அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் இனி ‘யுவின்’ அட்டை மூலமாக பி.எப்., – இ.எஸ்.ஐ., பணிக்கொடை போன்ற எல்லாம் கிடைக்கும்
மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் ஏற்பாடு
அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் பெற்று வருகின்ற சமூக பாதுகாப்பு பயன்கள் அனைத்தும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில், ‘யுவின்’
அடையாள அட்டை திட்டத்தை, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், சைக்கிள் ரிக் ஷா ஓட்டும் தொழிலாளி முதல், கூலித்தொழிலாளர்கள் வரை, பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 47 கோடி தொழிலாளர்கள் பயன் பெறுவர்.
யுவின் அடையாள அட்டை
மத்திய தொழிலாளர் நல அமைச்சகம், அனைத்து பணியாளர்களின் சமூக பாதுகாப்பு மற்றும் நல்வாழ்விற்கு உறுதி அளிக்கும் மசோதா ஒன்றை உருவாக்கி உள்ளது. அதன்படி, நமது நாட்டிலுள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களின் சமூக பாதுகாப்பை உறுதி செய்யும், ‘யுவின்’ திட்டம், நடைமுறைக்கு வர உள்ளது.
நமது நாடு முழுவதும், ‘அமைப்பு சாரா தொழிலாளர் குறியீட்டு எண்’ கொண்ட, ‘யுவின்’
அட்டைக்கான பதிவு, 01.04.2018 முதல் துவங்க உள்ளது. இதையடுத்து, 2019 மார்ச் மாதத்திற்குள் அமைப்பு சாரா துறையைச் சேர்ந்த அனைத்து தொழிலாளர்களுக்கும், ‘யுவின்’ அட்டை வழங்குவதற்கு, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது.
ஏற்கனவே, சோதனை அடிப்படையில், வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்ட இத்திட்டம், நாடு முழுவதும் பரவலாக்கப்படும் போது, அமைப்பு சாரா துறையைச் சேர்ந்த, 47 கோடி தொழிலாளர்கள் பயன் பெறுவார்கள்.
பி.எப்., இ.எஸ்.ஐ.,
அமைப்பு சார்ந்த துறையினருக்கு நிகரான, பி.எப்., – இ.எஸ்.ஐ., உள்ளிட்ட, அனைத்து பயன்களும் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இந்த அட்டை மூலம் கிடைக்கும். இதில், பி.எப்., எனப்படும், வருங்கால சேமநல நிதியம், இ.எஸ்.ஐ., எனப்படும், தொழிலாளர் மருத்துவ ஈட்டுறுதி கழகம் ஆகியவற்றுக்கான பங்களிப்புத் தொகையை யார் செலுத்துவது? என்பது குறித்து தீவிரமாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இந்த நிதி அமைப்புகளுக்கு அமைப்பு சார்ந்த துறையில், பணியாளர்களுடன் சேர்ந்து, நிறுவனங்களும் குறிப்பிட்ட தொகையை, அவற்றின் பங்காக வழங்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
அமைப்பு சாரா துறையில், நிறுவனங்களின் கீழ் வராமல், தனித்து செயல்படும், தொழிலாளர்களுக்கு, யார் தவணைத் தொகைகளை செலுத்துவது என்பதில் தான், இன்னும் முடிவு எட்டப்படாமல் உள்ளது.
தொழிலாளர் சமூக பாதுகாப்பு மசோதாவில், ‘நிறுவனம் இல்லாத பட்சத்தில், தனிநபரே, முதன்மை நிறுவனராக கருதப்படுவார்’ என்ற விதிமுறை இருக்கிறது. அதனால், இந்த சட்டம் அமலுக்கு வரும் போது, முதன்மை நிறுவனக்கான பங்களிப்பில், எந்த சிக்கலும் இருக்காது என்றும் அமைப்பு சாரா துறையினரின் சமூக பாதுகாப்பு அரணாக, ‘யுவின்’ திட்டம் விளங்கும் என்று நம்புவோம்.
தொழிலாளர் சமூக பாதுகாப்பு:
தொழிலாளர்களுக்கான, வருங்கால சேமநல நிதி, மருத்துவ ஈட்டுறுதி, பிரசவ கால பயன், பணிக்கொடை, இழப்பீடு, சமூக பாதுகாப்பு என்பது உள்ளிட்ட 15 சட்டங்களின் தொகுப்பாக, தொழிலாளர் சமூக பாதுகாப்பு மசோதாவை, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் உருவாக்கி உள்ளது. இருகரம் கூப்பி அதனை வரவேற்போம்.
******************************
அன்புடன் செல்வம் பழனிச்சாமி, 27.01.2018
No comments:
Post a Comment