இறந்தவர்களின் சொத்துகளை மீட்க என்ன செய்ய வேண்டும்?
இறப்பு என்பது யாருக்கு எந்த நேரத்தில் வரும் என்று சொல்லமுடியாது. ஏதோ ஒரு காரணத்தால் ஒருவர் திடீரென்று இறந்துவிட்டால், அவரது சொத்துக்கள் எங்கெல்லாம் இருக்கிறது? என்பதை அவரது குடும்பத்தினர்கூட தெரிந்துகொள்ள முடியாமல் போய்விடுகிறது. கணவர், மனைவி மற்றும் பிள்ளைகள், ஒருவருக்குத் தெரியாமல் ஒருவர் சொத்து வாங்குவது இது போன்ற நேரங்களில் மற்றவர்களுக்கு நஷ்டத்தையும், மிகுந்த மன உளைச்சலையும் ஏற்படுத்திவிடும். இது போன்ற சூழ்நிலைகளில் குடும்பத்தினர் என்ன செய்ய வேண்டும்? என்பதை பார்க்கலாம், வாருங்கள்.
உயில் இருந்தால்.....!
இறந்தவர் உயில் எழுதி வைத்திருந்தால் பிரச்சனையே இல்லை. எங்கு,
எவ்வளவு சொத்து இருக்கிறது? எந்த நிறுவனத்தில் எவ்வளவு முதலீடு செய்யப்பட்டுள்ளது?
என்ற விபரம் உயிலில் கண்டிப்பாக இறந்தவரால் குறிப்பிடப்பட்டிருக்கும்.
இறப்புச் சான்றிதழ் & வாரிசுச் சான்றிதழ் அவசியம்
பதிவுத் துறையில் அல்லது எந்த ஒரு நிதி நிறுவனத்தில் இறந்து போனவருடைய சொத்து அல்லது சேமிப்பு சம்பந்தமாக தகவல்கள் பெற நீங்கள் அணுக வேண்டும் என்றால் அவருடைய இறப்புச் சான்றிதழ் மிக அவசியம் ஆகும்.
ஒருவருடைய இறப்புச் சான்றிதழ் மட்டும் இருந்தால் போதுமா? நீங்கள் கேட்கும் தகவல்களை அவர்கள் தந்துவிடுவார்களா?
யார் நீங்கள்? எதற்காக இதையெல்லாம் கேட்கிறீர்கள்? என்ற கேள்வியை அவர்கள் உங்களிடம் கேட்பார்கள். அவற்றை தர மறுப்பார்கள்.
வாரிசுச் சான்றிதழ் உங்களிடம் இருந்தால் மேற்கண்ட கேள்விகளை உங்களிடம் அவர்கள் கேட்க முடியாது. நீங்கள் கேட்கும் தகவல்களை அவர்கள் கண்டிப்பாக கொடுத்துத்தான் ஆகவேண்டும்.
மேற்கண்ட இரண்டு சான்றிதழ்களையும் பெற்ற பிறகு, அவற்றை வைத்து இறந்தவரின் பெயரிலுள்ள சொத்துக்கள் முதலீடுகள் மற்றும் கடன்கள் எங்கு உள்ளது? என்ற விவரங்களை சேகரித்துக் கொள்ள வேண்டும்.
ஒருவரின் பெயரில்தான்.........!
வங்கி கணக்குகள், முதலீடுகள், பி.எஃப். தொகை, இன்சூரன்ஸ் ஆகியவற்றைப் பெறுவதற்கு இறந்தவருடைய வாரிசுகள் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அவருக்கு முதலீடுகள் பெருகின்ற அதிகாரத்தை மற்ற வாரிசுகள் அளிக்க வேண்டும். முதலீடு செய்யப்பட்டத் தொகையை நிதி நிறுவனம் அவரது பெயருக்கு அளிக்கும். அதன்பிறகு மற்றவர்களுடன் அவர் அந்த தொகையை சமமாக பிரித்துக் கொள்ள வேண்டும். இதுவே இலகுவான முறையாகும்.
உடன்பாடு இல்லையென்றால்.........?
இறந்தவருடைய வாரிசுகள் தங்களுக்குள் ஒருவரை தேர்ந்தெடுத்துக் கொள்ள உடன்பாடு ஏற்படவில்லை என்றால், நீதிமன்றம்தான் செல்ல வேண்டும். வேறு வழியில்லை.
************************************************** செல்வம் பழனிச்சாமி -31.01.2018
No comments:
Post a Comment