமினில் வெளிவரக்கூடிய சட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளீர்கள். 'சிறார் சட்டப் பிரிவு, 177 ஏன் சேர்க்கவில்லை? அந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய, போலீசாருக்கு தெரியாதா? எப்..ஆர்., போட தெரியாத போலீசார், ஓய்வுபெற்ற காவல் துறையினரை நியமித்து கொள்கின்றனர். 'சட்டம் தெரியாத போலீசாரால், எப்..ஆர்., கூட ஒழுங்காக பதிவு செய்ய முடியவில்லை. போலீஸ் பயிற்சியில், 'டிப்ளமா இன் லா' அவசியம் படிக்க அரசுக்கு அறிவுறுத்துங்கள்' என, நீதிபதி உத்தரவிட்டார்.
அது போல, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, 16 வயது சிறுமி, 2014ல், நான்கு பேரால், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.இது தொடர்பாக, காவல் துறையினர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என, 2015ல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர், பிருந்தா கராத், அப்போதைய, டி.ஜி.பி., அசோக்குமாரை சந்தித்து முறையிட்டார்.' சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் முறையான விசாரணை நடத்தாத காவல் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என வலியுறுத்தி, மனு அளித்தார்பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'பாதிக்கப்பட்ட சிறுமி, கற்பழிக்கப்படாததால், 'பாக்சோ' எனப்படும், குழந்தைகளை பாலியல் குற்றங்களிலிருந்து பாதுகாக்கும் சட்டத்தை பயன்படுத்தவில்லை என, காவல் துறையினர் சொல்கின்றனர். 'பாக்சோ சட்டத்தின் படி, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தாலும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கலாம். ஆனால், அது குறித்த புரிதலும், தெளிவும், அந்த ஊர் போலீசாருக்கு தெரியவில்லை.
சட்டம் தெரியாத போலீசார்!

'சிறார்களை காக்கும் சிறுவர் நீதி சட்டம் - 2000 பற்றிய அறிவும், இவர்களுக்கு சுத்தமாக இல்லை' என, காட்டமாகவே கூறியிருந்தார்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்தும், பிருந்தா கராத்தின் பேச்சும் உண்மை என்றே சொல்லத் தோன்றுகிறது.அந்த அளவுக்கு காவல் துறையினரிடம், சட்டம் மற்றும் புலனாய்வு அறிவு குறைந்து வருகிறதுகடந்த, 30 - 40 ஆண்டுகளுக்கு முன், பதவி உயர்வுக்கென, துறை சார்ந்த தேர்வு ஒன்றை நடத்தி, அதில் தேர்ச்சி பெற்றோருக்கு மட்டுமே பதவி உயர்வு அளித்தனர்ஆனால், இன்று அப்படி கிடையாது. சாதாரணமாக ஒரு காவலராக துறையில் உள்ளே நுழைந்து விட்டால், ஓய்வுபெறும் வரை அவருக்கு கொடுக்க வேண்டிய பதவி உயர்வை, கொடுத்தே ஆக வேண்டும் என்ற நிலை உள்ளது.

