disalbe Right click

Saturday, January 6, 2018

வாரிசுச் சான்றிதழ் A - Z


வாரிசுச் சான்றிதழ் என்பது என்ன?
ஒருவர் இறந்துவிட்டால் அவரின் பெயரிலுள்ள சொத்துக்களையோ, அவருக்கு வரப்போகும் சொத்துக்களையோ அல்லது வங்கி மற்றும் வேறு வகையில் அவரது பெயரில் உள்ள அவருடைய பணத்தையோ அவரது வாரிசுகள் பெறுவதற்கு, வழங்கப்படுகின்ற சான்றிதழே  வாரிசு சான்றிதழ் ஆகும். 
இறப்புச் சான்றிதழ் 
இறப்புச் சான்றிதழ் இல்லாமல் வாரிசு சான்றிதழ் பெறவே முடியாது.    எனவே வாரிசு சான்றிதழ் வாங்குவதற்கு முன் இறப்புச் சான்றிதழ் பெற்று அதன் நகலை வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பிக்கும் விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
இறப்புச் சான்றிதழ்  எங்கு, எப்படி பெற வேண்டும்?
சாதாரணமாக நோய்வாய்ப்பட்டு ஒருவர் இறந்துவிட்டால் அல்லது முதுமை காரணமாக ஒருவர் இறந்துவிட்டால்,  அவரது இறப்பை முதலில் பஞ்சாயத்து அலுவலகத்தில் அல்லது நகராட்சி அலுவலகத்தில் பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் பெற வேண்டும். இதனை அவர்  இறந்த நாளிலிருந்து 30 நாட்களுக்குள் பதிவு செய்ய வேண்டும். நேரடியாக நகராட்சி அலுவலகத்திலேயே விண்ணப்பிக்கலாம்.
ஓராண்டுக்கு மேலாக இறப்பை பதியாமல் இருந்தால்...?
கோட்டாட்சியர் எனப்படும் சப்கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதனை  வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் ஆர்.ஐ. எனப்படும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் ஆகியோர் ஆய்வு செய்து உங்களுக்கு இறந்தவரின் இறப்புச் சான்றிதழை வழங்குவார்கள்.
விபத்து மூலம் இறந்தால் ......?
ஒரு வேளை விபத்து மூலம் ஒருவர் இறந்துவிட்டால், இறந்த ஊரிலுள்ள நகராட்சியில் அவரது இறப்பை பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் பெற வேண்டும். விபத்து மூலம் இறந்த காரணத்தால் இறந்தவரது பிரேத பரிசோதனை அறிக்கை எனப்படுகின்ற போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அரசு மருத்துவமனையில் பெற்று அதன் நகலை விண்ணப்பத்துடன்  இணைத்து இறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பிக்க  வேண்டும். 
தற்கொலை செய்து கொண்டால்....?
தற்கொலை மூலம் இறந்த காரணத்தால் இறந்தவரது பிரேத பரிசோதனை அறிக்கை எனப்படுகின்ற போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் அரசு மருத்துவமனையில் பெற்று அதன் நகலை இணைத்து முதலில் இறப்புச் சான்றிதழ் விண்ணப்பிக்க பெற வேண்டும். 
இறப்புச் சான்றிதழ் பெற கட்டணம் எவ்வளவு?
21 முதல் 30 நாட்களுக்குள் பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் பெற கட்டணம் ரூ.100 (பழைய கட்டணம் ரூ.2 மட்டுமே). முப்பது நாட்களுக்கு மேல் ஓராண்டுக்குள் ரூ.200 (பழைய கட்டணம் ரூ.5 மட்டுமே). காலதாமதமாக பதிவு செய்தால் (ஓராண்டுக்கு மேல் உரிய கட்டணம் மற்றும் ஆர்.டி.ஓ.,க்கு குறையாத நிர்வாக நீதிபதி அவர்களின் அனுமதி ரூ.500 (பழைய கட்டணம் ரூ.10 மட்டுமே).
