பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் ஒரு வழக்கு
வழக்கின் விளக்கம் : ஒரு கணவன், மனைவி. மிகவும் பிரியமாக இருக்கிறார்கள். இந்நிலையில் கணவன் வங்கியில் கடன் பெற்று தனது மனைவியின் பெயரில் ஒரு சொத்து வாங்குகிறார். சில மாதங்கள் கழித்து இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்படுகிறது. இருவரும் பிரிகிறார்கள். கணவன் வாங்கிக் கொடுத்த, தனது பெயரில் உள்ள சொத்தை மனைவி வேறு ஒருவருக்கு விற்க முயல்கிறார். இது கணவருக்குத் தெரிய வருகிறது. கணவர் தனது மனைவியின் பெயருக்கும், வாங்கப் போகிறவர் பெயருக்கும் வழக்கறிஞர் அறிவிப்பை அனுப்புகிறார். அதனை பெற்றுக் கொண்ட அவர்கள் இருவருமே பதில் அனுப்பவில்லை. சொத்து கைமாறிவிட்டது.
இந்தக் கிரையம் செல்லாது என அறிவிக்க வேண்டும் என்று கணவர் உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். சொத்தை வாங்கியவர் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பதில் மனு தாக்கல் செய்கிறார். முடிவு என்ன ஆயிற்று? வாருங்கள் பார்க்கலாம்.
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 10.01.2018
இந்தப்பதிவு முகநூல் நண்பர், வழக்கறிஞர் திரு Dhanesh
Balamurugan அவர்களுடையது.
அவருக்கு நன்றி
சுந்தர் என்பவர் அவரது மனைவியான சித்ரா பெயரில் அன்பு மற்றும் பாசத்தின் காரணமாகவும், குழந்தைகளின் நலனுக்காகவும் ஒரு சொத்தை 2000 ஆம் ஆண்டில் கிரையம் வாங்கினார். தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வீடு கட்டுவதற்காக கடன் வாங்கி மேற்படி சொத்தை வாங்கினார்.
இதற்கிடையே அவர்களுக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதனால் சித்ரா, சுந்தரை விட்டு பிரிந்து சென்று விட்டார். போகும் போது சொத்து சம்பந்தப்பட்ட ஆவணங்களையும் எடுத்து சென்று விட்டார். பின்னர் அந்த சொத்தை சித்ரா லலிதா என்பவருக்கு விற்க முயற்சி செய்தார்.
இதனை அறிந்த சுந்தர் சித்ராவுக்கும்,லலிதாவுக்கும் ஒரு வழக்கறிஞர் அறிவிப்பை அனுப்பினார். அந்த அறிவிப்பினை பெற்றுக் கொண்ட அவர்கள் பதில் ஏதும் அனுப்பவில்லை. இந்நிலையில் சித்ரா 15.7.2013 ஆம் தேதி சொத்தை லலிதாவுக்கு விற்பனை செய்து விட்டார். ஆகவே சுந்தர்,
சித்ரா எழுதிக் கொடுத்த கிரைய பத்திரத்தை செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என கோரி குன்னூர் உரிமையியல் நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். அந்த வழக்கில் சொத்தை கிரையம் வாங்கிய லலிதா ஆஜராகி உ. வி. மு. ச. கட்டளை 7 விதி 11 ன் கீழ் ஒரு இடைக்கால மனுவை தாக்கல் செய்து சுந்தரின் வழக்கை நிராகரிக்க (Rejection of Plaint) வேண்டும் என்று கோரினார். மேலும் சுந்தர் மனைவி பெயரில் உள்ள அன்பினாலும், பாசத்தினாலும் கிரையம் வாங்கியதாக ஒப்புக்கொண்டுள்ளார். எனவே இந்த வழக்கு பினாமி பரிவர்த்தனைச் சட்டம் பிரிவு 3(2) ன்படி தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார். மேலும் சென்னை உயர்நீதிமன்றம் " E. யசோதம்மாள் Vs E. கோவிந்தன் (2010-2-CTC-705)" மற்றும் " சாந்தி (எ) சாந்தி சத்தியா மற்றும் பலர் Vs M. மாசானம் (2015-3-CTC-316)" ஆகிய வழக்குகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளை மேற்கோள் காட்டினார்.
மனுவை விசாரித்த உரிமையியல் நீதிபதி சுந்தர் தாக்கல் செய்த வழக்கு பினாமி பரிவர்த்தனைச் சட்டம் பிரிவு 3(2) ன் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதா? என்பதை முழு விசாரணைக்கு பின்னரே முடிவு செய்ய முடியும் என்று கூறி லலிதாவின் இடைக்கால மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்தார்.
அந்த உத்தரவை எதிர்த்து லலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்த சீராய்வு மனுவை தாக்கல் செய்தார்.
வழக்கை நீதிபதி வேலுமணி அவர்கள் விசாரித்தார்கள்.
இரவல் பெயரில் பரிவர்த்தனை தடைச் சட்டம் பிரிவு 3(1) ன் கீழ் இரவல் பெயரில் நடைபெறும் பரிவர்த்தனைகள் தடை செய்யப்பட்டுள்ளது.
ஆனால் பிரிவு 3(2) ன்படி ஒரு நபர் அவருடைய மனைவி அல்லது திருமணமாகாத மகள் பெயரில் ஒரு சொத்தை விலைக்கு வாங்கியிருந்தால், அந்த பரிவர்த்தனை பிரிவு 3(1) ல் கூறப்பட்டுள்ளவாறு
இரவல் பெயரில் நடைபெற்ற பரிவர்த்தனையாக கருத முடியாது. மனைவி அல்லது திருமணமாகாத மகள் பெயரில் ஒரு சொத்து வாங்கப்பட்டிருந்தால், அந்த சொத்தானது அவர்களுடைய நலனுக்காக வாங்கப்பட்டுள்ளது
என்கிற அனுமானம் சட்டப்படி உள்ளது. அதேநேரம் அந்த சொத்தானது மனைவி அல்லது திருமணமாகாத மகளின் நலனுக்காக அந்த சொத்து வாங்கப்படவில்லை என்று சொத்தை வாங்கியவர் நிரூபிக்க வேண்டும் என்று கூறி இந்த வழக்கில் கண்ட பிரச்சினை முற்றிலும் சட்டம் சம்பந்தப்பட்ட
ஒரு வினாவாக இல்லாமல், சங்கதிகள் சம்பந்தப்பட்ட
ஒரு வினாவாக உள்ளதால் வழக்கின் முழு விசாரணைக்கு பிறகே எதையும் தீர்மானிக்க முடியும் என்று கூறி லலிதா தாக்கல் செய்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து நீதியரசர் உத்தரவு பிறப்பித்தார்.
CRP. NO - 1373/2017 , dt- 27.04.2017
லலிதா Vs சுந்தர் மற்றும் சித்ரா
2017-4-LW-619
2017-3-MWN-CIVIL-60
No comments:
Post a Comment