அடுத்தடுத்த பதவியை வகிக்க தகுதி உள்ளவர்தானா?; அந்த பதவியை வகிக்க தன் தகுதியை, அறிவை, விஷய ஞானங்களை விருத்தி செய்து கொண்டாரா? என, யாரும் சோதித்துப் பார்ப்பதில்லைஅதனால், எப்படியானாலும் பதவி உயர்வு கிடைத்து விடும். எதற்கு வீணாக தேவையில்லாத விஷயங்களில் காலத்தையும், அறிவையும் வீணாக்க வேண்டும் என, சும்மா இருந்து விடுகின்றனர்; விஷயங்களை கற்றுக் கொள்ள மறுத்து விடுகின்றனர்காவல் துறையில் காவல் கண்காணிப்பாளர் அந்தஸ்துக்கு மேல், அதாவது, டி..ஜி., - .ஜி., - டி.ஜி.பி., ரேங்கில், 100 பேரும், டி.எஸ்.பி., மற்றும், எஸ்.பி., ரேங்கில், 1,100 பேரும் உள்ளனர்இவர்களுக்கு, சட்டம் சம்பந்தமான பிரச்னைகளை கையாள்வதை விட காவல் துறையை நிர்வகிப்பதிலேயே பெரும் பொழுது கழித்து விடுகிறது. இதனால், சட்டங்கள் பற்றிய நுணுக்கங்களை ஆராய்வதை விடுத்து, பணியாளர்களை எப்படி தண்டிப்பது, எந்த சட்டத்தில் அவருக்கு தண்டனை கொடுப்பது என்பதிலேயே, சிந்தனையை செலவிடுகின்றனர்.
காவல் துணை கண்காணிப்பாளர் நிலைக்கு கீழ் உள்ள, ஆய்வாளர், உதவி ஆய்வாளர், தலைமை காவலர் நிலையில் உள்ளவர்களே, புலன் விசாரணை செய்கின்றனர்இவர்களுக்கு, சட்டம் மற்றும் புலன் விசாரணை பற்றிய போதுமான விஷய ஞானம் இல்லாததால் தான், நிறைய வழக்குகளில் குற்றம் நிரூபிக்கப்படாமல், நீதிமன்ற தண்டனையில் இருந்து குற்றவாளிகள் தப்பித்து விடுகின்றனர்.
காவல் துறையில் உள்ளோரில், 20 சதவீதம் பேர் தான், சட்டம் பற்றியும், புலன் விசாரணை பற்றியும் அறிந்தவர்களாக உள்ளனர். மீதம் உள்ள, 60 சதவீதம் பேர், பாதுகாப்பு, ரோந்து மற்றும் போக்குவரத்தை சரி செய்வது என, மூளைக்கு வேலையில்லாத பணிகளில், ஒதுங்கி கொள்கின்றனர்.
மீதம் உள்ள, 20 சதவீதம் பேர், எதற்கும் லாயக்கற்றவர்களாக உள்ளனர். இதில் உடல் ரீதியாக, தகுதியற்றோரும் அடங்குவர்.புலனாய்வு என்பது, முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதிலிருந்து, புலன் விசாரணை மேற்கொண்டு, கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, குற்றவாளிக்கு தண்டனை வாங்கி கொடுப்பது வரை தொடரும்.
ஆனால், இன்றைய காலகட்டத்தில், முழு விஷயங்களும் தெரிந்த ஓர் அதிகாரியை பார்ப்பது, அரிதிலும் அரிதாகி விட்டது.
ஒரு வழக்கின் அடிப்படை ஆதாரமே, முதல் தகவல் அறிக்கை தான். ஒரு வீட்டுக்கு அஸ்திவாரம் எந்த அளவுக்கு முக்கியமோ, அது போல வழக்கின் அஸ்திவாரம், முதல் தகவல் அறிக்கை தான்முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் போது, புகார் தருபவரிடமிருந்து என்னென்ன தகவல்கள் கேட்டு பெற வேண்டும் என்பது, 75 சதவீதம் காவல் துறையினருக்கு தெரிவதில்லைமேலும், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தவுடன் கால தாமதம் இல்லாமல், நீதிமன்றத்திற்கு அனுப்புவதில்லை. இந்த விஷயங்கள் எல்லாம் ஒரு வழக்கிலிருந்து குற்றவாளி தப்பித்துக் கொள்வதற்கு, காவல் துறை அலுவலர்கள் அறியாமல் செய்யும் தவறுகள்.