வாரிசு சான்றிதழ் எங்கு பெற வேண்டும்?
இந்தச் சான்றிதழை இறந்தவரது வசிப்பிடம் உள்ள பகுதியின்  வட்டாட்சியர் அலுவலகம் மூலமாகவே பெறமுடியும். வி.ஏ.ஓ. எனப்படும் கிராம நிர்வாக அலுவலர் அவர்களின் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும். ஆர்.ஐ. எனப்படும் ரெவின்யூ இன்ஸ்பெக்டர் அவர்களிடம் கையொப்பம் பெற்று வட்டாட்சியர் அவர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும்.   கிராம   நிர்வாக  அதிகாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மூலம் விசாரணை நடத்திய    பிறகு   வாரிசு  சான்றிதழ் வட்டாட்சியரால் உங்களுக்கு வழங்கப்படும். ஒரு வாரம் கழித்து வாரிசுச் சான்றிதழை வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து நீங்கள் பெற்றுக் கொள்ளலாம்.
வாரிசு சான்றிதழ் பெறுவதற்கு என்னென்ன வேண்டும்?
இறந்தவருக்கு யாரெல்லாம் வாரிசு என்று அந்த விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதோ அவர்களின் முகவரிச் சான்று நகல் இணைக்க வேண்டும். அவர்கள் என்ன வகையில் வாரிசு ஆகிறார்கள் என்று குறிப்பிட்டு அதற்கு ஆதாரமாக உள்ள ஆவண நகல்கள் இணைக்க வேண்டும்.  
குடும்பத்தில் உள்ள திருமணமான ஒரு ஆண் இறந்து விட்டால் அவருடைய தாய், மனைவி, திருமணம் ஆன மற்றும் திருமணம் ஆகாத மகன், மகள்கள் அவருக்கு வாரிசுகள் ஆகிறார்கள். குடும்பத்தில் உள்ள  திருமணமாகாத மகன் இறந்துவிட்டால் தாய் மட்டுமே வாரிசு ஆவார்.
வாரிசுச் சான்றிதழ் ஒருவருக்கு எப்போது தேவைப்படுகிறது?
இறந்தவரின் பெயரில் வங்கிகளில் அல்லது நிதி நிறுவனங்களில் உள்ள சேமிப்பு அல்லது வைப்புத்தொகையைப் பெறுவதற்கும், கருணை அடிப்படையில் இறந்தவர் சார்பாக வேலை வாய்ப்புப் பெறவும் எனப் பலவிதங்களில் பயன்படுகிறது. மேலும், இறந்தவருடைய பெயரில் உள்ள சொத்துக்களை விற்பதற்கோ, அடமானம் வைப்பதற்கோ வாரிசு உரிமையை காண்பிக்க வாரிசுச் சான்றிதழ் தேவைப்படும்.
பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது அரசாங்க பணிகளில் பணிபுரிந்து இறந்தவர்களின் குடும்ப ஓய்வூதியம் மற்றும் பணிப் பலன்களைப் பெறுவதற்கும், பட்டா போன்ற வருவாய் ஆவணங்களில் பெயர் மாற்றம் செய்வதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியமாகிறது.
எவ்வளவு நாட்களுக்குள் வாரிசு சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும்?
ஒருவர் இறந்தபிற எத்தனை ஆண்டுகள் கழித்தும் வாரிசுச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்து எத்தனை நாட்களில் வாரிசு சான்றிதழ் கொடுக்கப்படும்?
விண்ணப்பித்து 30 நாட்களுக்குள் வாரிசு சான்றிதழ் வழங்கப்பட வேண்டும். இல்லையெனில் என்ன  காரணத்தினால் தாமதம் ஆகிறது? என்பதை விண்ணப்பதாரருக்கு அரசு அலுவலர் தெரிவிக்க  வேண்டும்.
எப்போது வாரிசு சான்றிதழ் மறுக்கப்படும்?
