disalbe Right click

Saturday, January 20, 2018

பிறப்பை வைத்துத்தான் ஒருவரது ஜாதி நிர்ணயிக்கப்படுகிறது

திருமணத்தால் ஒருவரது ஜாதியை மாற்ற முடியாது!
ஒருவரது பிறப்பை வைத்துத்தான் அவரது வகுப்பு (ஜாதி) நிர்ணயிக்கப்படுகிறது, திருமணத்தால் அதனை மாற்ற முடியாது! என்று சுப்ரீம் கோர்ட் அதிரடியாக தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில் வசித்த அகர்வால் வகுப்பைச் சேர்ந்த ஒரு பெண்மணி தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஒருவரை மணமுடித்துக் கொண்டார். அகர்வால் என்பது உயர் வகுப்பாகும். 
தாழ்த்தப்பட்டவரை மணந்ததால்.....
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரை மணமுடித்த காரணத்தினால், உத்தரப்பிரதேசத்திலுள்ள புலந்த்சாஹர் மாவட்ட மாஜிஸ்திரேட்டிடம் இருந்து 1991ம் ஆண்டில், தாழ்த்தப்பட்டவர் என்ற சான்றிதழைப் பெற்றார். அந்தச் சான்றிதழை சமர்ப்பித்து,  பஞ்சாப் மாநிலத்திலுள்ள பதன்கோட் என்ற நகரிலுள்ள கேந்த்ரிய வித்யசாலா ஒன்றில் 1993ம் ஆண்டில் பட்டதாரி ஆசிரியராக பணி நியமனம் பெற்றார். 20 வருடங்களுக்கு மேலாக அங்கு பணிபுரிந்து அப்பள்ளியின் வைஸ் பிரின்ஸிபால் ஆகவும் நியமிக்கப்பட்டார். 
ரத்து செய்த அதிகாரிகள்
உயர் வகுப்பைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் தாழ்த்தப்பட்டவர் என்று சான்றிதழ் அளித்து வேலை பார்க்கிறார் என்ற புகார் எழுந்தது. கல்வித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, 2015ம் ஆண்டில் அவரது வேலையை ரத்து செய்தனர்.
நீதிமன்றத்தை நாடிய பெண்மணி
அந்தப் பெண்மணி அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் தன்னை பணி நீக்கம் செய்தது செல்லாது என்று வழக்குத் தொடுத்தார். அவரது வேண்டுகோளை அலகாபாத் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. அதனால், அந்தப் பெண்மணி உச்ச நீதிமன்றத்தை நாடினார்.
அமர்வு அளித்த அதிரடி தீர்ப்பு
அருண் மிஸ்ரா மற்றும் எம்.எம்.சந்தான கௌடர் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த வழக்கை விசாரித்து, ஒருவரது பிறப்பை வைத்துத்தான் அவரது வகுப்பு (ஜாதி) நிர்ணயிக்கப்படுகிறது, திருமணத்தால் அதனை மாற்ற முடியாது! என்று 18.01.2018 அன்று   அதிரடியாக தீர்ப்பு ஒன்றை வழங்கியது.
************************************ அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 20.01.2018 

No comments:

Post a Comment