முதல் தகவல் அறிக்கையை கூட பதிவு செய்ய தெரியாத காவல் துறையினர் எத்தனையோ பேர் உள்ளனர். அது போல, வழக்கு நாட்குறிப்பு எழுத தெரியாத அல்லது வழக்கு நாட்குறிப்பு எழுத தெரியாமல் இருப்பதை, வெளிக்காட்டிக் கொள்ளாமல், ஓடி ஒளியும் எத்தனையோ போலீசார் உள்ளனர்காவல் நிலையங்களில் வழக்கு நாட்குறிப்பை எழுதுவதற்கு, இன்றைக்கு எல்லா காவல் நிலையங்களிலும், ஓய்வுபெற்ற காவல் துறையினரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது, போலீசார் குறித்து, அதிர்ச்சி தரக்கூடிய தகவல். இல்லையேல், நாட்குறிப்பு எழுத பழகியவர்களை நாடுகின்றனர். அவர்களும் புலன் விசாரணை நுணுக்கங்களை கடைப்பிடித்து எழுதுவதில்லை. அன்றைய நாளில் கிடைக்கும், 1,000 ரூபாயை மனதில் வைத்து எழுதுவர்.
அதனால் ஒரே நாளில், 2,000 ரூபாய் சம்பாதிக்க நினைத்து, மூன்று, நான்கு வழக்கு நாட்குறிப்புகளை, மடமடவென எழுதி முடிப்பர்.
இதையெல்லாம் தவிர்க்க வேண்டுமெனில், காவல் துறையில் உள்ளோருக்கு ஒவ்வொரு பதவி உயர்வின் போதும், சட்டம் சார்ந்த, புலனாய்வு சார்ந்த, புதுப்புது விஷயங்கள் சார்ந்த தேர்வு நடத்தி, அதில் தேறியவர்களுக்கு பதவி உயர்வு கொடுக்கலாம்இவ்வாறு செய்யவில்லை எனில், புது விஷயங்களை கற்றுக் கொள்ள ஆர்வம் காட்ட மாட்டார்கள். இப்படி செய்தால், நிறைய பேருக்கு பதவி உயர்வு கிடைக்காமல் போய், உயர் பதவிகளுக்கான காலியிடம் அதிகரித்து விடும் என, ஒரு சிலர் கூக்குரல் எழுப்பலாம்.
ஒரு முறை தேர்வு எழுதி வெற்றி பெறாதோருக்கு, மூன்று முதல் ஐந்து முறை கூட வாய்ப்பளிக்கலாம். அப்படியும் கூட வெற்றி பெறாதோரை, சட்டம் - ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவுக்கு தகுதியற்றோர் எனக் கருதி, போக்குவரத்து சரி செய்யும் பிரிவு மற்றும் ஆயுதப்படை காவல் பிரிவுக்கு அனுப்பி விடலாம்காவல் துறையில் பதவி உயர்வு அளிக்கும், 'அப்-கிரேடேஷன்' முறையில், ஒருவர் காவல் துறையில் பணியில் சேர்ந்தால், 10 ஆண்டுகளுக்குள் அவருக்கு முதல் நிலைக்காவலர் பதவி உயர்வு அளிக்க வேண்டும். 15 ஆண்டுகளுக்குள் தலைமைக் காவலர் பதவி உயர்வு அளிக்க வேண்டும்.அவரே, 25 ஆண்டுகளை நிறைவு செய்தால், சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி அளிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது. இந்த நடைமுறையை மாற்ற வேண்டும்.காவல் துறையில் உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்கள் பதவியில், 15 ஆயிரம் பேரும், தலைமைக் காவலர் பதவிக்கு கீழ், முதல் நிலை காவலர், காவலர் நிலையில், 1 லட்சத்து, 50 ஆயிரம் பேரும் உள்ளனர்.
இவர்களுக்கு, புதிய சட்ட விஷயங்களை தெரிந்து கொள்ள, உரிய பயிற்சி கொடுக்க வேண்டும். பதவி உயர்வு வழங்கும் போது, தேர்வு முறையில் தேர்ச்சி பெற்றவருக்கு மட்டுமே, ww பதவி உயர்வு வழங்க வேண்டும்.காவல் துறை அதிகாரிகளுக்கான புலனாய்வு திறன் மேம்பாட்டு பயிற்சி, சென்னை மற்றும் ஒவ்வொரு சரக தலைமையிடங்களிலும் உள்ள பணியிடைப் பயிற்சி மையத்திலும், அவ்வப்போது அளிக்கப்படுகிறது.இதில், குற்ற வழக்குகளில் புலன் விசாரணை செய்வது பற்றி ஆலோசனை மற்றும் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன. பயிற்சியின் முடிவில், ஒரு தேர்வு இல்லாததால், யாரும் இதை உன்னிப்பாக கவனிப்பதில்லை.
பயிற்சி என்பது, விழலுக்கு இறைத்த நீராகி விடுகிறது. தேர்வு முறை இருந்தால் நிச்சயம் கவனமாக கற்றுக் கொள்வர். பயிற்சி என்பது, சினிமா பார்ப்பது போன்றது. பரிட்சை என்பது, பந்தயத்தில் கலந்து கொள்வது போன்றது.காவல் துறையை நவீனமயமாக்குகிறோம் என, 'வாக்கி டாக்கி' வாங்கி கொடுப்பதும், கம்ப்யூட்டர், நகலெடுப்பு மிஷின், பேக்ஸ் மிஷின், துப்பாக்கி, தோட்டாக்கள், நவீன ரக கார்கள் வாங்குவது மட்டும் நவீனமயமாக்கல் கிடையாதுகாவல் துறையினர் சட்டம் மற்றும் புலனாய்வில் போதிய அறிவை பெற, புதிய முறையில் பயிற்சி வேண்டும். பதவி உயர்வில் தேர்வு முறையை கொண்டு வர வேண்டும். இல்லை எனில், காவல் துறையில் சீர்திருத்தம் என்பது, வீண் வேலையாக போய் விடும்.
கோ.பாண்டியன் ------ காவல் துணை கண்காணிப்பாளர், பணி நிறைவு
email: dev.pandy@rediffmail.com 
நன்றி : தினமலர் நாளிதழ் - 25.10.2017 

No comments:

Post a Comment