இறந்தவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள் இருந்து அவர்களிடையே பிரச்சினைகள் இருந்தாலோ, தத்து எடுக்கப்பட்டவர் தான்தான் வாரிசு என்று கோரிக்கை உரிமை கோரினாலோ, நேரடி வாரிசாக இல்லாத ஒருவர் வாரிசுச் சான்றிதழ் கேட்டாலோ  வட்டாட்சியர் அலுவலகம் வாரிசுச் சான்றிதழை தர மறுக்கலாம். இது போன்ற சூழ்நிலைகளில் நீதிமன்றத்தை அணுகி, யாருக்கு வாரிசுச் சான்றிதழ் வழங்க வேண்டும்? என உத்தரவு பெற்று வரச் சொல்லலாம்.
ஒருவர் பல வருடங்களாக காணாமல் போயிருந்தாலும் வாரிசு சான்றிதழ் பெறலாம்!
ஒருவர் காணாமல் போய் ஏழு ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டிருந்தால் அவர் கண்டிப்பாக திரும்பி வந்துவிடுவார் என்று நம்புவது, அவருடைய குடும்பத்தினரின் ஒரு நிலையே தவிர, அது வட்டாட்சியரை எந்தவிதத்திலும் பாதிக்காது
அப்படிக் காணாமல் போன குடும்ப உறுப்பினர் குறித்து காவல் துறை மற்றும் நீதிமன்ற உத்தரவு வாயிலாக, ‘அவர் இறந்து விட்டதாகக் கருதப்படுகிறார்என்று சான்றுகளை இணைத்து விண்ணப்பித்தால் மட்டுமே அவருடைய பெயரைத் தவிர்த்து மீதியுள்ளவர்களின் பெயர்களோடு வாரிசுச் சான்றிதழ் பெற முடியும்.
இன்றியமையாதது வாரிசு சான்றிதழ்
ஒருவர் இறந்த பிறகு அவரின் பணம் மற்றும் சொத்துக்களை அவருடைய வாரிசுகள் அனைவரும் பகிர்ந்து கொள்வதற்கும், அவர்களிடையே பிரச்சனைகள் ஏதும் வராமலிருப்பதற்கும் வாரிசுச் சான்றிதழ் அவசியம் ஆகிறது. இந்த வாரிசுச் சான்றிதழ் சொத்துக்கள் குறித்த நடைமுறைகளுக்கே பெரும்பாலும் அனைவருக்கும் தேவைப்படுவதால், இது இன்றியமையாத சான்றிதழாகக் கருதப்படுகிறது.
வட்டாட்சியரின் பங்கு
வட்டாட்சியர் வழங்கும் வாரிசுச் சான்றிதழில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தகவல்களுக்கும் வட்டாட்சியரே முழுப் பொறுப்பு ஆவார். வாரிசுதாரர்களில் எவரேனும் ஒருவர் பெயர் விட்டுப்போயிருந்தாலோ அது பின்னாளில் ஒரு பிரச்சினையானாலோ அதற்கு வட்டாட்சியரே முழுப் பொறுப்பு ஆவார். எனவேதான் வட்டாட்சியர்கள் இச்சான்றிதழ் அளிப்பதில் அதிகக் கவனம் செலுத்துகின்றனர்.
வாரிசு சான்றிதழ் விண்ணப்பப்படிவம் எங்கு கிடைக்கும்?
வாரிசுச் சான்றிதழ் விண்ணப்பப் படிவம் வட்டாட்சியர் அலுவலகங்களில் அருகில் உள்ள ஜெராக்ஸ் கடைகளில் கிடைக்கிறது. இணைய தளத்தில் கீழ்காணும் முகவரிக்குச் சென்றும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். 
இருந்தாலும், அந்த விண்ணப்பத்தில் உள்ள வாரிசுகள் பட்டியலை மட்டும் டைப்பிங் செய்து இணைப்பது நல்லது. 
வாரிசுச் சான்றிதழ்களில் செய்ய வேண்டிய மாற்றம் என்ன?
இப்போது உள்ள வாரிசுச் சான்றிதழுக்கான விண்ணப்பப் படிவத்தில் முதல் நிலை வாரிசுகளின் பெயர்கள் மட்டும் இடம் பெறுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில் இது  குழப்பத்தை விளைவிக்கும். எனவே இறந்தவர்களின் வாரிசுகளில் முதல்நிலை வாரிசுகள், இரண்டாம் நிலை வாரிசுகள் மற்றும் மூன்றாம் நிலை வாரிசுகள் என அனைத்துத் தகவல்களும் இடம்பெறச் செய்ய வேண்டும்.
****************************** அன்புடன் செல்வம் பழனிச்சாமி - 07.01.2018 

No comments:

Post a Comment