பாகப்பிரிவினை செய்வது எப்படி?
இந்தக் காலத்தில் சொத்தை பிரித்துக் கொள்வது ஒன்றும் கஷ்டமான காரியமாக எனக்குத் தோன்றவில்லை. ஏனென்றால், ஒரு வீட்டில் ஒரு பிள்ளை அல்லது இரண்டு பிள்ளைகள்தான் இருக்கிறார்கள். ஆனால், அந்தக் காலத்தில் ஒரு வீட்டில் பல பிள்ளைகள் இருந்தார்கள். முன்னோர்கள் சொத்தை எப்படி பிரித்துக் கொள்வது என்ற குழப்பமும் அந்தப் பிள்ளைகளுக்குள் இருந்தது. அனுபவிப்பதாக இருந்தாலும், விற்பதாக இருந்தாலும், (1) அதிக விலை போகின்ற, (2) பாதை பிரச்சனையும் இல்லாத சொத்தின் முன்பகுதியைத்தான் அனைவருமே விரும்புவார்கள். அனைவருக்கும் நிலத்தின் முன்பகுதியை வழங்க வேண்டும், இதனை அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் வேண்டும். அதற்கு என்னதான் வழி?
முன்னோர்கள் ஏற்படுத்தியுள்ள வழி
சொத்துக்களைப் பிரித்துக் கொள்ளும்போது, மூத்தவர், இளையவர் என்ற வித்தியாசம் இல்லை. ஆண் பிள்ளை, பெண் பிள்ளை என்ற பேதம் இல்லை. அனைவருக்கும் சமபங்கு என்ற நிலையை சட்டம் தற்போது ஏற்படுத்தியுள்ளது. இருக்கின்ற மனையில் எந்தப் பங்கு யாருக்கு கொடுக்க வேண்டும்? என்பதற்கு திசைகளை வைத்து நமது முன்னோர்கள் ஒரு சுமூகமான வழியை ஏற்கனவே ஏற்படுத்தி வைத்துள்ளார்கள்..
இரண்டு வழிகள்
ஒரு சொத்தை அல்லது நிலத்தை இரண்டு முறையில் சமமான துண்டுகளாக்கி உரிமையுள்ளவர்களுக்கு பங்கு பிரிக்கலாம். அதில் ஒன்று கிழக்கிலிருந்து
மேற்காக சமமான பங்காக ஒவ்வொருவருக்கும் பிரித்துக் கொடுக்கலாம்; அல்லது வடக்கிலிருந்து தெற்காக சமமான பங்காக ஒவ்வொருவருக்கும் பிரித்துக் கொடுக்கலாம். இந்த இரண்டு வழிகளைத் தவிர, வேறு வழிகள் ஏதும் இல்லை. இதற்கு பங்குதாரர்கள் ஒத்துவரவில்லை என்றால் மொத்த சொத்தையும் விற்று, இலகுவாக பணத்தை பிரித்துக் கொள்ளலாம். இதுவே கடைசி வழியாகும்.
யாருக்கு எந்தப் பங்கு?
சொத்தை ஒரு திசையிலிருந்து மறு திசைக்கு பிரித்துக் கொண்டு வரும்போது, எந்தப்பங்கை யாருக்கு கொடுப்பது என்பதில் குழப்பம் வரலாம். இதற்கு நமது முன்னோர்கள் ஒரு சரியான யோசனை சொல்லி இருக்கிறார்கள். அதன்படி பிரித்துக் கொண்டால் சண்டை வராது. எனக்கு இந்த சொத்துத்தான்
வேண்டும் என்று யாரும் கூறவும் முடியாது.. ஏனென்றால் சட்டமும், மக்களும் ஏற்றுக் கொண்ட வழிமுறை இது.
கிழக்கிலிருந்து மேற்காக பிரித்துக் கொண்டால்
ஒரு சொத்தை கிழக்கிலிருந்து மேற்காக பல பங்குகளாக பிரிக்கும்போது, மேற்கு திசையில் முதலில் இருக்கும் பங்கை வீட்டின் மூத்த பிள்ளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு அடுத்ததாக பிறந்த தம்பியோ, தங்கையோ அதற்கு அடுத்து இருக்கும் பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும், இவ்வாறு எடுத்துக் கொண்டு வந்தால், கிழக்கு திசையில் உள்ள கடைசி (பாகத்தை) சொத்தை வீட்டில் கடைசியாக பிறந்த தம்பியோ, தங்கையோ எடுத்துக் கொள்வார்கள்.
வடக்கிலிருந்து தெற்காக பிரித்துக் கொண்டால்,
ஒரு சொத்தை, வடக்கிலிருந்து தெற்காக பல பங்குகளாக பிரிக்கும்போது, தெற்கு திசையில் முதலில் இருக்கும் பங்கை வீட்டின் மூத்த பிள்ளை எடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு அடுத்ததாக பிறந்த தம்பியோ, தங்கையோ அதற்கு அடுத்து இருக்கும் பங்கை எடுத்துக் கொள்ள வேண்டும், இவ்வாறு எடுத்துக் கொண்டு வந்தால், வடக்கு திசையில் உள்ள கடைசி (பாகத்தை) சொத்தை வீட்டில் கடைசியாக பிறந்த தம்பியோ, தங்கையோ எடுத்துக் கொள்வார்கள்..
****************************************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 28.01.2018
No comments:
Post a Comment